இந்த வார கலாரசிகன்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திப்பதற்கு தில்லி சென்றிருந்தேன்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திப்பதற்கு தில்லி சென்றிருந்தேன். தில்லியில் தங்கியிருந்தபோது, பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான
இல.கணேசனின் 162, செளத் அவின்யூ இல்லத்தில் அவருடன் அளவளாவிக் கொண்டிருந்தேன். தமிழ் மீதும், தமிழ் இலக்கியத்தின் மீதும் தாளாப் பற்று கொண்டவர் இல.கணேசன். தமிழ், தேசியம், ஆன்மிகம் ஆகிய மூன்றிலும் முழுமையான ஈடுபாடு உடையவர். அவர் நடத்தும்
"பொற்றாமரை' என்கிற
இலக்கிய அமைப்பு தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து அவர் சார்ந்த பாரதிய ஜனதா கட்சி அவரை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்திருப்பது தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் மறைமுகமான வரப்பிரசாதம். நாமெல்லாம் தமிழின் பெருமையையும், தமிழனின் பெருமையையும் நமக்கு நாமே பேசிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இல. கணேசன் முழுக்க முழுக்க இந்தி பேசும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் தமிழை வடவர் மத்தியில் பரப்ப புதியதொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். மகாகவி பாரதி சொன்ன, "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பதை நனவாக்கிக் கொண்டிருக்கிறார் அவர்.
தமிழகத்திலிருந்து நன்றாக இந்தி பேசத் தெரிந்த, அதே நேரத்தில் தமிழ் இலக்கியத்திலும் புலமைபெற்ற, அறிஞர்கள் சிலரை அடையாளம் கண்டு, அவர்களை மத்தியப் பிரதேசத் தலைநகராம் போபாலுக்கு அழைத்துச் செல்ல இருக்கிறார். அங்கே செயல்படும் போபால் தமிழ்ச் சங்கத்தின் உதவியுடன் கூட்டங்களை நடத்தி, அதில் தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம், கம்பன், இளங்கோ, பாரதி என்று தமிழ் குறித்து இந்தியில் அவர்களை உரையாற்றச் செய்யும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
போபாலில் வாழும், இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமல்லாமல், தமிழை எழுதப் படிக்கத் தெரியாத, போபாலிலேயே பிறந்து வளர்ந்த இரண்டாவது, மூன்றாவது தலைமுறை தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் இலக்கியத்தின் அருமை பெருமைகளையும் அதன்மூலம் எடுத்துரைக்க முற்பட்டிருக்கிறார். எத்துணை அருமையான தமிழ்ப்பணி இது.
"மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை' என்று பாரதி சொன்னானே... அதை, தமிழ் குறித்துப் பேசாத, தெரியாத இந்தி பேசும் மாநிலத்தாருக்குத் தமிழின் அருமை பெருமைகளை அவர்களது தாய்மொழியான இந்தியில் எடுத்துரைக்க முற்பட்டிருக்கும் இல. கணேசனின் முயற்சி சிரக்கம்பம் செய்து பாராட்டத்தக்கது.
தமிழ் வளர்ச்சித் துறையும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழகத்திற்கு வெளியே உள்ள தமிழ்ச் சங்கங்களும், இலக்கிய அமைப்புகளும் இதையே முன்னுதாரணமாகக் கொண்டு பிற மொழிகளில் தமிழ் மொழியின் மகத்துவத்தை மனித இனம் மேம்பட எடுத்துரைத்தல் வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள். இல. கணேசனின் தமிழ்ப் பற்றுக்குத் தலைவணங்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.


ஜென் தத்துவத்தைப் பற்றிய எனது தேடல் இன்னும் முடிந்தபாடில்லை. அது குறித்து எந்தப் புத்தகம் வந்தாலும் அதை நான் படிக்கத் தவறுவதில்லை. ஆனாலும்கூட, "ஜென் தத்துவத்தைப் பற்றிக் கூறுங்களேன்' என்று என்னிடம் யாராவது கேட்டால், அலங்கமலங்க முழிக்கத்தான் முடியுமே தவிர, விளக்கிச் சொல்லிவிடும் ஞானம் எனக்கு இன்னும் வாய்த்தபாடில்லை.
கவிஞர் புவியரசு எழுதியிருக்கும் "ஜென் புத்தர் தாயுமானவர்' என்கிற புத்தகத்தை ஒரு முறைக்கு இரு முறை படித்துவிட்டேன். அதில் பல பகுதிகளை அடிக்கோடிட்டும் வைத்திருக்கிறேன். ஜென் தத்துவம் குறித்து புரிந்துகொண்டேனா என்று கேட்டால் சொல்ல முடியவில்லை.
ஜென் தத்துவம் என்பது இந்தியாவில் இந்த அளவுக்குப் பிரபலமானதற்கு ஓஷோதான் காரணம். உலகம் போற்றும் ஜென் கதைகள் "போதி தருமர்' என்ற காஞ்சிபுரத்துத் தமிழரால் உருவாக்கப்பட்ட ஜென் தத்துவத்தின் விகசிப்புதான் என்கிறார் கவிஞர் புவியரசு.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தியானமும் மன ஒருமுகப்படுத்துதலும்தான் சீனாவில் "ஸ்யான்' என்று அழைக்கப்படுகிறது. அங்கிருந்து ஜப்பானுக்குச் சென்றபோது ஸ்யான் "ùஸன்' ஆயிற்று. இப்போது அதுவே "ஜென்' என்று உலகமெல்லாம் அறியப்படுகிறது.
கன்பூசியஸ் தத்துவத்தின் எதார்த்தவாதம், தாவோவின் இயற்கை நேயம், புத்தரின் தியானம் ஆகியவற்றின் கலவையில் தோன்றிய இரசவாதமாக ஜென் திகழ்ந்தாலும், இது ஒரு சிந்தனையின் சிகரம் என்றுதான் சொல்ல வேண்டும். ஜென் ஞானி எந்தத் தத்துவத்தையும் உபதேசிப்பதே இல்லை. சீடன் ஞானம் பெற அவர் கதவு திறந்து வைக்கிறார், அவ்வளவே.
கவிஞர் புவியரசு எழுதியிருக்கும் "ஜென் புத்தர் தாயுமானவர்' புத்தகம் சற்று வித்தியாசமானது. ஒன்றன்பின் ஒன்றாக ஜென் கதைகளைக் கூறிச் செல்வதல்ல. புத்தர், தாயுமானவர், திருமூலர், திருவள்ளுவர், பாரதியார், வள்ளலார் என்று ஜென் உபதேசங்களுக்கு ஈடான இந்த சித்தபுருஷர்களின் கவிதைகளுடன் இணைத்து அவர் விளக்க முற்பட்டிருக்கும் பாணியே அலாதியானது.
வானொலியில் கவிஞர் புவியரசு தொடர்ந்து நிகழ்த்திய உரையின் தொகுப்புதான் இது. ஜென் தத்துவம் பற்றிய தேடல் உங்களுக்கு இருக்கிறதா? கட்டாயமாக நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.


பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசனை தில்லியில் சந்தித்தது குறித்து குறிப்பிட்டிருந்தேன். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, பார்த்திபன் என்கிற கவிஞர் எழுதிய கவிதை ஒன்றை பேச்சுவாக்கில் குறிப்பிட்டார். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் ஆலயங்களில் அறங்காவலர்களாக நியமிக்கப்படுவதை நையாண்டி செய்து எழுதப்பட்ட அந்தக் கவிதையை அவர் கூறியபோது, சிரித்துவிட்டேன். அந்தக் கவிதை இதுதான்:

நாங்கள் அறங்காவலர்கள்
ஆனாலும் நாத்திகர்கள்
அதனால்தான்
ஆலயத்துக்கு வந்தாலும்
உண்டியலுடன் நின்றுவிடுகிறோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com