தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை!

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை!

மனிதனுடைய சிரசிலுள்ள உச்சிக்குழி முதல் உண்ணாக்கு வரை நீண்டுள்ள நுண்ணிய துவாரத்திற்குப் "பிரமரந்திரம்' என்று பெயர். நெற்றியில் இரு புருவங்களின் நடுவிலுள்ள ஆக்ஞேயம் என்ற இடத்திலிருந்து பிரமரந்திரம் எட்டு நிலைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை: 1. வெளிப்பாழ், 2.ஒளிப்பாழ், 3. வெளியொளிப்பாழ், 4. நிர்க்குணத்தின்பாழ், 5. அன்னமயகோசம், 6. பிராணமய கோசம், 7. மனோமய கோசம்
(துரியம்), 8. விஞ்ஞானமய கோசம் (துரியாதீதம்).
ஏழாவது நிலையாகிய துரியத்தில் மனிதனின் சூக்கும சரீரம் விளங்குகின்றது. அதற்கு மேலேயுள்ள துரியாதீதம் என்ற எட்டாவது நிலையில் ஜீவ சொருபம் விளங்குகின்றது. ""துரியமும் இறந்த சுடரே போற்றி'' என்பது திருவாசகம் (போற்றித் திருஅகவல், வரி.195).
ஞானத்தவம் செய்வோர் தம்முடைய சூக்கும சரீரத்தைத் தாமே காணும் பேறு பெறுவர் என்பது ஞானிகளின் அனுபவ வாக்காகும். மனிதராய்ப் பிறந்தோர் அனைவரும் ஞானத்தவம் செய்வது தலையாய கடமை என்பதைத் திருமூலர் கீழ்வருமாறு கூறியுள்ளார்:

""தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே'' (திரு.355)

மனிதன் ஞானத்தவம் செய்து தன்னையே தான் அறிவதற்கு ஒரு கேடுமில்லை. முயற்சி எடுக்காது தன்னைத் தானறியாமல் மாண்டு போகிறான். தன்னையே தான் காணக்கூடிய ஞான மார்க்கத்தை அறிந்த பின், தன்னை அருளோடு இயக்குவிக்கும் ஜீவனை அர்ச்சிக்கும் நிலையில் சூக்கும சரீரம் விளங்கும் என்பது இதன் பொருள்.
இப்பொருள் பற்றி, திருவள்ளுவர் கூறும் சான்றுகளைக் காண்போம்:

1. ""தானென்ன பொருள் தன்னைத் தானேயறி
மோன மந்திரச் சாரம் உண்டதில் தெரிவாயே''
(திருவள்ளுவர், மூப்பு-11:6)

பிரம்மரந்திரத்தினுள்ளே துரியம் என்ற நிலையில் விளங்கும் சூக்கும சரீரத்தை அறிவாய். ஞானத்தவம் செய்து முத்தியடையும் உபாயம் அதனிடம்தான் உள்ளது என்பது இதன் பொருள்.

2. ""தன்னைத் தானுமறிந்து சடத்தைச் சுத்திகள் செய்து
அன்னை அம்பிகைப் பாதம் அவ்வும் உவ்வால் அறிந்து''
(திருவள்ளுவர், ஞானவெட்டியான், 923)

"தன்னுடைய சூக்கும சரீரத்தைத் தானறிந்து அதை ஞானத் தவத்தால் பரிசுத்தப்படுத்தி, ஜீவ சொரூபத்தைச் சுழுமுனையால் அறிந்து' என்பது இதன் பொருள். தன்னைத் தானறிதல் என்ற நெறி, சைவ சமயத்திற்கும் உட்பட்ட நெறியேயாகும் என்று அப்பரடிகள் கூறுவதைக் கேட்போம்:

""தன்னில் தன்னை அறியும் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறியில னாயிடில்
தன்னில் தன்னை சார்தற் கரியவனே'' (பொது-29)

"தன்னுடைய உடம்புக்குள்ளே விளங்கும் சூக்கும சரீரத்தை அறிபவன் உயர்ந்தோனாவான். தன்னில் தன்னை அறிந்தால் ஜீவனோடு ஒருங்கிணைந்து முத்தி நிலையை அடைவான் - தன்னில் தன்னை அறியானாகில், ஜீவ சொருபத்தைச் சார்ந்து முத்தி அடைவது அரிதாகும்' என்பது இப்பாட்டின் பொருள்.
ஆறாவது அறிவாகிய சூக்கும சரீரம் எவ்வாறு தோன்றும் என்று அனுபவத்தால் கண்ட ஞானிகள் கூறும் சான்றுகளைக் கேட்போம்:

உன்முகம் போல் கண்ணாடிக்குள்
ஒருமுகம் கண்டாற்போல்
சின்மய வடிவின் சாயை
சித்துபோல் புத்தி தோன்றும்
நின்மனோ விருத்தி அந்த
நிழல் வழியாய் உலவும்
தன்ம நன்மகனே இத்தைத்
தானன்றோ ஞான மென்பார்
(கைவல்ய நவநீதம், 2:11)

"உன்னுடைய உருவத்தைக் கண்ணாடியில் காண்பதைப் போன்று வியக்கத்தக்க வகையில் உன்னுடைய சூக்கும சரீரம் தோற்றமளிக்கும். உன்னுடைய ஞானத்தவப் பலன் அந்த நிழல் உருவத்தின் வழியாக உலவும். தன்மையுடைய நல்ல மாணாக்கனே! இவ்வாறு தன்னைத்தானே காண்பதுதான் ஆன்றோர்களால் ஞானம் என்று போற்றப்படும்' என்பது இதன் பொருள்.

""கண்ணாடி தன்னில் ஒளிபோல் உடம்பதனுள்
உண்ணாடி நின்ற ஒளி'' (ஒளவைக் குறள்,231)

""கண்ணாடி முகம் போலக் காணும் பாரு''
(அகத்தியர் பரிபாஷைத் திரட்டு, 5:65)

""என்னையே நானறிய இருவினையும் ஈடழித்துத்
தன்னை அறியத் தலம் எனக்குச் சொன்னான்டி''
(பட்டினத்தார், அருள் புலம்பல்,22)

"முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் நான் செய்த பாவங்களை அறவே அழிக்கக் கூடியதாகிய சூக்கும சரீரத்தை நான் அறிவதற்குரிய இடத்தை என் குருநாதர் எனக்குக் கூறினார்'.

""தன்னை அறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்
தன்னை அறியாதவரே தன்னைக் காட்டுவார்''
(பாம்பாட்டிச் சித்தர், 95)

"தன்னைத் தானறிந்து ஞானத்தவம் செய்வோர் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் மறைவாக இருப்பார். தன்னை அறியாதவரே தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வார்' என்பது இதன் பொருள்.

""பாரப்பா உன்னைப் போல் மைந்தா நீயும்
பாரடா பூரணத்தில் மணக்கண் நாட்டி
ஆரப்பா பூரணத்தில் அறிவு தோணும்
ஐயையா உந்தனிடம் அறிவே பேசும்''
(சுப்பிரமணியர் ஞானம் 500:262)

இதன் பொருளாவது: "நெற்றி நடுநிலையில் மனக்கண் நாட்டினால் ஆறாவது அறிவாகிய சூக்கும சரீரம் வெளியே வந்து தோன்றும். உன்னைப் போன்ற உருவமுடைய அதை நீ பார்ப்பாயாக மகனே! சூக்கும சரீரம் உன்னிடம்
பேசுமடா'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com