பறம்பு மலையில் இராவணன்

குறிஞ்சிக் கபிலர்' தன்னுடைய பாடல்களில் காதல் உணர்வுகளைப் புலப்படுத்த அவர் பயன்படுத்தும் கவிநயமும் கற்பனையும் சிறப்பு மிக்கவை. அப்படி ஒரு பாடலில் புராணக்கதை ஒன்றும் அடங்கியிருப்பது வியப்பு!
பறம்பு மலையில் இராவணன்

குறிஞ்சிக் கபிலர்' தன்னுடைய பாடல்களில் காதல் உணர்வுகளைப் புலப்படுத்த அவர் பயன்படுத்தும் கவிநயமும் கற்பனையும் சிறப்பு மிக்கவை. அப்படி ஒரு பாடலில் புராணக்கதை ஒன்றும் அடங்கியிருப்பது வியப்பு!
இராமகாதைப் பதிவுகள் சங்ககாலப் பாடற் குறிப்புகளில் இலைமறை காயாகத் திகழ்கின்றன. கபிலரோ இராவணனின் கதையை ஓர் உவமையின் வாயிலாக எடுத்துக் காட்டுகிறார்.
இருபது கரங்களாலும் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க விரும்பிய இராவணனின் தீவிர முயற்சியால் அம்மலை அதிர்ந்து குலுங்கியது. இதனால், அச்சமுற்ற உமாதேவி இறைவனை வேண்ட, சிவபெருமான் தனது காலின் பெருவிரலால் ஓர் அழுத்தம் தர, இராவணன் மலையின் அடியில் நசுங்கி மாட்டிக்கொண்டான் என்பது புராணக்கதை. இந்
நிகழ்வை, கபிலர் தான் பாடும் கலித்தொகைப் பாடலுக்கான உவமையாகப் பயன்படுத்தி ஒரு குறுங்காவியமாக்கி இருக்கிறார்.

"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல' (கலி.38)

தோழி கூற்றில் வரும் உவமையாக அமைகிறது இந்த இராவணன் கதை. தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாது காலம் தாழ்த்திக் களவிலேயே முயங்கிக் கிடக்கிற தலைவனைப் பார்த்துத் தோழி அவனுக்கு அறிவுரை கூறுகிறாள்.
"வேங்கை மரத்தைப் பார்த்துப் புலி என்று கருதி அதன்மீது பாய்ந்த மதயானை தனது தந்தங்களை மீட்டு எடுக்க மாட்டாமல் சிக்கித் தவிப்பது} இராவணன் இமயமலையைப் பெயர்க்க முயன்ற செயலைப் போன்றது. அத்தகு மதயானைகள் நிறைந்த மலை நாடனே' எனக் குறிப்பிட்டுத் தோழி தரும் அறிவுரைகள் மற்றொரு காவியத்துக்குச் சான்று.
இராவணன் கயிலை பெயர்த்தது, மதயானை வேங்கை தூர்த்தது, தலைவன் களவு ஆழ்ந்தது எனும் மூன்று நிகழ்வுகளையும் ஒரு கோட்டில் நிறுத்தும் கபிலரின் கவித்திறன் வியப்பினைத் தருகிறது. இதற்கும் பறம்புக்கும் இன்னொரு தொடர்புமுண்டு. சங்ககாலத்துப் பறம்புமலை என்று வழங்கப்பட்ட பாரியின்மலை பக்தி இலக்கியக் காலத்தில் "திருக்கொடுங்குன்றம்' என்னும் பெயரில் அழைக்கப்
பட்டது.
திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை அவர் புகழும்போது, இயல்பாகவே அவருக்கு இராவணனின் நினைவு வருகிறது. எட்டாம் பாடலில் மறக்காமல் அதே காட்சியை வடித்துக் காட்டுகிறார் அவர்.

"முட்டாமுது கரியின்னின முதுவேய்களை முனிந்து
குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்
ஒட்டாவரக் கன்றன்முடி யொருபஃதவை யுடனே
பிட்டானவ னுமையாளொடு மேவும்பெரு நகரே'

திருக்கொடுங்குன்றத்துத் திருத்தலத்துத் தேவாரப் பாடலில் கபிலர் கண்ட அதே காட்சி வேறொரு பின்புலத்தில் அழகாகப் புலப்படுகிறது. இங்கும் இராவணனும் யானையும் உவமையாகிறார்கள்.
முற்றிய மூங்கில்களைத் தின்று அலுத்துப்போன யானையினங்கள் மலையிலிருந்து இறங்கி, ஆழமிக்க சுனைகளில் இறங்கி நீருள் மூழ்கியாடுகின்றன. தன்மீது பக்திவெறி கொண்டு மனம்பொறாது கயிலை மலையை எடுக்கத் துணிந்த அரக்கனாகிய இராவணனின் பத்துத் தலைகளையும் அடர்த்து ஒடித்தவனாகிய சிவபெருமான் உமா தேவியோடு மேவும் பெருநகர் என்று குறிப்பிட்டுத் திருக்கொடுங்குன்றத்தைப் போற்றுகிறார்.
கபிலர் கண்ட பறம்புக் காட்சியும் அறுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு திருஞானசம்பந்தர் கண்ட திருக்கொடுங்குன்றக் காட்சியும் ஒன்றுபோலவே இருப்பது சுவையான பதிவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com