கவி பாடலாம் வாங்க - 1

காரிகை கற்றுக் கவி பாடுவதிலும், பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே'' என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? காரிகையென்பது கவியின் இலக்கணத்தைச் சொல்லும் நூல்.
கவி பாடலாம் வாங்க - 1

காரிகை கற்றுக் கவி பாடுவதிலும், பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே'' என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? காரிகையென்பது கவியின் இலக்கணத்தைச் சொல்லும் நூல். அதன் முழுப் பெயர் யாப்பருங்கலக் காரிகை. யாப்பு என்பது கவியைக் குறிக்கும் சொல். யாப்பு என்னும் கடலைக் கடக்க அது ஒரு கலத்தைப் போல, கப்பலைப் போல உதவுமாம்.
மேலே சொன்ன பழமொழி ஏன் வந்தது என்று பார்க்கலாம். கவி பாடுவது என்பது கருவிலே வர வேண்டிய பாக்கியம். எல்லோருமே கவி பாட முடியாது. எதுகை, மோனை என்று இலக்கணங்களைக் கற்றுக்கொண்ட மாத்திரத்தில் கவி தாராளமாகப் பாட வந்துவிடாது. கீற்று முடைகிற மாதிரி கவியை முடைய முடியாது. இந்த உண்மையைத்தான் அந்தப் பழமொழி சொல்கிறது.
ஆனால், இன்னாருக்குத்தான் பிறப்பிலே கவி பாடும் திறமை அமைந்திருக்கிறது என்பது எப்படித் தெரியும்? ஏதோ ஆசையினால் நானும் பாடுகிறேன் என்று ஆரம்பித்து, வாய்ப்பாகக் கிடைத்தால் நல்ல கருவியாகப் பாடுகிறார்கள். இல்லையானால் இதற்கும் நமக்கும் வெகு தூரம் என்று விட்டுவிடுகிறார்கள். முயன்று பார்த்தால்தான் யாருக்குக் கவி வரும், யாருக்கு வராது என்று தெரிய வரும்.
ஆகவே, கவி பாடிப் பெயர் பெறுவது என்பது எல்லோருக்கும் நிறைவேறும் காரியம் அல்லவானாலும், கவி பாட முயற்சி பண்ணுவதற்கு யாவருக்குமே உரிமை உண்டு. வெற்றியோ, தோல்வியோ அவரவர்களின் திறமையைப் பொறுத்தது.
கவிதை கவிதையாவது அதில் உள்ள பொருள் சிறப்பினாலேதான். பொருளின் சிறப்போடு அதை சொல்லியிருக்கும் பாணியிலும் அழகு இருக்க வேண்டும். உரைநடையிலும் அதே கருத்தை அதே அழகோடு சொல்லிவிடலாம். ஆனால், அது கவிதையாகாது; உரைச்செய்யுள் அல்லது வசன கவிதை என்று சொல்லிக் கொள்ளலாம். 
கவிதைக்குத் தனி உருவம் உண்டு. அந்த உருவம் ஓசையினால் அமைவது. தமிழ்க் கவிதை இசையோடு கலந்தது. ஆகையால், தமிழ்க் கவிதையை வாய்விட்டுப் பாடி அதன் ஓசை நயத்தை உணர வேண்டும். தமிழ்க் கவிதைப் படித்துப் பார்த்தால் அதன் பொருளையும், பிற அழகுகளையும் உணரலாம். ஆனால் ஓசையின்பத்தைத் தெளிவாக உணர முடியாது. 
தமிழில் கவி பாட வேண்டுமென்று முயல்கிறவர்கள் பாட்டைப் பாடிப் பழக வேண்டும். ஒவ்வொரு பாட்டுக்கும் ஓர் ஓசை அமைதி இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கவியையும் கேட்டுக் கேட்டு வாயாரப் பாடிப் பாடி ஓசையுணர வேண்டும். இப்படிக் கேட்ட பழக்கத்தால் சிலர் விருத்தம் முதலிய சில கவிதைகளைப் பாடுவார்கள். இலக்கணம் கேட்டால் தெரியாது. எதுகை, மோனை இரண்டையும் தெரிந்துகொண்டு பாடுவார்கள். பாட்டு, பிழை இல்லாமல் இருக்கும். ராகம் சட்டென்று நினைவுக்கு வர அந்த ராகத்தில் அமைந்த கீர்த்தனையை நினைத்துக் கொள்வது, முறைப்படி சங்கீத சிட்சை இல்லாதவர்களுக்கு வழக்கம். அதுபோல இலக்கணம் தெரியாவிட்டாலும், ஏதாவது, அந்த மெட்டில் தாமே பாடுகிறவர்கள் சிலர். 
நல்ல கவிதையை நன்றாக அனுபவிக்க முடியும்; ராக லட்சணம் தெரிந்தவன் சங்கீதத்தை மற்றவர்களைவிட நன்றாக அனுபவிப்பது போல அனுபவிக்கலாம். எதுகை, மோனை அழகையும், ஓசையினிமையையும், யாப்புக்குரிய இலக்கணங்கள் அமைந்திருக்கும் சிறப்பையும் உணர்ந்து இன்புறலாம்; சந்த இன்பம், ஓசையின்பம், தொடைநயம் என்று வேறு வேறு வகையாகச் சொல்லும் அழகுகள் இன்ன என்பதைத் தெரிந்துகொண்டு மகிழ்ச்சி அடையலாம்.
யாப்பிலக்கணத்தை முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டுமானால் ஓர் ஆசிரியரிடம் நேரே இருந்து பாடம் கேட்க வேண்டும். ஆனால், எதற்கும் எளிதான முறை வந்துவிட்ட காலம் இது. ஆகையால் சம்பிரதாய முறைப்படி கற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு ஓர் அளவு கவிபாடுவது எப்படி என்பதைச் சில கட்டுரைகளால் சொல்லலாம் என்று எண்ணுகிறேன். என்னுடைய அனுபவத்தில், இப்படிச் சொன்னால் படிப்படியாக விளங்கும் என்று உணர்ந்த ஒரு புது வழியைப் பின்பற்றி இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.

எதுகை
தமிழ்ச் செய்யுளுக்கே உரிய அழகு எதுகை என்பது. அதை ரைம் (தஏவஙஉ) என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். மற்றப் பாஷைகளிலும் எதுகை உண்டு. ஆனால், தமிழில் அடியின் ஆரம்பத்தில் எதுகை இருக்கும். இதுதான் தமிழுக்கே சிறப்பாக அமைந்தது. எதுகை, மோனை என்ற இரண்டும் பாட்டுக்கு அழகு தருபவை. அவை இரண்டும் ஓசை இனிமையை உண்டாக்குபவை. எகனை, மொகனை என்று நாடோடியாக இவற்றைச் சேர்த்துச் சொல்வார்கள். பேசுகிறபோதுகூட இப்போது எதுகையும் மோனையையும் இணைக்கிறார்கள். அடுக்கு மொழிக்கு இப்போது மேடைப் பேச்சிலும் சினிமாப் பேச்சிலும் ஒரு மோகம் உண்டாகியிருக்கிறது. அடுக்கு என்பது மோனை.
ஒவ்வோர் அடியின் ஆரம்பத்திலும் எதுகை இருப்பது தமிழ்ச் செய்யுளின் இயல்பு. அடியை வேறு பிரித்து அறிவதற்கு இந்த எதுகை துணையாக இருக்கிறது. அகவல், கலிவெண்பா, பெரும்பாலான கலிப்பாக்கள், சில வகை வெண்பாக்கள் இவற்றையன்றி மற்றப் பாடல்களில் பெரும்பாலானவை நான்கு அடிகளால் ஆன பாடல்களே, மிகவும் பெரிய பாடல்களாகத் தோன்றும். திருப்புகழ்ப் பாடல்கூட நான்கே அடிகளால் ஆனவை. ஒரே அடி, மடக்கி மடக்கி நீளமாக வருவதால் பல வரிகளால் இருக்கிறது. வரி வேறு; அடி வேறு. அடிகளை எதுகையைக் கொண்டு அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.
இரண்டாவது எழுத்து ஒரே மாதிரி அமைவதை எதுகை என்று சொல்வார்கள். "இரண்டாம் எழுத்து ஒன்றுவது எதுகை' என்று இலக்கண முறையில் சொல்வது வழக்கம். இரண்டாம் எழுத்துக்குப் பின்னும் சில எழுத்துக்கள் ஒரே மாதிரி இருந்தால் ஓசை நயமாக இருக்கும். கடைசிப் பட்சமாக இரண்டாம் எழுத்தாவது ஒன்றாக இருக்க வேண்டும்.

"கந்தன் திருவடி
நந்தந் தலைமிசை
வந்தன் புடனுறின்
பந்தங் கழியுமே'

இந்தப் பாட்டில் ஒவ்வோர் அடியின் ஆரம்பத்திலும் இரண்டு, மூன்றாவது எழுத்துக்களாக "ந்த' என்பவை உள்ளன. கண்ணன், வண்ணன், அண்ணன், திண்ணன் என்று நான்கு அடியிலும் முதலில் சொற்கள் வந்தனவென்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது மூன்று எழுத்துக்கள் ஒரே மாதிரி வரும்.

"உலகம் யாவையும் தாமுள வாக்கலு
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
கலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே'

இந்தக் கம்பராமாயணப் பாட்டிலே ல, லை என்ற இரண்டும் எதுகையாக வந்திருக்கின்றன. இப்படியே ல, லி, லு, லெ, லொ ஆகிய எழுத்துக்களும் வரலாம். குறிலாக இருந்தால் சிறப்பு. லை என்பது நெடிலானாலும் லய் என்பது போல ஒலிப்பதால் அதுவும் குறிலைப் போலவே அமையும்.
இரண்டாவது எழுத்து ஒன்றாக இருப்பதோடு முதல் எழுத்துப் பற்றியும் ஒன்றை அவசியமாகக் கவனிக்க வேண்டும். பலர் இதனைக் கவனிக்காமல் பிழை செய்கிறார்கள்.
பட்டு என்பதற்குக் கட்டு, குட்டு, கிட்டு, பிட்டு என்பவை எதுகையாக வரும். ஆனால் பாட்டு என்பது எதுகை ஆகாது. பாட்டு என்பதற்குக் காட்டு, நீட்டு, ஊட்டு என்பவை எதுகையாக வருமேயன்றிக் கட்டு, தட்டு என்பவை வருவதில்லை. முதலெழுத்துக் குறிலாக இருந்தால் எதுகையாக வருவதிலும் முதலெழுத்துக் குறிலாக இருக்க வேண்டும். அப்படியே நெட்டெழுத்து முதலாக உடைய சொல்லுக்கு நெட்டெழுத்தை முதலாக உடைய சொல்லே எதுகையாக வரும்.

"காட்டினிற் குமுறும் கூகை கவின்பெறக் கூட்டி லுய்த்து
வீட்டினிற் பயிலும் கிள்ளை'

இந்த இரண்டடிகளிலும் காட்டினிற், வீட்டினிற் என்று எதுகையாக அமைந்த சொற்களில் முதல் எழுத்தாக உள்ளவை இரண்டும் நெட்டெழுத்தாக இருப்பதைக் காண்க.

"பாம்பினைக் கண்ட போது
பயத்தினால் நடுங்கும் பேதை
கம்பினை எடுப்பா னோசொல்
கடுகியே ஓடு வானே'

என்று "ம்பினை' என்ற மூன்று எழுத்துக்களும் ஒன்றி இருப்பதனால் எதுகை அமைந்துவிட்டதாக எண்ணக்கூடாது. பா - என்ற நெட்டெழுத்தை முதலாக உடைய சொல்லுக்குக் க - என்ற குற்றெழுத்தை முதலாக உடைய சொல் எதுகையாக வராது. "காம்பினை எடுப்பானோ சொல்' - என்று திருத்தினால் எதுகையாக அமைந்துவிடும். (காம்பு-மூங்கில்).

கி.வா.ஜகந்நாதனின் "கவி பாடலாம் வாங்க' நூலிலிருந்து....

(தொடர்ந்து பாடுவோம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com