இந்த வார கலாரசிகன்

நாளை மகாகவி பாரதியாரின் பிறந்த தினம். கடந்த வாரம் எழுதியிருந்தது போல, எட்டயபுரத்தில் பாரதியாரின் இல்லத்தில் காலை 9 மணிக்கு பல்வேறு ஊர்களிலும் உள்ள பாரதி அன்பர்கள் ஒன்றுகூட
இந்த வார கலாரசிகன்

நாளை மகாகவி பாரதியாரின் பிறந்த தினம். கடந்த வாரம் எழுதியிருந்ததுபோல, எட்டயபுரத்தில் பாரதியாரின் இல்லத்தில் காலை 9 மணிக்கு பல்வேறு ஊர்களிலும் உள்ள பாரதி அன்பர்கள் ஒன்றுகூட இருக்கிறோம். தமிழ் அமைப்புகள் பல கலந்துகொள்ள வருவதாகத் தெரிவித்திருக்கின்றன. சிங்கப்பூரிலிருந்து "தமிழ்நேசன்' முஸ்தபா தானும் வர இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
நான் மீண்டும் வலியுறுத்த விரும்புவதெல்லாம் இதுதான். கர்நாடக சங்கீத ரசிகர்கள் தியாகராஜ ஆராதனைக்குத் திருவையாறில் கூடுவதுபோல, தமிழ் அமைப்புகளும் தமிழை நேசிப்பவர்களும் ஆண்டுதோறும் டிசம்பர் 11-ஆம் தேதி எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் இல்லத்தில் கூடி அவரது பிறந்தநாளைத் தமிழுக்குத் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்பதுதான். நாளை காலையில் எட்டயபுரத்தில் கூடுவோம்!

டிசம்பர் 1ஆம் தேதி , "கலைமாமணி' விக்கிரமனின் "இலக்கியப் பீடம்' விழா தொடங்க சற்றுத் தாமதமாகும் என்று தெரிந்ததும், அருகிலிருந்த தி.நகர் சாரங்கபாணி தெருவுக்குப் போய் மூத்த எழுத்தாளர் பரணீதரனைப் பார்த்துவிட்டு வர வேண்டும் என்று மனது உத்தரவிட்டது.
வருகிற கிறிஸ்துமஸ் தினத்தில் அகவை 92 முடிந்து 93-ஐ எட்டுகிறார் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கார்ட்டூனிஸ்ட் என்று பன்முகத்தன்மை வாய்ந்த பரணீதரன் என்று பரவலாக அறியப்படும் டி.எஸ். ஸ்ரீதரன். பயணக் கட்டுரைகள், ஆன்மிகக் கட்டுரைகள் எழுதும்போது அவர் பரணீதரன் . கார்ட்டூன் வரையும்போது ஸ்ரீதர். நாடகங்கள் எழுதும்போது மெரீனா. ஒரு காலத்தில் "ஆனந்த விகடன்' இதழின் விற்பனைக்கு இவரது பங்களிப்பு மிக முக்கியமான காரணமாக இருந்தது என்பது எங்கள் தலைமுறையினருக்குத் தெரியும்.
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த "அருணாசல மகிமை'தான் பள்ளி மாணவனாக இருந்த எனக்கு பரணீதரனை அறிமுகப்படுத்தியது. இமயமலைக்குச் சென்று பத்ரிநாத், கேதார்நாத் ஆலயங்கள் குறித்து அவர் எழுதிய "பத்ரி கேதார் யாத்திரை', காசி, ராமேஸ்வரம் யாத்திரை, ஆலய தரிசனம் உள்ளிட்டவைதான் இளம் வயதிலேயே என்னில் ஆன்மிக நாட்டத்தை ஏற்படுத்தியது என்பதை நான் இப்போது உணர்கிறேன்.
காளிதாசனின் ரகுவம்சத்தையும், ஆர்.கே. நாராயணின் "கைட்', "ஸ்வாமி அண்ட் ப்ரண்ட்ஸ்' நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்த பெருமையும் பரணீதரனையே சாரும். மெரீனா என்கிற பெயரில் இவர் எழுதிய "தனிக்குடித்தனம்', "மாப்பிள்ளை முறுக்கு', "மகாத்மாவின் மனைவி', "கஸ்தூரி திலகம்' போன்றவை ஆனந்த விகடனில் தொடராகவும், மேடையில் நாடகமாகவும் பெரும் பாராட்டைப் பெற்றன.

பிரபல ஆங்கில கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் இவரது உறவினர். அவரை கார்ட்டூனிஸ்டாக அறிமுகப்படுத்தியதில் பரணீதரனுக்குப் பெரும் பங்கு உண்டு. அவரை மட்டுமா? கார்ட்டூனிஸ்டுகள் மதன், கேசவ் ஆகியோரும் இவரால் அடையாளம் காணப்பட்டவர்கள்தான்.
திருமணம் செய்து கொள்ளாத இந்தப் பன்முகத்தன்மை கொண்ட ஜாம்பவான், வயோதிகத்தால் சற்று உடல் சோர்ந்தாலும் மனம் சோராமல் இருப்பது வியப்பைத் தரவில்லை. காஞ்சிமகான் பரமாச்சாரியாரின் பூரண ஆசிபெற்றவர் என்கிற பெருமைக்குரியவராயிற்றே, அவருக்கு எப்படி மனச்சோர்வு வரும்?
வயோதிகம் வேண்டுமானால் அவரைக் கட்டிலில் முடக்கிவிட்டிருக்கலாம். ஆனால், அவரது எழுத்தின் மகிமை, 
அருணாசல மகிமை போலத் தமிழ் பேசும் நெஞ்சங்களில் எல்லாம் வியாபித்து நிற்கிறது. அவரைச் சந்தித்து ஆசி பெற்றது, நான் வாழ்நாளில் பெற்ற பெரும் பேறு...!

சென்னை மியூசிக் அகாதெமி சிற்றரங்கத்தில் டாக்டர் பிரியா இராமச்சந்திரன் எழுதிய "வாலி வதை - ஆதி கவியும் கம்ப கவியும்' என்கிற புத்தக வெளியீட்டு விழா இலங்கை ஜெயராஜின் தலைமையில் கடந்த திங்கள்கிழமை நடந்தது. டாக்டர் பிரியா இராமச்சந்திரன் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணர். மருத்துவர் ஒருவர் கம்ப காதையில் இந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவதும், புத்தகம் எழுதியிருப்பதும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதுதான் தெரிந்தது, அவர் மட்டுமல்ல, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரிலாவும் கம்பகாதையில் ஊறித் திளைத்தவர் என்பது.

புத்தக வெளியீட்டு விழாவுக்குப் பிறகு வாலி வதை குறித்து டாக்டர் முகமது ரிலாவும், டாக்டர் பிரியா இராமச்சந்திரனும் நடத்திய வாலி வதை குறித்த விவாதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுமே கம்ப காதையில் தோய்ந்திருக்கிறார்கள் என்பதும், தேர்ந்த புரிதல் உடையவர்கள் என்பதும் அவர்களது விவாதத்தில் வெளிப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யும்போதுகூட கம்பராமாயணம் கேட்டுக்கொண்டே, விவாதித்துக்கொண்டே அவர்கள் செயல்படுவார்கள் என்று டாக்டர் பிரியா இராமச்சந்திரன் கூறியது ஆச்சரியப்படுத்தியது.
"வாலி வதை - ஆதி கவியும் கம்ப கவியும்' என்கிற புத்தகத்தின் தனிச்சிறப்பு டாக்டர் பிரியா இராமச்சந்திரன், வான்மீகி சம்ஸ்கிருதத்தில் எழுதிய ராமாயணத்தையும் கம்பகாவியத்தையும் கற்றுத் தேர்ந்தவர் என்பதுதான். இரண்டு தலைசிறந்த கவிஞர்களும் வாலி வதையை எப்படி அணுகியிருக்கிறார்கள்; இருவரது பார்வையும் எங்கெல்லாம் வேறுபடுகிறது என்பதை சாமானியர்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் டாக்டர் பிரியா இராமச்சந்திரன் தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். 
வான்மீகி ராமாயணத்தில் காணப்படும் வாலி வதையில் ஆறு முடிச்சுகள் காணப்படுகின்றன. அந்த முடிச்சுகளை எல்லாம் கம்பர் தனது ராமகாதையில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து ஆதி கவியின் காவியத்தை விஞ்சுகிறான் என்பதை மிக அழகாக விளக்கியிருக்கிறார் டாக்டர் பிரியா இராமச்சந்திரன்.
வான்மீகத்தில் முரண்பட்ட இரு தண்டனைகளுக்கு ஆளாகிய வாலியை அவ்விரு தண்டனைகளுக்கு உரியவராக்கி, தனது காவிய நாயகனாகிய ராமனை வீழவிடாமல், தாங்கிப்பிடித்து அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்ததுதான் கம்பகவியின் சிறப்பு என்று முடிக்கிறார் அவர். கம்பநாட்டாழ்வாரால் "சிறியன சிந்தியாதான்' என்று புகழப்பட்ட வாலியின் பல்வேறு பரிணாமங்களை எடுத்தியம்பியிருப்பதில் "வாலி வதை - ஆதிகவியும் கம்ப கவியும்' என்கிற டாக்டர் பிரியா இராமச்சந்திரனின் புத்தகம் பாராட்டைப் பெறுகிறது.

மகாகவி பாரதி என்று சொன்னால் உடனே நினைவுக்கு வருபவர் அவரால் வாஞ்சையுடன் தம்பி என்றழைக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பர்தான். கடைசிவரை பிரம்மசாரியாகவே சென்னை சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை, குரோம்பேட்டை பகுதிகளில் வாழ்ந்து மறைந்த அந்த தேசபக்தர், பாரதியின் மறைவின்போது அவருடன் இருந்து கவனித்தவர். பாரதியாரின் பொன்னுடலைச் சுமக்கும் பெரும் பேறு பெற்றவர். நாளை பாரதியாரின் பிறந்த தினம். பாரதியார் மறைந்தபோது பரலி சு.நெல்லையப்பர் எழுதிய அஞ்சலிக் கவிதைதான் இந்த வாரக் கவிதை:

வையகத் தமர வாழ்க்கை
மாண்புடன் வாழுமாறு
தெய்விகப் புலவர் ஏறே
சிறந்த நற் கவிகள் தந்தாய்
உய்வழி கூறி நின்றாய்
உலகெலாம் போற்ற நின்றாய்
மெய்வழி காட்ட வந்த
வீரநின் நாமம் வாழி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com