கவி பாடலாம் வாங்க - 2

ஒரு குறிப்பிட்ட எழுத்து, ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் சீரின் முதலில் வந்தால் அதை மோனை என்று சொல்வார்கள். "மோனை முத்தமிழ் மும்மத மும்மொழி, யானை' என்று ஒரு புலவர் தம்மைக் கூறிக்கொண்டாராம்.
கவி பாடலாம் வாங்க - 2

ஒரு குறிப்பிட்ட எழுத்து, ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் சீரின் முதலில் வந்தால் அதை மோனை என்று சொல்வார்கள். "மோனை முத்தமிழ் மும்மத மும்மொழி, யானை' என்று ஒரு புலவர் தம்மைக் கூறிக்கொண்டாராம். அதிலிருந்து மோனைக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு உண்டென்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை என்று இலக்கண முறையில் சொல்வது வழக்கம். மோனையை "அல்லிடரேஷன்' (அககஐபஉதஅபஐஞச) என்று ஆங்கிலத்திலும், "பிராசம்' என்று வடமொழியிலும் சொல்வார்கள்.
தமிழ்ச் செய்யுளில் ஒவ்வோர் அடியினுள்ளும் மோனை வருவது அழகு தரும். பழம் பாடல்களில் மோனை இராமல் இருக்கலாம். அதைக் கொண்டு மோனையே இல்லாமல் பாடினால் என்ன என்று சிலர் கேட்பார்கள். அலங்காரம் இல்லாமல் அழகாகத் தோற்றம் அளிக்கலாம், சிறந்த அழகியாக இருந்தால். ஆனால் அவர்களும் அணி செய்து கொள்கிறார்கள். ஆகவே, மோனை இருக்கும்படி பாடுவது பாட்டின் அழகை மிகுதிப்படுத்தும். கம்பன் முதலிய பெருங்கவிஞர்களுடைய வாக்கில் மோனை மிக நன்றாக அமைந்திருப்பதைக் காணலாம்.
க- என்ற எழுத்து அடியின் முதலில் வந்தால், அந்த அடியில் பின்னும் ஓரிடத்தில் அவ்வெழுத்து மோனையாக வரும். ஆங்கிலத்தில் க- என்பதற்குக் ககரவர்க்கம் முழுவதுமே மோனையாக வரலாம். தமிழில் க -வுக்குக் க- வருவதே சிறப்பு. க, கா, கை, கெள என்ற நான்கும், ஒன்றுக்கு ஒன்று மோனையாக வரும்.

"கண்ணனைத் தொழுது நிற்கும்
கருத்துடை அன்பர் இன்னோர்' 

என்பதில் க-வுக்குக் க-வே மோனையாக வந்தது.

"கந்தனை முருக னைச் செங்
கால்பணிந் திடுவார் மேலோர்' 

என்பதில் க-வுக்குக் கா- மோனையாக வந்தது.

"கருத்தினில் வஞ்சங் கொண்டு
கைதொழு வாரை நம்பேல்' 

இதில் க-வுக்குக் கை- மோனையாக 
வந்தது.

"கழுத்தினில் வாயை வைத்துக்
கெளவிய புலியைக் கண்டான்'

இதில் ககரத்துக்குக் கெள - மோனையாக வந்தது. இவ்வாறன்றிக் க-வுக்குக் கி-யோ, மேலே சொன்ன எழுத்துக்கள் அல்லாத எழுத்துக்களோ மோனையாக வருவதில்லை.
க- என்பது உயிர்மெய் எழுத்து; க்- என்ற மெய்யோடு அ-என்ற உயிர் சேர்ந்து உண்டானது. தனி உயிராக அடிக்கு முதலில் வந்தால் தனி உயிரே மோனையாக வர வேண்டும். அந்த வகையில் அ-ஆ-ஐ-ஒள என்ற நான்கும் ஒன்றுக்கு ஒன்று மோனையாக வரும்.
உயிர் எழுத்துக்களில் மெய்யெழுத்து ஒன்றாகவே இருக்க வேண்டும்; அதனோடு சேர்ந்த உயிரெழுத்து மேலே சொன்ன மோனைக்குரிய எழுத்துக்களில் ஒன்றாகவே இருக்க வேண்டும். க-என்ற எழுத்துக்குக் க-என்பதுதான் மோனையாக வருமேயன்றிச் ச-என்பது வராது. இப்படி வரும் மோனை 
எழுத்துக்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அ-ஆ-ஐ-ஒள
க-கா-கை-கெள
ச-சா-சை-செள
த-தா-தை-தெள
ம-மா-மை-மெள

இப்படியே மற்ற எழுத்துக்களுக்கும் ஏற்றபடி நான்கு நான்கு எழுத்துக்கள் மோனையாக வரும். இவை அகரத்தோடு சேர்ந்த மோனை எழுத்துக்கள். இப்படி மூன்று தொகுதிகள் உண்டு.

அ-ஆ-ஐ-ஒள
இ-ஈ-எ-ஏ
உ-ஊ-ஒ-ஓ

உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு. அவை நாலு நாலாகப் பிரிந்து மோனையாகப் பொருந்தி வரும். தனி உயிருக்குத் தனி உயிரே மோனையாக வேண்டும் என்பதையும், ஒரு குறிப்பிட்ட மெய்மேல் ஏறிய உயிருக்கும் அதே மெய்மேல் ஏறிய உயிரே மோனையாக வரும் என்பதையும் மறக்கக் கூடாது. 
இந்தப் பொதுவான விதியோடு, மெய்யெழுத்துக்களில் சில எழுத்துக்கள் ஒன்றற்கு ஒன்று மோனையாக வரும் என்று சிறப்பு விதி ஒன்று உண்டு. ச-வுக்குத் த-வும், ஞ-வுக்கு ந-வும், ம-வுக்கு வ-வும் மோனையாக வரும். அதாவது ச்-என்ற மெய்யின் மேல் ஏறிய உயிருக்கு த்-என்று மெய்யின் மேல் ஏறிய அதே உயிரோ, மோனைப் பொருத்தமுள்ள உயிரோ வந்தால் மோனையாகும். அப்படி அமையும் போது நாலு நாலாக அமைந்த மோனைக் கூட்டம் எட்டு எட்டாகச் சில எழுத்துக்களுக்கு அமையும்.
ச-சா-சை-செள-த-தா-தை-தெள என்னும் எட்டிலும் எந்த ஒன்றுக்கும் வேறு எந்த ஒன்றும் மோனையாக வரும். ச-வுக்கு, தெள-வரலாம். 
செள-க்கு, த-வரலாம். சா-வுக்கு, தை-வரலாம். இப்படியே சி, சு என்ற இரண்டு எழுத்துக்களை முதலாக உடைய மோனைக் கூட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ம-மா-மை-மெள-வ-வா-வை-வெள என்பவை ஒரு மோனைக் கூட்டம்.

"நாடிய பொருள் கை கூடும்
ஞானமும் புகழும் உண்டாம்'

என்ற கம்பராமாயணப் பாட்டில் நா-ஞா என்ற இரண்டும் மோனையாக வந்தன.

"சுதந்திர தேவி நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே'

என்ற பாரதி பாட்டில் சு- என்ற எழுத்துக்குத் தொ- என்பது மோனையாக வந்திருப்பது காண்க. ச்-என்ற மெய்க்கு த்- என்ற மெய்யும், உ-என்ற உயிருக்கு ஒ-என்ற உயிரும் மோனையாக வந்தன.

"பச்சைமா மலைபோல் மேனிப்
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே'

என்ற திருமாலைப் பாட்டில் இரண்டாவது அடியில் மாத்திரம் அ-வுக்கு ஆ-மோனையாக வந்திருக்கிறது. மற்ற அடிகளில் அந்த அந்த எழுத்தே வந்துள்ளது. இப்படி உள்ள பாடல்களைக் கவனித்து மோனை அமைந்திருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com