மனையின் நீங்கிய "முனைவர்'!

தமிழர் வாழ்வியலில் அறம் முக்கியமானதாக இருக்கிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் குறைகிற பொழுதும், ஒழுக்கத்தை மீறுகிற பொழுதும் பொருளை அதிகம் சேர்க்கிறபொழுதும் உணவு, உடை, உறையுள்
மனையின் நீங்கிய "முனைவர்'!

தமிழர் வாழ்வியலில் அறம் முக்கியமானதாக இருக்கிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் குறைகிற பொழுதும், ஒழுக்கத்தை மீறுகிற பொழுதும் பொருளை அதிகம் சேர்க்கிறபொழுதும் உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை குறிப்பிட்டவர் தனக்கே உரியதாக அதிக அளவு சேர்க்கின்றபொழுதும், இன்னும் பல காரணங்களாலும் அறம் வலியுறுத்தவேண்டி இருக்கிறது.
சைவ, வைணவ, சமண, பெளத்த அறம் என்று பிரித்தும் அறியும் அளவுக்குத் தமிழில் அறம் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. அந்த வகையில் புத்தமித்திரனார் இயற்றிய வீர சோழியத்திற்கு உரை செய்த பெருந்தேவனார் குறிப்பிடும் துறவறம் பற்றிய புரிதலை அறிவோம்.
பெருந்தேவனார் பொருள் இலக்கண மரபினை அறத்தோடு ஒப்பிடுகிறார். அறம் மனையறம், துறவறம் என இரண்டு என்று கூறியவர்,

"துறவும் அடக்கமும் தூய்மையும் தவமும்
அறவினை ஓம்பலும் மறத்தினை மறுத்தலும்
மனையின் நீங்கிய முனைவர்தம் அறமே'

என்று துறவறத்தை விளக்குகிறார். இதில் அவர் கையாண்டுள்ள "முனைவர்' எனும் சொல்லே சிந்திக்கத்தக்கது. துறவு, அடக்கம், தூய்மை, தவம், அறவினை ஓம்பல், மறத்தை மறுத்தல் என்பதை கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும். இதற்கு முதலில் மனையை விட்டு நீங்க வேண்டும். "மனையின் நீங்கிய முனைவர்தம் அறம்' என்கிறார். அப்படியெனில், மனையின் நீங்கா முனைவர்தம் அறம் எது?அதுதான் மனையறம். பெருந்தேவனாரே மனையறம் பற்றியும் கூறுகிறார்.
அதாவது "கொடுத்தலும் அளித்தலும் கோடலும் இன்மையும், ஒழுக்கத்தொடு புணர்தலும் புணர்ந்தோர்ப் பேணலும், வழுக்கில் பிறவும் மனையறவகையே' என்கிறார். தொல்காப்பியத்தில், "வினையின் நீங்கிய விளங்கிய அறிவின், முனைவன் கண்டது முதல் நூலாகும்' என்பார் தொல்காப்பியர். 
முனைவன் அல்லது முனைவர் என்பதன் பொருள் என்ன? "துறவி, முனிவர், பெரியோர், முன்னவர், கடவுள், தலைவன், முதல்வன், அருகன், புத்தன் என்கிற பொருளைச் சொல்லலாம். தமிழில் ஆழமான பொருளைக் குறிக்கும் சொற்கள் சமயப் பொதுதன்மை உடையதாகக் கட்டமைக்கப்பட்டுவிடும். அதனை மேற்குறித்த சான்று வலுப்படுத்துவதை அறியலாம். இயல்பான மனித வாழ்க்கையில் இருந்து முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டு ஒன்றைப் பற்றியே தியானித்து, தன் தியானத்திற்கு வடிவம் கொடுப்பவன் யாரோ அவனே முனைவர்(ன்).
மனையின் நீங்கிய முனைவரின் தன்மையை அறியலாம். "சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயன்' என்னும் தொல்காப்பியரின் வாக்கை அற இலக்கியங்கள் விளக்கிச் சென்றாலும், மேற்குறித்த சொல்லாடல் முக்கியமானது. இல்லற வாழ்வில் ஆண், பெண் இருவரும் இணைந்தே இருக்கின்றனர். ஆனால், அறம் என்று வருகிறபொழுது இல்லத்தை ஆளும் பெண் இல்லறத்தை மேற்கொள்கிறாள். இல்லறத்தை விட்டுத் துறவறம் செல்லும் ஆண் துறவு, அடக்கம், தூய்மை, தவம், அறவினை ஓம்பல், மறத்தை மறுத்தல் என்பதானகட்டுப்பாடுகளை மேற்கொண்டு வாழ வேண்டும். இந்த ஆறிலும் வெற்றி பெறுகிறவனே
முனைவர். உடல், உயிரைத்தவிர அனைத்தையும் துறத்தல், ஐம்புலன் அடக்கம், உடல், மனத்தூய்மை, நாட்டு நலனை உறுதியோடு தியானித்து அதை அடைதல், கொலை முதலான அறத்திற்கு ஒவ்வாத செயலைச் செய்யாதிருத்தல், போர் முதலிய வன்மையை செயல்படுத்தாதிருத்தல் என்பனவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுவானேல், அவன் முனைவன்.
அப்படியெனில், இல்லறத்தைப் பேணும் பெண்ணின் செயல் என்ன? கொடுக்க வேண்டியவற்றைக் கொடுத்தல், அளிக்க வேண்டுவனவற்றை அளித்தல், கொள்ள வேண்டியவற்றை வாங்கிக் கொள்ளல், இன்னாதனவற்றை வாங்காதிருத்தல், ஒழுக்கத்தொடு புணர்தல், புணர்ந்தோர்ப் பேணல் முதலியவற்றைக் கடைப்பிடித்து ஒழுகும் பெண் மனையின் நீங்கா முனைவர். தம் கொள்கையை நிலைநாட்டுபவனே முனைவன்.
ஒன்றைத் துறந்தால்தான் இன்னொன்றைப் பெறமுடியும் என்கின்ற வாக்கே தமிழரின் அறமாக (இல்லறம், துறவறம்) கடைப்பிடிக்கப்பட்டு வந்திருப்பதை அறிய முடிகிறது. "முனைவர்' என்கிற சொல்லில் ஆண், பெண் என்கிற பால் பகுப்பு இல்லை. இதன் நீட்சியாக இன்றும் முனைவர் பட்டம் பெற்றவரை ஆண், பெண் என்று பாராமல் எல்லோரையும் முனைவர் என்று அழைப்பதைக் காண்கிறோம். இல்லறம், துறவறம் என்பதை மட்டும் பெறவிழைதல் என்பதைவிட்டு இன்னும் நம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெற தடையாக இருக்கும் அனைத்தையும் நீக்கி வாழக் கற்றுக்கொள்வோம். அப்பொழுது நாம் அனைவரும் "நீங்கிய முனைவர்' என்கிற பட்டதைப் பெற்றவராவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com