வியக்க வைத்த வள்ளுவரும் பாரதியாரும்

மகாகவி பாரதியாரின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளைப் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், யாருமே பதிவு செய்யாத ஒரு நிகழ்வை வ.ரா. தமது "மகாகவி பாரதியார்' என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்.
வியக்க வைத்த வள்ளுவரும் பாரதியாரும்

மகாகவி பாரதியாரின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளைப் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், யாருமே பதிவு செய்யாத ஒரு நிகழ்வை வ.ரா. தமது "மகாகவி பாரதியார்' என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். அரைப் பைத்தியமாக இருந்த ஒரு சிறுவனை, பாரதியார் முழுமையாகக் குணமாக்கிய நிகழ்வு அது.
பாரதியார் புதுவையில் இருந்தபோது ஒரு நாள் ஒரு சிறுவனைப் பார்த்தார். அரைப் பைத்தியமாக இருந்த அவனைப் பார்த்ததும் பரிதாபப்பட்டார். பரிதாபப்பட்டதோடு நின்றுவிடாமல், அவனை எப்படியாவது குணப்படுத்திவிட வேண்டும் என்று உறுதியும் பூண்டார்.
எனவே, அவனை தம் வீட்டுக்கு அழைத்து வந்து, தம்முடன் தங்கவைத்துக் கொண்டார். அச்சிறுவனை எப்போதும் தன் கையால் தொட்டுக்கொண்டே இருந்தார். அவன் மீது தமக்கிருக்கும் அன்பை அப்படித் தொடுவதன் மூலம் அவர் வெளிப்படுத்தினார். பழங்களைத் தாமே உரித்து, தம் கையாலே அவனுக்குக் கொடுத்தார். சில வேளைகளில் அவனுக்கு ஊட்டவும் செய்தார். 
இரவில் அவனைத் தம் பக்கத்திலேயே படுக்கவைத்துக் கொண்டார். கொஞ்சுவது போல் "என்ன கண்ணு! என்ன ராஜா!' என்று அவனை அழைத்தார். மொத்தத்தில் அவனுக்கு ராஜ உபசாரம் செய்து வந்தார். அப்படிச் செய்து வந்தால் அவன் குணமடைவான் என்று பாரதியார் நம்பினார். ஆனால், வ.ரா.வும் மற்றவர்களும் அதை நம்பவில்லை. எனவே, பாரதியாரின் செயல்கள் அவர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றின. எனவே, வ.ரா.வும் மற்றவர்களும் பாரதியாருக்குத் தெரியாமல் அவரது செயல்பாடுகளைக் கேலி 
செய்தனர். 
ஆனால், பாரதியாரின் முயற்சியும் நம்பிக்கையும் வீண் போகவில்லை. அவருடைய ஒருமாத உபசரிப்புக்குப் பின், கேலி பேசியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போகும்வண்ணம் அச்சிறுவன் முழுமையாகக் குணம் அடைந்துவிட்டான். இது குறித்து வ.ரா., ""கடைசியில் நையாண்டி பண்ணிக் கொண்டிருந்த எங்களை பாரதியார் முட்டாள்களாக ஆக்கிவிட்டார். பையனுடைய சித்தப்பிரமை சிறிது சிறிதாகத் தெளிந்து போய், அவன் நல்லபடியாகப் பேசவும், நடக்கவும் ஆரம்பித்து விட்டான். பாரதியார் ஆனந்தம் அடைந்தார்'' என்று குறிப்பிடுகிறார்.
இவ்வாறு வ.ரா. பதிவு செய்திருக்கும் இந்த நிகழ்விலிருந்து ஒன்று நன்றாக - தெளிவாகத் தெரிகிறது. ஒரு நோயாளி விரைவாகவும் ஒழுங்காகவும் நலம் பெற, அவருடன் இருப்பவர் அந்நோயாளி மீது அன்புடையவராகவும், அக்கறையுடையவராகவும் இருக்க வேண்டியது அவசியம் என்பதே. இதை ஒரு மருத்துவ ஆய்வும் உறுதி செய்திருக்கிறது.
ஒரு பெண் ஆர்வலரைக் கொண்டு அந்த ஆய்வு செய்யப்பட்டது. அப்பெண்ணுக்கு மின் அதிர்ச்சி தந்து சோதிக்கப் போவதாக அவளிடம் சொல்லப்பட்டது. பின் ஒரு தனி அறையில் அவளுடைய மூளை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டது. அப்போது அப்பெண்ணின் மூளையில் சில நரம்புகள் கூடுதலான வேகத்துடன் இயங்கியதால், அப்பெண் பதற்றத்துடன் இருந்தாள்.
தனிமையில் இருக்கும் அவளது பதற்றம் தணிய வேண்டுமானால் அவளுடன் ஒருவர் இருக்க வேண்டும். அவர் அறிமுகமில்லாதவராக இருக்க வேண்டுமா? அல்லது நெருங்கிய உறவினராக இருக்க வேண்டுமா என்பது சோதிக்கப்பட்டது. அதற்காக, முதலில் அறிமுகமில்லாத ஒருவரை அவளது கையைப் பற்றிக்கொண்டு அவளுடன் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்து, அவளுடைய கணவரே அவளது கையைப் பற்றிக்கொண்டு இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அறிமுகமில்லாதவருடன் இருந்தபோது தணியாத அவளது பதற்றம், தன் கணவருடன் இருந்தபோது தணிந்தது. அதோடு அவளது மூளையின் மின்சுற்றுக்களும் அமைதியடைந்தன.
எனவே, நோயாளி நலம் பெற அன்பானதொரு ஆதரவு அவருக்குத் தேவை என்பதை ஆய்வு முடிவாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவையே வ.ரா பதிவு செய்திருக்கும் நிகழ்வும் சொல்லாமல் சொல்கிறது. எப்படியென்றால், பாரதியார் சிறுவனை அன்பாக கவனித்துக் கொண்டது போல், நோயாளியுடன் இருப்பவர் நோயாளியை அன்பாகக் கவனித்துக் கொண்டால், சிறுவன் குணமானது போல் நோயாளியும் குணமாவார் என்று சொல்லாமல் சொல்கிறது. இந்த மருத்துவ உண்மையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறியிருக்கிறார் என்பதை உரையாசிரியர் பரிமேலழகர் வாயிலாக அறியும்போது வியப்படையாமல் இருக்க முடியாது!

"உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து' (950)

என்ற திருக்குறளில்தான் திருவள்ளுவர் அந்த உண்மையைச் சொல்லியிருக்கிறார். ஒரு நோயாளி விரைவாகவும், முழுமையாகவும் நலம்பெற நோயாளியின் ஒத்துழைப்பும், மருத்துவரின் துணையும், அவர் பரிந்துரைக்கும் மருந்தும், நோயாளியின் உடன் இருப்பவரின் கவனிப்பும் தேவை என்பது இக்குறளின் பொருள்.
நோயாளிக்கும், மருத்துவருக்கும், மருந்துக்கும், உடன் இருப்பவர்க்கும் தலா நான்கு பண்புகள் இருக்க வேண்டும் என்கிறார் பரிமேலழகர். உடன் இருப்பவர்க்கு இருக்க வேண்டிய பண்புகள் நான்கில், "ஆதுரன் மாட்டு அன்புடைமை' என்பது ஒன்று. நோயாளியுடன் இருப்பவர் அந்நோயாளி மீது அன்புடையவராக இருக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
இன்றைய மருத்துவ உலகம் கண்டறிந்த ஓர் அரிய மருத்துவ உண்மையை திருவள்ளுவர் அன்றே சொல்லியிருப்பதை பரிமேலழகர் வாயிலாகவும் ; சமூகப்பிணி தீர்க்க வந்த மகாகவி பாரதியார், அதே உண்மையை கருத்தில் கொண்டு ஒரு சிறுவனின் பிணியைத் தீர்த்த பாங்கை வ.ரா., வாயிலாகவும் அறியும்போது வியப்படையாமல் இருக்க முடியுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com