கவி பாடலாம் வாங்க - 3: மோனை (2)

இன்ன இன்ன எழுத்துக்கள் மோனையாக வரும் என்று தெரிந்து கொண்டால் போதாது. பாட்டில் இன்ன இடத்தில் மோனை வர வேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஓரடியில் எந்த இடத்தில் மோனை வந்தாலும் வரலாம்.
கவி பாடலாம் வாங்க - 3: மோனை (2)

இன்ன இன்ன எழுத்துக்கள் மோனையாக வரும் என்று தெரிந்து கொண்டால் போதாது. பாட்டில் இன்ன இடத்தில் மோனை வர வேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஓரடியில் எந்த இடத்தில் மோனை வந்தாலும் வரலாம். இடத்துக்கு ஏற்றபடி அதற்கு ஒரு பேர் உண்டு. அதைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். ஆனாலும், இன்ன இடத்தில் வந்தால் சிறப்பாக இருக்கும் என்பது பழக்கத்தால் தெளிவாகும்.
அடியில் சரி பாதியில் மோனை விழுந்தால் அழகாக இருக்கும். ஒவ்வோர் அடியிலும் இத்தனை சீர் என்ற கணக்கு உண்டு. ஆறு சீர் உள்ள பாட்டுக்கு முதலிலும் நான்காவது சீரிலும் மோனை அமைவது அழகு.

"இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை யழித்திட் டாலும்
சுதந்தர தேவி நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே'

என்ற பாட்டில் ஆறு சீர்கள் இருக்கின்றன. புத்தகங்களில் கவிதையைப் பார்த்தால் அங்கங்கே இடம் விட்டு அச்சிட்டிருப்பார்கள். வசனத்தில் வார்த்தைக்கு வார்த்தை இடம்விட்டு அச்சிடுவார்கள். பாட்டில் அப்படி இராது. ஓசையைக் கவனித்து ஒவ்வொரு சீரையும் தனித்தனியே பிரித்து அமைத்திருப்பார்கள். அந்தச் சீர் முழு வார்த்தையாக இருக்கலாம்; இரண்டு சொற்களாகவும் இருக்கலாம்; அல்லது உடைந்த சொற்களாகவும் இருக்கலாம். சீர்களைப் பற்றி விரிவாகப் பின்னால் தெரிந்து கொள்ளலாம். இப்போதைக்கு அச்சுப் புத்தகங்களில் இடம்விட்டுச் சீரைப் பிரித்து அச்சிட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டால் போதும். அதைக் கவனித்தால் ஓரடியில் எத்தனை சீர்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம்.
மேலே சொன்ன, ""இதந்தரு மனையி னீங்கி'' என்ற பாட்டு ஆறு சீர் உள்ள விருத்தம். அதை "அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்' என்று சொல்வார்கள். அதில் அடிக்கு ஆறு சீர் உண்டு என்ற ஒன்றை மாத்திரம் இப்போது நினைவில் வைத்துக்கொண்டால் போதும்.
இந்தப் பாட்டில் ஒவ்வோர் அடியிலும், முதல் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைந்திருப்பதைக் காணலாம்.

"அரியானை அந்தணர்தம் சிந்தையானை
அருமறையி னகத்தானை அணுவை யார்க்கும்'

என்னும் தேவாரம் எண்சீர் விருத்தம். இங்கே முதல் சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை இருப்பதைக் கவனியுங்கள். இடையிலும் மோனைகள் வந்திருக்கின்றன. அவை வந்தாலும் வராவிட்டாலும், முதல் சீரிலும் ஐந்தாம் சீரிலும் வருவதுதான் முக்கியம்.
சில பாடல்களில் வெவ்வேறு ஓசையுடைய சீர்கள் வரும். அப்போது ஓசை மாறும் இடத்தில் மோனையை வைப்பார்கள்.

"எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல்
மருமத்தின் எறிவேல் பாய்ந்த
புண்ணிலாம் பெரும்புழையில் கனல்நுழைந்தால்
எனச்செவியில் புகுத லோடும்'

என்ற பாட்டும் அறுசீர் விருத்தந்தான். ஆனால், இதில் முதல் நாலும் நீண்ட சீர்கள்; பின் இரண்டும் குறுகிய சீர்கள். ஓசை ஐந்தாம் சீரில் மாறுகிறது. அங்கே மோனை அமைந்திருக்கிறது.
மோனையை இப்படி உரிய இடத்தில் அமைந்தால் அழகாக இருக்கும் என்பதைச் சொல்லும்போது, எனக்கு ஒரு வரலாறு நினைவுக்கு வருகிறது. அதை என் ஆசிரியப்பிரானாகிய "மகாமகோபாத்தியாய' டாக்டர் ஐயரவர்கள் சொன்னார்கள்.
ஐயரவர்களுக்கு முன் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்தவர் சி.தியாகராச செட்டியார் என்னும் புலவர். அவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மாணாக்கர்; இலக்கணப் பெரும் புலவர். வேறு ஒரு புலவர் சில பாடல்களைப் பாடிக்கொண்டு வந்து அவரிடம் காட்டினார். செட்டியார் பாடலைப் பார்த்து, எதுகை மோனை சரியாக அமைந்திருக்கின்றனவா என்று கவனித்தார். சில அடிகளில் மோனை சிறப்பான இடங்களில் அமையாமல் இருப்பதைக் கண்டு, ""இங்கே மோனை இல்லையே?'' 
என்றார்.
பாட்டுப் பாடின புலவர், வேறிடத்தில் உள்ள மோனையைக் காட்டி, ""இதோ இருக்கிறதே!'' என்றாராம். அதைச் செட்டியார் கவனிக்காமலா இருப்பார்?
""நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும் என்றால், எங்கே இட்டால் அழகாக இருக்குமோ அங்கே இடாமல், புருவத்துக்கு மேலே ஓரமாக இட்டுக்கொண்டு, "இதோ நெற்றியில்தானே பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறேன்?' என்று சொல்வது போல இருக்கிறது, நீர் சொல்வது. எங்கே வைத்தாலும் மோனைதான் என்று இலக்கணம் சொன்னாலும், இப்படி வைத்தால் அழகு என்று இலக்கியங்கள் காட்டுகின்றவே! அதை நீர் கவனிக்கவில்லையோ?'' என்று தியாகராச செட்டியார் கூறிப் பாட்டைத் திருத்தச் சொன்னாராம்.
ஆகவே, மோனையை உரிய இடத்தில் வைப்பது மிகவும் முக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com