கார் கால வருணனை

காப்பிய இலக்கணம் கூறும் தண்டியலங்கார ஆசிரியர், காப்பியத்தில் "மலை கடல் நாடு வளநகர் "பருவம்' இருசுடர்த் தோற்றம் என்று இனையன புனைந்து' - என்று கூறுவார்.

காப்பிய இலக்கணம் கூறும் தண்டியலங்கார ஆசிரியர், காப்பியத்தில் "மலை கடல் நாடு வளநகர் "பருவம்' இருசுடர்த் தோற்றம் என்று இனையன புனைந்து' - என்று கூறுவார். இதற்கேற்ப காப்பிய ஆசிரியர்கள் ஆங்காங்கு உரிய இடங்களில் இவற்றை வருணித்துப் பாடுவர்.
வில்லிபுத்தூராழ்வார் தம் நூலில் கார்கால வருணனையாகப் பாடிய பாடல் ஒன்றின் நயத்தைக் காண்போம். அருச்சுனன் தீர்த்த யாத்திரையாகப் பல இடங்களுக்கும் சென்று முடிவில் துவாரகையை அடைந்தான். அது ஆவணி, புரட்டாசியாகிய கார் காலம்.

""இந்திரற்குத் திருதலை மன்றல் எண்ணி யாதவர்
கோன் வளம்பதியில் எய்தினான் என்று
அந்தரத்தை நீலத் தால் விதானமாக்கி
அண்டமுற இடிமுரச மார்ப்பவார்ப்ப
வந்திரட்டை வரிசிலையால் பஞ்சவண்ண
மகரதோரண நாட்டி வயங்கு மின்னார்
முந்துறத் தீபமும் எடுத்துத் தாரை முத்தால் முழுப் 
பொரிசிந் தின கால முகில்கள் அம்மா'' 
(அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கம் - 51)

மேகங்களுக்குத் தலைவன் இந்திரன். அவன் திருமகன் வந்தான் என்று அம் மேகங்கள், வானத்தை நீல நிறத்தால் மேற்கட்டியாக அமைத்தன, இடியாகிய முரசத்தை அடித்து ஆரவாரித்தன; இரண்டு வானவில்லால் ஐந்து வகையான நிறமுள்ள மகர வடிவிலான தோரணத்தை அமைத்தன; மின்னலாகிய விளக்கை ஏந்தின; முரிவில்லாத தாரை தாரையாகப் பொழியும் மழைநீர்த் துளிகளாகிய முத்துகளைச் சிந்தின.
இவ்வாறு அவை வரவேற்றன விசயனை. (வானவில் 7 நிறம் - இதை 5 முக்கிய நிறமாகவும் கொள்வர்). கார் காலத்தில் இயற்கையாகத் தோன்றும் மேகம், இடி, மின்னல், வானவில், மழைத் தாரைகளாகிய இவற்றைக் கவிஞர் தன் குறிப்பின் மீது ஏற்றிப் பாடிய இப்பாடல் தற்குறிப்பேற்றவணியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com