புள்ளு, பிள்ளைக்கு இரை தேடும்.....

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிப் பாசுரத்தில் (1349) இடம்பெறும் தொடர் இது.
புள்ளு, பிள்ளைக்கு இரை தேடும்.....

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிப் பாசுரத்தில் (1349) இடம்பெறும் தொடர் இது. இங்குப் "புள்ளு' என்பது தாய்ப்பறவையையும் "பிள்ளை' என்பது அதன் குஞ்சினையும் குறிக்கிறது. ""பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை'' (1503) என்பது தொல்காப்பியம்.
சோழ நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான புள்ளம் பூதங்குடி என்னும் ஊருக்குச் சென்ற திருமங்கையாழ்வார், அங்குள்ள இறைவனை ஒரு பாசுரத்தில் பாடிப் பரவுகின்றார். "அறிவதறியான்' (5-1) எனத் தொடங்கும் திருமொழி அது. அதன் இரண்டாம் பாசுரத்தில்,

"பள்ளச் செறுவில் கயல்உகளப்
பழனக் கழனி அதனுட்போய்ப்
புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடும்
புள்ளம் பூதங் குடிதானே'

என்று அவ்வூரின் வயல்வளத்தைச் சிறப்பிக்கின்றார். "பள்ளமாயுள்ள வயல்களில் (செறு-வயல்) மீன்கள் துள்ளிவிளையாட, பறவைகள் கழனி(வயல்)களுக்குள்ளே போய்த் தம் குஞ்சுகளுக்கு இரையாகத் தக்க மீன்களைத் தேடுகின்ற புள்ளம் பூதங்குடி' என்பது இப்பாடலடிகளின் பொருளாகும். இது பற்றி ஆலவாயுடையான் என்னும் தமிழ்ப் புலவர் ஒருவர், பட்டர் என்னும் வைணவப் பெரியா(ஆசார்ய)ரை அணுகி ஒரு வினா எழுப்பினாராம். அப்புலவரின் கேள்வி இதுதான்:
"பள்ளச் செறுவில் கயல் உகள' என்ற போதே அவ்விடத்து வயல்களில் மீன்கள் அளவற்றுப் பெருகிக் கிடக்கின்றன என்பது வெளிப்பட்டு விடுகின்றது. அங்ஙனமாயின், "புள்ளு, பிள்ளைக்கு இரைதேடும்' என்று கூறுதல் எங்ஙனம் பொருந்தும்? பொருள் அருமைப்பட்டிருந்தாலன்றோ அதைத் தேடவேண்டிய தேவை ஏற்படும்? அளவற்றுக் கிடக்கும் இடத்தில் இரையைத் தேடித் திரிவதாகச் சொன்னதில் பொருத்தம் இல்லையே! இதுவே அவரின் ஐயம்.
இதற்குப் பட்டர், "அங்குள்ள நிலத்தின் வாய்ப்பாலே மீன்கள் தூணும் துலா(உத்தர)முமாக மிகவும் பருத்திருக்கும். அவை குஞ்சுகளின் வாய்க்குள் புகமாட்டா. எனவே தான் வாய்க்குள் புகக்கூடிய சின்னஞ் சிறிய மீன்களைத் தேடிப் பிடிக்க வேண்டியதாயிற்று தாய்ப்பறவைக்கு. அந்த நுட்பத்தைத்தான் "இரைதேடும்' என்ற சொற்போக்கு உணர்த்தி நிற்கின்றது' என்று விடையிறுத்தாராம். பெரியவாச்சான் பிள்ளையின் உரையில் இக்குறிப்பினைக் காணலாம்.
இது தொடர்பாக நெய்தல் திணை அமைந்த நற்றிணைச் செய்யுளொன்றைக் காட்டுவது பொருந்தும். தலைமகன் மணம் செய்து கொள்ளுதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டதைக் குறிக்கும் தோழி, அதன் பிற்புலமாகக் கடற்கரைக் காட்சி ஒன்றை விவரிக்கின்றாள்.
""தோழி! நம் சிறுகுடியை அடுத்த புன்னை மரங்கள் பூத்த உயர்ந்த கரையையும் - ஓயா முழக்கத்தையுமுடைய கடலினிடத்தில் - தடந்தாள் நாரை ஒன்று பெடையுடனே சென்று, தன் பிள்ளைக்குரிய இரையைத் தேடுகின்றது. அத்தேடலில் மெல்லிய சிறிய கண்களையுடைய சிறுமீன்கள் கிடைக்கவும், அவற்றைக் கொண்டுவந்து மேலோங்கிய மரக் கிளையில் உயரத்தில் கட்டப்பட்டுள்ள கூட்டிலிருந்து தாய் நாரையைக் கூவியழைக்கின்ற தன் பிள்ளையின் திறந்த வாயில் விழுமாறு சொரிகின்றது.

"...... தோழி! வீஉகப் 
புன்னை பூத்த இன்நிழல் உயர்கரைப் 
பாடுஇமிழ் பனிக்கடல் துழைஇ, பெடையோடு 
உடங்குஇரை தேரும் தடந்தாள் நாரை 
ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன் 
மேக்குயர் சினையின் மீமிசைக் குடம்பை, 
தாய்ப்பயிர் பிள்ளை வாய்ப்படச் சொரியும் 
கானல்அம் படப்பை' (நற். 91:1-8)

என்னும் அடிகளில் இச்செய்தி இடம் பெறுகின்றது. பார்ப்பின் வாயில் சொரிவதற்கு வாய்ப்பாக நாரை தன் பெடையுடன் கூடித் தேடிக் கொணர்ந்த மீன் மிகமிகச்சிறியது என்பதனை, "ஐய(மெல்லிய) சிறுகண் செங்கடைச் சிறுமீன்' என்னும் தொடர் விளக்குகின்றது.
இதனைப் பாடிய பிசிராந்தையாரும் முன்னர் குறித்த திருமங்கையாழ்வாரும் பறவைகள் பிள்ளைக்கு இரைதேடும் செயலினைக்
கூடக் கூர்ந்து நோக்கிப் பாடியுள்ளனர். இருவரும் பறவைக் குஞ்சுகளைப் "பிள்ளை' என்னும் சொல்லாற் குறிப்பதும் நோக்கத்தகும். மரபுவழிப் புலமையின் அடையாளம் இது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com