வைணவ மரபு வழக்குகள்

வைணவ உரைகளின் தனிச்சிறப்புகளுள் ஒன்று அதனிடையே கலசிக் கிடக்கும் மரபு வழக்குகளும் செறிவுத் தொடர்களும் ஆகும்.
வைணவ மரபு வழக்குகள்

வைணவ உரைகளின் தனிச்சிறப்புகளுள் ஒன்று அதனிடையே கலசிக் கிடக்கும் மரபு வழக்குகளும் செறிவுத் தொடர்களும் ஆகும். இவற்றைக் காணும்போது எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட உரைகளில் கற்பனையும் இலக்கிய நயமும் நிறைந்த இத்தனை சொல்லாட்சிகளா என்னும் வியப்பே வெள்ளமிடுகிறது. அவற்றை உணர்ந்து கொள்வதில் அறிஞர்கள்கூடச் சில இடங்களில் இடர்ப்பட்டுள்ளனர். 
"இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள்தாம் இருந்த நல்இமயத்து.... பிரிதிசென்று அடைநெஞ்சே' (1:2:2) என்று திருப்பிரிதி என்னும் உகந்தருளின நிலத்தைக் கொண்டாடுகிறார் திருமங்கையாழ்வார். இலங்கை மாநகர் பொடி செய்த அடிகள் என்பதற்குப் பெரியவாச்சான்பிள்ளை, ""லங்காம் ராவண பாலிதாம் (இராவணனால் காக்கப்படும் இலங்கை) என்னும் வான்மீகத் தொடரை எடுத்துக்காட்டி அதற்கு, ""பெண்பெண்டுகளுக்கும் நோக்கலாம்படியாயிற்று ஊர் அரண். வெளிநிலத்தில் சிலர் புகுராதபடி பண்ணவல்லவனாயிற்று உணர்ந்து நோக்குகிறான்'' என்றும், "இருந்த' என்பதற்கு ""வேறோர் இடத்திலே இருப்பாய் இங்கே வருவது போவதாகை யன்றிக்கே ஆயிற்று இருப்பது. இப்படிக் கொள்கொம்பு மூடிற்று 
என்றால் ஆஸநத்தாலே (இடத்தில் இருத்தலாலே) வெல்வதாகப் பார்த்து இவ்விடந் தன்னையே இருப்பாக்கினான் ஆயிற்று'' என்றும் உரையிட்டுள்ளார். 
இதற்கு, ""கொள்கொம்பானது நட்டுக்கொண்டிருக்குமாபோலே வணங்காதிருக்கையாய், "ந நமேயம்' என்றிருக்கையைச் சொல்லுகிறது'' என்பது அப்பு அரும்பதம் தந்துள்ள விளக்கம். இராவணன் வணங்க மாட்டேன் என்று செருக்குடன் தலைதூக்கி நின்றது உண்மை. ஆனால், கொள்கொம்பு என்பதனை இராவணனோடு இணைத்துப் பொருள்கொள்வது பொருந்துமாறில்லை. அதற்குப் பொருள் யாது? இவ்வழக்கு வேறிடத்தும் உள்ளது.
"மிகும் தேவும் எப்பொருளும் படைக்கத் தகும் கோலத் தாமரைக் கண்ணன்' (2:2:5) என்னும் திருவாய்மொழித் தொடரில் மிகும் தேவு என்பதற்கு, ""தன்னோடு விகல்பிக்கலாம்படி (ஐயுறலாம்படி) கொள்கொம்பு மூடப் படர்ந்த தேவ ஜாதியும்'' என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இதனால் அதற்கு மிகுதல் என்பது பொருள் என்றாகிறது. இதன் அடிப்படையில் 'இருந்த நல்இமயத்துப் பிரிதி' என்பதன் உரையை நோக்கின், படர்வதற்கு ஊன்றப்படும் கொள்கொம்பு மறையும்படியாகக் கொடி படர்ந்து மிகுந்திருப்பது போல, அரண்கள் மிகுந்து பகைவர்கள் இருக்குமிடம் அறிந்துகொள்ள முடியாதவாறு மிகுந்திருந்தால் வெல்வதற்குக் காலம் நோக்கி ஓர் இடத்திலே தங்கியிருப்பது போலப் பெருமான் திருப்பிரிதியிலே தங்கியுள்ளான் என்று தெளிவான பொருள் கிடைக்கிறது. அரும்பதவுரையின் பொருத்தமின்மை, திருவாய்மொழி உரையால் புலப்படுகிறது. கொடி, கொம்பு தெரியாதவாறு அடர்ந்து படரும் இயற்கைக் காட்சியைக் கண்ட இலக்கிய உள்ளம் படைத்த அரிய வழக்கு இது. கொள்கொம்பு மூடல் - கொடியால் கொம்பு மறைதல்.
திவ்யப் பிரபந்த அகராதியின் ஆசிரியர் பார்த்தஸாரதி அய்யங்கார் தெரியாததைத் தெரியாது என்று கூறும் நேர்மையாளர். இதற்கு, ""அநுபந்தம் பார் - என்று சில சொற்களுக்கு இவ் வகராதி அச்சாகும்போது குறிப்பு எழுதினோம். அவற்றின் பொருள் இப்போதும் விளங்காமையால் இங்கு அநுபந்தத்தில் அவற்றை விட்டிருந்தோம்'' (ப. 832) என்று எழுதியுள்ளதே சான்று. பக்கக் குதிரை போதல் என்பதற்கு "அநுபந்தம் பார்' என்று எழுதியுள்ளார். ""ஸர்வேச்வரன் திருமங்கையாழவார்க்குப் பக்கக்குதிரை ஏறிப் போமாகாதே! அவன் கையில் திருவாழி கடைந்து நெய்யிட்டு அழகுக்கு உடலாக ஒப்பித்திருக்கும் அத்தனை. இவர் கையில் வேல் சத்ரு நிரஸநத்தாலே கறை கழுவ அவஸரமும் (நேரமும்) இன்றிக்கே இருக்குமாயிற்று'' (3:6:10) என்னும் உரையை நோக்கினால், பெருமாள் திருமங்கைமன்னனுக்கு வீரத்தில் இணையாகான் என்கிறார் என்பதும், இவ்வழக்கிற்கு இணையாகப் போதல் என்பது பொருள் என்பதும் புலனாகின்றன. தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் இணைந்து இழுத்துச் செல்லும் காட்சியைக் கண்டு உருவாக்கப்பட்ட வழக்கு இது.
அவர் அகராதியில், ""வயிரவுருக்கு - 3368/3 வயிரம் போலே கடினம். வயிரம் - வஜ்ரம். 2073 ... கானது அரக்கையுருக்கச் சொல்ல வேணுமோ'' (ப. 761) என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இதில் வயிரம் என்பதற்குத் "திண்மை' என்று கூறுவது சரி. ஆனால், வயிரவுருக்கு என்பதற்குத் "திண்மை' என்று பொருள் காண்பது சரியாகுமா? திருவாய்மொழி உரை தெளிவு தருகிறது.
""ஆயர்கள் ஏறு - அவ்வடிவழகாலே இடையரைத் தோற்பித்தாப்போலே தன்னோடு ஒத்த ஆண்களைத் தோற்பிக்குமவன், பெண்பிறந்தாரை நோவுபடுத்தச் சொல்ல வேண்டாவிறே. பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம் ( ஆடவர் கண்ணையும் கருத்தையும் கவர்பவன்) என்கிறபடியே வயிரவுருக்காயிறே அழகு இருப்பது'' (9:9:1) என்று இருபத்து நாலாயிரப்படியும், செங்கனிவாய் எங்கள் ஆயர்தேவு என்பதற்கு, ""அவ்வயிர வுருக்கான முறுவலாலே எங்களைத் தோற்பித்தாப்போலே, தன்பருவத்திற் பிள்ளைகளையும் தோற்பித்த ஸர்வஸ்வாமி'' (10:3:11) என்று முப்பத்தாறாயிரப்படியும் பொருள்கண்டுள்ளன. வயிரவுருக்கு என்பதற்கு வயிரத்தையும் உருக்கக் கூடியது என்பதே சரியான பொருள் என்பது தெளிவாகிறது. 
கூர்ந்து நோக்குங்கால் தெளிவுதரும் இப்படிப்பட்ட இடங்கள் இன்னும் உண்டு. நுனிப்புல் மேயாது ஆழ்ந்து நோக்குவார்க்கு வைணவ உரைகள், இலக்கிய நயம் மிக்க வழக்குகளும் தொடர்களும் கூடுபூரித்துக் கிடக்கும் (நிறைந்திருக்கும்) களஞ்சியம் என்பது தேற்றம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com