அம்மணியம்மாளின் "சோபன மாலை!'

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணி ஜைன அறிஞர் திருத்தக்கதேவரால் எழுதப்பெற்றது.
அம்மணியம்மாளின் "சோபன மாலை!'

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணி ஜைன அறிஞர் திருத்தக்கதேவரால் எழுதப்பெற்றது. "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. சீவக சிந்தாமணி பதிப்பை செய்யும்போது, ஜைன சமய ஐயங்களை கும்பகோணத்திலிருந்த ஜைனப் பெண்மணி ஒருவர் தீர்த்து வைத்ததாக "என் சரித்திரம்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 ஜைனப் பெண்கள் சீவக சிந்தாமணி உள்ளிட்ட ஜைன நூல்களை நன்றாகக் கற்றவராக இருப்பர். அவருள் அம்மணியம்மாள் என்பவரும் ஒருவர். இவர், "சோபன மாலை' என்ற நூலை ஏட்டுப் பிரதிகளில் இருந்து பதிப்பித்த செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது.
 இவர், நரியம்புத்தூர் பாஹூபலி நயினார் குமாரத்தி ஆவார். "சோபன மாலை' என்ற மங்கள வாழ்த்துப் பாமாலையை, ஜைன மார்க்கத்திலுள்ள "சமஸ்த சிராவக சிராவகி'யை (இல்லறத்தார்) மகா ஜனங்கள் எளிதில் அறிவதற்காக ஏட்டிலிருந்து அச்சாக்கியுள்ளார். 225 வரிகளை உடையது இந்த சோபன மாலை.
 பிண்டியாம் அசோக மர நிழலில் அமர்ந்த கடவுளாம் நேமிநாதர் பாதத்தைத் தலைமேல் கொண்ட சர்வாணயக்ஷரையும் அவரின் தேவியான தரும தேவியையும் போற்றி வாழ்த்திப் பாடும் நூல் சோபன மாலை.
 ஒரு பெண் பல பெண்களை அழைத்து, "பாருங்கடி' என்று அழைக்கும் அழகியல் பாடலாக இது அமைந்துள்ளது. திருமணங்களில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அமரச் செய்து, தரும தேவியை வணங்கி இந்த மாலையைப் பாடுவராம். இதைக் கலியாண வாழ்த்து என்றும் அழைப்பராம். திண்டிவனம் அருகிலுள்ள பெருமாண்டூர் என்ற பெருமாண்டை ஊரில் கோயில்கொண்ட நேமிநாதரின் பாதங்களைத் தலைமேல் கொண்டவர் தருமதேவி. இத்தேவி மேல் பெண்கள் சோபனம் பாடுகிறார்கள்.
 
 "அனகனை மாமுடி வைத்தவள்
 அருகர் திருவறங் காத்தவள்
 மனமகி ழுஞ்சருவா ணயக்ஷர்
 மருவும்பூ மாதுக்குச் சோபனம்'
 
 இந்நூல் ஆங்காங்கே சில வரலாற்றுக் கருத்துகளையும் விளக்கிச் சொல்கிறது. பரராச சிங்க பராக்கிரமனாம் மகாராச ராசேந்திரன் முன்னிலையில் புத்தர்கள் வாது செய்ய வர, மன்னவன் வினாவைத் தொடுக்க, அதற்குப் புத்தர்கள் மறுமொழி உரைக்கின்றனர். இவ்வாறு ஏழு நாள்கள் தர்கத்திலேயே புத்தர் தம்மை தரும தேவி அருளால் வென்றவர் ஜைனர் என்று பாடல் அமைகிறது. சோபனம் பாடுவார் பெறும் நன்மைகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
 
 "சோபனம் பாடின பெண்களெல்லாம்
 சுந்தர ரூபம் நிறைந்திடுவீர்!
 சோபனம் பாடின பெண்களெல்லாம்
 சுபமா யெந்நாளும் வாழ்ந்திருப்பீர்!'
 "சோபனம் பாடின பெண்க ளெல்லாம்
 சுமங்கலி யாயென்றும் வாழ்ந்திருப்பீர்
 அம்மைமேல் சோபனம் பாடின பேர்
 அருந்ததியைப் போல வாழ்ந் திடுவீர்
 அகில சம்பத்து மே பெறுவீர்! '
 
 1886-இல் ஏடுகளைப் படித்துப் பார்த்து, புரட்டி, ஒழுங்காக்கி, அச்சாக்கிப் பதிப்பித்த பெண்மணி அம்மணி அம்மாள். பதிப்பு வரலாற்றில் இவர் பெயரும் பதிவு செய்யப்படவேண்டிய - போற்றப்பட வேண்டிய ஒன்று.
 
 -முனைவர் தாயம்மாள் அறவாணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com