மேல் வைப்பு

"மேல் வைப்பு' என்னும் யாப்பு வகை, பக்தி இலக்கிய காலத்தில் தோன்றிய ஒரு புதுவடிவாகும். திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி ஆறாம் பத்து-முதல் திருமொழி முழுவதும் இவ்வகையில் அமைந்துள்ளது

"மேல் வைப்பு' என்னும் யாப்பு வகை, பக்தி இலக்கிய காலத்தில் தோன்றிய ஒரு புதுவடிவாகும். திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி ஆறாம் பத்து-முதல் திருமொழி முழுவதும் இவ்வகையில் அமைந்துள்ளது. ஞானசம்பந்தர் தேவாரத்திலும் (262, 263, 366) இவ் அமைப்பு உள்ளது. ஈரடி மேல் வைப்பு, நாலடி மேல் வைப்பு - என இதில் இரு வகைகள் அமைந்திருப்பதை இந்நூல்கள் காட்டுகின்றன.
 இரண்டடிப் பாடலுக்கு மேல் வேறு இரண்டடிகள் வைக்கப்படுவது முதல் வகை. இவ்வாறு மேல் வைக்கப்படும் அடிகள், அப்பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் ஒன்றாகவே அமைவதுண்டு. இவ்வகை ஞானசம்பந்தர் தேவாரத்தில் மட்டுமே அமைய, 4 அடிச் செய்யுளைத் தொடர்ந்து இவ்வாறு 2 அடிகள் வைக்கப்படும், 4 அடி மேல் வைப்புச் செய்யுள் தேவாரத்திலும், திவ்வியப் பிரபந்தத்திலும் காணப்படுகின்றன.
 இரு பகுதிகளால் அமையும் இம் மேல் வைப்புச் செய்யுளின் முதற்பகுதி 2 அடியாலோ 4 அடியாலோ அமைந்து, பிற பாவினங்களை ஒத்து வருகின்றது என்றாலும், மொத்த அமைப்பில் வேறுபாடு அமைவதால், பாவினங்களில் உள்ளடங்காமல் நிற்கின்றன. மேல் வைப்பின் இரண்டாம் பகுதி ஈரடிச் செய்யுளாக அமைந்து, அளவொத்த குறள் வெண் செந்துறையாகவோ, ஈற்றடி குறைந்த குறள் தாழிசையாகவோ வருகிறது. முதற்பகுதி ஓர் எதுகையாகவும், பிற்பகுதி வேறொரு எதுகையும் பெறும் நிலை காணப்படுகிறது (பெ.தி. 6 : 1 : 4).
 
 ""நிலவொடு வெயில் நில விருசுடரும்
 உலகமும் உயிர்களும் உண்டொருகால்
 கலை தரு குழவியின் உருவினையாய்
 அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே
 ஆண்டாய்! உனைக் காண்பதோர் அருள் எனக்கருதியேல்
 வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே''
 - முனைவர் இரா.வ. கமலக்கண்ணன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com