"வரலாற்றுப் பேரறிஞர்' தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு வடக்கே மண்ணியாற்றின் வடகரையில் அமைந்துள்ள திருப்புறம்பயம் எனும் ஊரில் 1892-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் நாள், வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும்,
"வரலாற்றுப் பேரறிஞர்' தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு வடக்கே மண்ணியாற்றின் வடகரையில் அமைந்துள்ள திருப்புறம்பயம் எனும் ஊரில் 1892-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் நாள், வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர்.
 பண்டாரத்தார், பள்ளியில் பயின்றபோது வரலாற்றறிஞர் து.அ. கோபிநாதராயர் எழுதிய "சோழவம்ச சரித்திரச் சுருக்கம்' என்ற நூலைப் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். அந்நூலைப் பயின்றபோது சோழர் வரலாற்றை விரித்தெழுத வேண்டும் என்ற எண்ணம் இவர் மனதில் தோன்றியது.
 கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில், "கல்லாடமும் அதன் காலமும்' என்ற தலைப்பில் பண்டாரத்தார் உரையாற்றினார். இவ்வுரை அறிஞரிடையே பண்டாரத்தாருக்குப் பெரும் புகழை ஈட்டித்தந்தது.
 முதன்முதலாகத் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக ஒன்றரை ஆண்டுகாலம் பணியாற்றினார். பின்னர் குடந்தை நகர உயர்நிலைப்பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்த இவருடைய ஆசிரியர் வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை விடுமுறையில் இருந்தபோது, அப்பள்ளியில் ஒருமாத காலம் தலைமைத் தமிழாசிரியராகவும், 1917 முதல் 1942-ஆம் ஆண்டு வரையில் 25 ஆண்டுகாலம் குடந்தையிலுள்ள "வாணாதுறை' உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், தலைமைத் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
 குடந்தையில் இருந்தபோது, அவரது ஆய்விற்குக் குடந்தை அரசினர் கல்லூரி நூலகம் பெரிதும் பயன்பட்டது. ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள பல ஊர்களுக்கும் சென்று, கோயில்களிலுள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்து வந்து, ஆய்வு செய்து, அந்த ஆய்வில் கண்ட முடிவுகளை அவ்வப்போது இதழ்களில் எழுதிவந்தார்.
 1914-ஆம் ஆண்டில் செந்தமிழில் இவர் எழுதிய "சோழன் கரிகாலன்' என்னும் கட்டுரையே இவரது முதல் கட்டுரை. ஆரம்பத்தில் செந்தமிழ் இதழில் எழுதத் தொடங்கிய அறிஞர் பண்டாரத்தார், தொடர்ந்து தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி ஆகிய இலக்கிய இதழ்களில் எழுதி வந்தார். தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் பண்டாரத்தாருக்கு அடிக்கடி கடிதம் எழுதி, தமிழ்ப் பொழிலுக்குக் கட்டுரை எழுதுமாறு தூண்டினார்.
 கும்பகோணத்தில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 1933 முதல் 1938 வரை "யதார்த்த வசனி' என்ற இதழின் துணை ஆசிரியராக இருந்து எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவர்தம் ஆசிரியர் வலம்புரி பாலசுப்பிரமணிய பிள்ளையுடன் சேர்ந்து எழுதிய "சைவ சமய சிகாமணிகள் இருவர்' என்னும் நூலும், கும்பகோணத்தில் இருந்தபோது எழுதிய கருணாகரத் தொண்டைமான் பற்றிய நூலும் வெளிவரவில்லை. "முதல் குலோத்துங்க சோழன்' என்ற நூல் 1930-ஆம் ஆண்டு வெளிவந்தது.
 வரலாற்றறிஞரான பண்டாரத்தார், நீதிக்கட்சியின் கருத்துகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அக்கட்சி நடத்திய ஒவ்வொரு மாநாட்டிலும் தவறாமல் கலந்து கொண்டார்.
 1942-ஆம் ஆண்டில் சர்.கே.வி. ரெட்டி நாயுடு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபொழுது அப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறை விரிவுபடுத்தப்பட்டது. அப்போது உமாமகேசுவரம் பிள்ளை, புதுக்கோட்டை வழக்குரைஞர் நாகராச ஐயர் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.
 அங்கு ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, கோ. சுப்பிரமணிய பிள்ளை,
 க. வெள்ளைவாரணர் முதலிய நல்ல நண்பர்கள் அவருக்குக் கிடைத்தனர். பணியில் சேர்ந்ததும் பல்கலைக்கழக நிர்வாகம் அவருக்குப் பிற்காலச் சோழர் வரலாற்றை எழுதுவதற்கு அனுமதி வழங்கியது. பிற்காலச் சோழர் சரித்திரத்தின் முதல் பாகம் 1949-ஆம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 1951-ஆம் ஆண்டிலும் பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன.
 இவற்றைத் தொடர்ந்து சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகத்தையும், தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600), தமிழ் இலக்கிய வரலாறு (13, 14, 15-ஆம் நூற்றாண்டுகள்) ஆகிய நூல்கள் 1955-ஆம் ஆண்டு வெளிவந்தன. சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகம் 1961-ஆம் ஆண்டில் மீண்டும் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்தது.
 இவரின், பிற்காலச் சோழர் வரலாறு நூல் தமிழில் வெளிவந்த பின்னர்தான் பிற்காலச் சோழர்களின் பெருமைகளைத் தமிழுலகம் அறியத் தொடங்கியது. பண்டாரத்தாரின் சோழர் சரித்திரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் பயின்ற மாணவர்களுக்குப் பாடநூலாகவும் வைக்கப்பெற்றிருந்தது.
 நம்பகத்தன்மையோடு அறிஞர் பண்டாரத்தார் தமது நூல்களை எழுதிய காரணத்தாலேயே அவரது "பிற்காலச் சோழர் சரித்திரம்' என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன் போன்றோர் தங்களது வரலாற்று நாவல்களைப் படைத்தனர். "இத்தகைய அரிய நூலைப் படைத்த காரணத்திற்காகப் பண்டாரத்தாருக்குத் தாமும் தமிழ்கூறும் நல்லுலகமும் பெரிதும் கடமைப்பட்டிருப்பதாக' கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி நன்றியுடன் தமது "சோழர் கால சரித்திர ஆதாரங்கள்' என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
 திருப்புறம்பயத் தல வரலாறு, செம்பியன் மாதேவித் தல வரலாறு, காவிரிப்பூம்பட்டினம், திருக்கோவலூர் புராணம், தொல்காப்பியப் பாயிரவுரை முதலிய பல நூல்களையும் எழுதித் தமிழன்னைக்கு அணிசெய்துள்ளார் பண்டாரத்தார்.
 மறைமலையடிகள், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், திரு.வி.க., தமிழ்த் தாத்தா உ.வே.சா., கவிமணி, ரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ.மீ., வையாபுரிப் பிள்ளை முதலிய பல தமிழறிஞர்கள் இவரது நெருங்கிய நண்பர்களாக விளங்கினர்.
 சிறந்த சிவபக்தி உடையவராகவும் பண்டாரத்தார் விளங்கினார். இவர் 1928 முதல் தாம் இறக்கும் வரை தமது பிறந்த ஊரான திருப்புறம்பயத்திலுள்ள கோயிலில் சைவ சமயக் குரவர் நால்வருக்கும் ஆண்டுதோறும் குருபூசை நடத்தி வந்துள்ளார். மேலும், சைவ சமயக் குரவர் நால்வருக்கு மண்டபம் கட்டித் தந்துள்ளார்.
 18-க்கும் மேற்பட்ட ஊர்களின் வரலாற்றுச் சிறப்பினை ஆய்வின் மூலம் கண்டறிந்து கூறியுள்ளார்.
 தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட தமிழ்க் கலைக்களஞ்சியப் பதிப்பாசிரியர் குழுவிலும், தமிழ்ப்பொழில் இதழாசிரியர் குழுவிலும் உறுப்பினராக இருந்தவர்.
 இவருடைய ஆய்வுத் திறமையைக் கண்ட மதுரை திருவள்ளுவர் கழகம் 1956-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் நாள், "ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
 தஞ்சாவூரில் ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை இராசராசன் விழாவை முதன் முதலாக ஆரம்பித்தபொழுது அறிஞர் பண்டாரத்தார் அக்கூட்டத்தில் முதற் சொற்பொழிவினை நிகழ்த்திச் சிறப்பித்தார்.
 1959-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிஞர் பண்டாரத்தார் நோய்வாய்ப் பட்டார். தமது உடல் நோயுற்ற காலத்திலும் கல்வெட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடும் நினைவாற்றலும் கொண்டவராகக் காணப்பட்டார். இறுதிக் காலத்திலும் தொடர்ந்து ஆய்வுப் பணிகளைச் செய்துவந்தார்.
 "தமிழ்நாட்டிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நான் செய்ய வேண்டுவன நிறைய இருப்பதாகவே நினைக்கிறேன். அந்தத் தொண்டு என்னை மகிழ்வித்தும், அதுவே பெருந்துணையாகவும் நிற்பதால் அதினின்றும் விலக விரும்பவில்லை'' என்று இறுதிக் காலத்தில் குறிப்பிட்டுள்ளார்.÷
 இவ்வாறு ஆய்வுலகில் பலராலும் ஏற்கத்தக்க வகையில் தமக்கென்று ஓர் ஆராய்ச்சி நெறிமுறையை வகுத்துக்கொண்டு, நடுநிலையுடன் செயல்பட்ட அறிஞர் பண்டாரத்தார், 1960-ஆம் ஆண்டு ஜனவரி 2ஆவது நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
 டாக்டர் மா. இராசமாணிக்கனார் விடுத்த, "கல்வெட்டு ஆராய்ச்சி அதன் முதல்வரை இழந்துவிட்டது. ஆராய்ச்சி அறிஞர் தங்கள் அண்ணாவை இழந்துவிட்டனர். தமிழ் ஆராய்ச்சி என்னும் தாய் தம் செல்வ மகனை இழந்துவிட்டாள். உலகம், எதைக் கேட்டாலும் சொல்லவல்ல பேரறிஞரை இழந்துவிட்டது'' என்ற இரங்கல் செய்தி அனைவரது நெஞ்சையும் உருக்கும் வகையில் அமைந்திருந்தது.
 பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த அறிஞர் சதாசிவ பண்டாரத்தாரின் கல்வெட்டு, வரலாற்று ஆராய்ச்சித் தமிழ்ப்பணி தமிழ்கூறு நல்லுலகில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
 
 - முனைவர் சி. சேதுராமன்
 
 ஜனவரி, 2 தி.வை. சதாசிவ பண்டாரத்தாரின் நினைவு நாள்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com