இந்த வார கலாரசிகன்

தமிழ் இலக்கிய முன்னோடிகள் வரிசையில்' அப்பரைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவின் அடுத்த பதிவு தெய்வப் புலவர் வள்ளுவப் பேராசன் பற்றியது.
இந்த வார கலாரசிகன்

தமிழ் இலக்கிய முன்னோடிகள் வரிசையில்' அப்பரைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவின் அடுத்த பதிவு தெய்வப் புலவர் வள்ளுவப் பேராசன் பற்றியது. கவிஞர் வைரமுத்து அடுத்த கட்டுரை தயாராகிறது என்று தெரிவித்தவுடனேயே, அது யாரைப் பற்றியதாக இருக்கும் என்கிற பேராவல் எனக்கு இருந்ததில் வியப்பில்லை.
பாரதியும், கம்பனும் எழுதப்பட்டுவிட்டதால், அடுத்தது நிச்சயமாகத் திருவள்ளுவரோ, இளங்கோவடிகளோ இருக்கக்கூடும் என்று கணித்திருந்தேன். எனது எதிர்பார்ப்புப் பொய்க்கவில்லை. கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளில் வையத்தை வாழ்வாங்கு வாழ வைத்த உலகப் பொதுமறை வழங்கிய வள்ளுவப் பேராசானைப் பற்றிய கட்டுரையைப் படிக்க மனம் துடித்துக் கொண்டிருக்கிறது.
பாரதியார், கம்பன் இருவரைப் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகள் மக்கள் மத்தியில் கவிஞரால் அரங்கேற்றப்பட்டதுபோல, வள்ளுவர் பற்றிய கட்டுரையும் அரங்கேற்றப்பட வேண்டும் என்று நான் விழைந்ததில் வியப்பில்லை. ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது.
பாரதியார் பற்றிய பதிவு சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனிலும், கம்பரைப் பற்றிய பதிவு சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாதெமி அரங்கத்திலும் கவிஞரால் அரங்கேற்றப்பட்டது முதல், தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், அடுத்த கட்டுரை தங்கள் ஊரில்தான் அரங்கேற்றப்பட வேண்டும் என்கிற அன்புக் கட்டளைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. அப்பர் குறித்த கட்டுரை, வாசகர்கள் மத்தியில் அரங்கேற்றப்படவில்லை என்பதில் பலருக்கும் என்மீது கோபம்.
அப்பரைப் பற்றிய கட்டுரைக்கு வண்டிவண்டியாக வந்த பாராட்டுக் கடிதங்கள் அனைத்திலுமே, அந்தக் கட்டுரையை ஏன் வாசகர்கள் மத்தியில் அரங்கேற்றவில்லை என்று கேட்கப்பட்டிருந்தது. இப்போது தெய்வப்புலவர் திருவள்ளுவர் எனும்போது, அதை வாசகர்களுக்குக் கவிஞரே தனது குரலில் படித்துக் காட்டாமல் போனால், வாசகர்கள் என்னை ஒருவழி செய்து
விடுவார்கள் என்பது தெரியும்.
இந்த முறையும் சென்னையில் என்றால் "தினமணி' வாசகர்களும், வைரமுத்துவின் ரசிகர் வட்டமும் மனம் துவண்டு விடுவர். கடந்த முறையே பல ஊர்களிலிருந்தும் வாசகர்கள் "சென்னையைவிட்டு வெளியே வாருங்கள்' என்று கலகக்குரலே எழுப்பினார்கள் என்பதால், இந்தமுறையும் சென்னை என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கவிஞருக்கு எத்தனையோ பணிகள். ஆனாலும் கூட, வாசகர்களின், ரசிகர்களின் அன்புக் கட்டளையைத் தட்டவில்லை. "எங்கே?' என்கிற கேள்வியே எங்களுக்கு இடையே எழவில்லை. குறள் அரங்கேற்றப்பட்ட சங்கம் வளர்த்த மதுரையில்தான் கவிஞரின் திருவள்ளுவர் பற்றிய "வள்ளுவர் முதற்றே உலகு' கட்டுரை அரங்கேற வேண்டும் என்று ஒரேநேரத்தில் இருவருமே சிந்தித்தோம் என்பதுதான் தனிச் சிறப்பு.
ஆம். வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மதுரையிலுள்ள ராஜா முத்தையா மன்ற அரங்கில் மாலை 6 மணிக்கு கவிஞர் வைரமுத்து "தமிழ் இலக்கிய முன்னோடிகள்' வரிசையில் அடுத்ததாக "தினமணி'யில் எழுத இருக்கும் திருவள்ளுவர் பற்றிய "வள்ளுவர் முதற்றே உலகு' கட்டுரை அரங்கேற இருக்கிறது. இதையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு, அந்த வரலாற்று நிகழ்வில் பங்குபெற வந்துவிடுங்கள்!

கடந்த வியாழக்கிழமை சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பில் நடந்த "விவேகானந்த நவராத்திரி விழா'வில் கலந்துகொண்டு உரையாற்றச் சென்றிருந்தேன். விழா நடந்த இடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லம். அதென்ன "விவேகானந்த நவராத்திரி' என்றுதானே கேட்க நினைக்கிறீர்கள்? இருக்கிறது... காரணம் இருக்கிறது.
பிரெடரிக் ட்யூடர் என்கிற ஐஸ் வியாபாரி, ஐஸ் கட்டிகளைப் பாதுகாத்து வைப்பதற்காக 1842-இல் கட்டிய கட்டடம்தான் இப்போது விவேகானந்தர் இல்லமாகக் காட்சி அளிக்கிறது. 1880-இல் அவரது வியாபாரம் நொடித்துப் போய், அன்றைய சென்னையின் பிரபல வழக்குரைஞரான பிலிகிரி ஐயங்காருக்கு அந்தக் கட்டடத்தை விற்றுவிட்டார் பிரெடரிக் ட்யூடர். பிலிகிரி ஐயங்கார் அந்தக் கட்டடத்தை வாங்கிப் புதுப்பித்துக் கட்டி, அதற்குத் தனது நண்பரும், உயர்நீதிமன்ற வெள்ளைக்கார நீதிபதியுமான கெர்னலின் பெயரைச் சூட்டினார்.
சுவாமி விவேகானந்தர், சிகாகோ சர்வ சமய மாநாட்டில் கலந்துகொண்டு, மேலை நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு 1897-இல் சென்னை வந்தார். சென்னையில் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை, ஒன்பது நாள்கள் தங்கி இருந்தார். அவர் தங்கியிருந்த இந்த இடம்தான் இப்போது விவேகானந்தர் இல்லமாகக் காட்சியளிக்கிறது. அவர் தங்கியிருந்த அந்த ஒன்பது நாள்களைத்தான் விவேகானந்த நவராத்திரியாக, ஸ்ரீராமகிருஷ்ண மடம் கொண்டாடுகிறது.
"விவேகானந்த நவராத்திரி' நிகழ்ச்சிக்குப் போயிருந்தபோது, தான் எழுதிய "எளிய தியானப் பயிற்சிகள்' என்கிற புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார் சுவாமி விமூர்த்தானந்தர். கடந்த சில மாதங்களாகவே என் நண்பர் பி.வி. சுப்பிரமணியத்தின் தொடர்ந்த வற்புறுத்தலால் மூச்சுப் பயிற்சி செய்யத் தொடங்கியிருப்பதால், சற்று ஆர்வத்துடன் அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். இதுவரை தியானம் குறித்து எனக்குத் தெரிந்திராத பல புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
தியானம் பற்றி பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோர் கூறியிருப்பது மட்டுமல்லாமல், 17 வகையான பயிற்சிகள் குறித்தும் தரப்பட்டிருக்கிறது. தியானிப்பவரையும், தியானிக்கப்படும் பொருளையும் இணைப்பதுதான் தியானம் என்று கூறும் சுவாமி விவேகானந்தர், தியானத்திற்கு உரிய சில வழிகளையும் குறிப்பிடுகிறார்.
""தலைக்கு மேலே பல அங்குல உயரத்தில் ஒரு தாமரைப் பூ இருப்பதாக நினையுங்கள். தர்மம் அதன் மையம். ஞானம் அதன் தண்டு. தாமரையின் எட்டு இதழ்களும் யோகியின் அஷ்டமாசித்திகள். தாமரைப் பூவின் உள்ளே இருக்கும் மகரந்த கேசரங்களும் சூல் பைகளும் தியாகம். தாமரையின் நடுவில், ஓங்காரம் எனும் பெயரை உடைய, விளக்க முடியாத, பேரொளியால் சூழப்பட்டவரான இறைவனை தியானம் செய்யுங்கள்'' என்கிறார் சுவாமிஜி.
மூச்சுப் பயிற்சி வரை வந்திருக்கிறேன். இனி அடுத்த கட்டமாக தியானத்திற்குள் நகர வேண்டும். கைவிரலைப் பிடித்து அதற்குள் அழைத்துச் செல்கிறது சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய "எளிய தியானப் பயிற்சிகள்' என்கிற இந்தப் புத்தகம்.

முகநூலில் பகிரப்பட்ட கவிதையொன்றை முதுநிலை உதவி ஆசிரியர் இடைமருதூர் கி. மஞ்சுளா எனது பார்வைக்குக் கொண்டு வந்தார். ஸ்ரீதர் பாரதி என்பவர் எழுதிய கவிதை அது. விவசாயத்தைக் கைவிட்டு சென்னைக்கு தங்கள் குழந்தைகள் வீட்டில் குடியேறிவிட்ட பலரும் சொல்லக் கேட்பதுதான். ஆனால், அதையே நறுக்கென்று மூன்றே வரிகளில் கவிதையாக்கி விட்டிருக்கிறார் ஸ்ரீதர் பாரதி.
வித்திட்டோம்
பயனில்லை
விற்று விட்டோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com