வெக்கை தனியா வேசாடு!

சங்ககாலப் பாடல்களைப் போலவே தனிப் பாடல்களிலும் உவமைகள் விரவிக் கிடக்கின்றன.
வெக்கை தனியா வேசாடு!

சங்ககாலப் பாடல்களைப் போலவே தனிப் பாடல்களிலும் உவமைகள் விரவிக் கிடக்கின்றன. தனிப்பாடல் ஒன்றில், சேந்தன் பனையவயல் சிவக்கவிராயர், சித்திரை மாதக் கத்திரி வெயிலைப் பாடுகின்றார். இப்பாடல் அகப்பாட்டில் அடங்கும். சித்திரைத் திங்களில் கொடுமையான வெப்பம் எல்லா உயிர்கட்கும் சொல்லொனாத் துயர் தருகிறது. தோழி கூற்றான இப்பாடல் தலைவியின் துயரினை எடுத்துரைக்கிறது.
சித்திரைத் திங்கள், முழு வெண்நிலவும் விண்மீன்களும் ஒளிவீசிக்கொண்டு உலவுகின்றன. இல்லத்து உறைகின்ற மக்கள் பாய், படுக்கைகளை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளியே வந்து, காற்று வாங்கி இளைப்பாற விரித்துப் போடுகின்றனர். அந்த நள்ளிருள் யாமத்தில் சிறிதும் காற்றில்லாமல் தவித்து, அடைகாத்திருக்கும் புறா ஒன்று நடுநடுங்கி வெக்கை (வெப்பம்) தனியாது வேதனைப்பட்டு "அக்கக்கோ' என்று அலறுகின்றது. இவ்வூரில் எவரும் கண்பொறாது விழித்திருக்கின்றனர். பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய பாவையே! எம் தோழியே, நின் மென்மைத் தன்மை கொண்ட கைகள் வேகும் அளவிற்கு விசிறுகின்றாய்! உன் கண்கள் தலைவன் வந்து சந்திக்கும் வேங்கை மரத்தடியைப் பார்த்தவாறே இருக்கின்றனவே! என்று தோழி தலைவியின் ஆற்றாமை குறித்துப் பாடுகின்றாள். அப்பாடல் வருமாறு:

""நள்ளிருள் யாமத்து நடுங்குதுயர் அடைப்புறவு
வெக்கை தனியா வேசாட்டுடனே
அக்கக்கோ என அலறுதும் அம்ம,
சித்திரை உடுவும் மதியும் மாந்தரும்
நித்திரை பெறாஅஃது நெடிது கண் விழிப்ப
பைத்தரவு அல்குல் பாவை நின் பார்வை
வேம்கை விசிற வேங்கைக் கண் நோக்கும்
மலைநாடன் வரவோ? வளி வரவோ?''

சித்திரைத் திங்களின் கொடிய வெப்பத்தால் காட்டுப் புறாவுக்குக்கூட வெக்கையானது கொடிதாகின்றது. சித்திரை வெயிற் காலத்தில் இன்றும் நடுவானில் நிலவுக்குச் சற்றுக் கீழே சித்திரை உடுத்தோன்றும். காலக் கணிப்பும் கவிநயமும் நிறைந்து காணப்பெறுவது நந்தமிழ் இலக்கியங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com