இந்த வார கலாரசிகன்

கடந்த வியாழக்கிழமை அலுவலக வேலை நிமித்தம் விழுப்புரம் சென்றிருந்தேன். புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முனைவர் வி. முத்துவை சற்றும் எதிர்பாராமல் சந்தித்தேன்.
இந்த வார கலாரசிகன்

கடந்த வியாழக்கிழமை அலுவலக வேலை நிமித்தம் விழுப்புரம் சென்றிருந்தேன். புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முனைவர் வி. முத்துவை சற்றும் எதிர்பாராமல் சந்தித்தேன்.
எங்கெல்லாம் தமிழ் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் முனைவர் வி. முத்துவைக் காணலாம். புதுவையில் உள்ள அவரது வீட்டிற்கே "தமிழ்' என்று பெயர் சூட்டும் அளவுக்குத் தமிழ் மீது அவருக்கு மாளாப்பற்று. "தினமணி' நடத்தும் எல்லா இலக்கிய நிகழ்வுகளிலும் தவறாமல் கலந்து கொள்வார். முனைவர் முத்துவைத் தெரிந்திராத தமிழறிஞர்களே இருக்க
முடியாது.
 முனைவர் முத்து புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். புதுச்சேரி சட்டப்பேரவைத் துணைத் தலைவர் சிவக்கொழுந்து கம்பன் கழகச் செயலாளராகவும், முனைவர் அறிவுடைநம்பி புதுவை திருக்குறள் மன்றம் (புதினம்) அமைப்பின் செயலாளராகவும், இப்போது முனைவர் முத்து புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இருப்பது புதுவைக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு என்றுதான் கூறவேண்டும். இவர்கள் போட்டி போட்டுக்கொண்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்த முற்படும்போது, புதுவையில் தமிழ் முழக்கம் ஓங்கி ஒலிக்கும்.

வியாழனன்று விழுப்புரத்தில் என்றால், வெள்ளியன்று தஞ்சையில். தஞ்சைக்குப் போனதும் எனக்கு நினைவுக்கு வந்தது வாசகர் அம்மாப்பேட்டை ராஜாமணியைத்தான். தலையங்கம் பற்றி, "தினமணி' கட்டுரைகள் பற்றி, நான் கலந்து கொள்ளும் விழாக்கள் பற்றி அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொள்வார். தலையங்கம் குறித்தும் பாராட்டுவார், விமர்சிப்பார், தமது கருத்துகளைக்
கூறுவார்.
இப்படி நாங்கள் நீண்ட காலமாகத் தொலைபேசித் தொடர்பில் இருந்திருக்கிறோமே தவிர, நேரில் சந்தித்ததில்லை. இந்த முறை வாசகர் ராஜாமணியைச் சந்தித்துவிட வேண்டும் என்று சென்னையிலிருந்து கிளம்பியபோதே தீர்மானித்திருந்தேன். அம்மாப்பேட்டைக்குச் சென்று சந்திக்கவும் செய்தேன்.
அம்மாப்பேட்டையில், "ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ராஜாமணி' என்று சொன்னால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அகவை 75 கடந்தும் உற்சாகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒரே மகன் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். இரண்டு மகள்கள்.
பெரியார், ராஜாஜி, அண்ணா ஆகியோரை, தான் நேரில் சந்தித்துப் பேசியதை எல்லாம் என்னிடம் நினைவுகூர்ந்து பகிர்ந்து கொண்டார். ""இறைவன்
எனக்கு எல்லா நலன்களையும் தந்திருக்கிறான். முழுமையான மனத் திருப்தியும் மன நிம்மதியும் கிடைக்கப்பெற்ற "வாழ்க்கை என்னுடையது. என்னால் முடிந்த அளவு பிறருக்கு உதவுகிறேன். எனக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடுக்கிறேன்'' என்று அவர் தன்னைப் பற்றிக் கூறியபோது, "இதுவல்லவா வாழ்க்கை,
இவரல்லவா மனிதர்' என்று நினைக்கத் தோன்றியது.
நிறைவான மனது கிடைக்கப் பெற்றால் அதுதான் நிறைவான வாழ்க்கை. என் நெஞ்சை நெகிழ வைத்த சந்திப்பு அது.

தஞ்சை வரை சென்றுவிட்டு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குள் போகாமல் இருக்க முடியுமா? உள்ளே நுழையும்போதே, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் துணைவேந்தர் ஐயா வ.அய்.சுப்பிரமணியத்தின் நினைவு நிழலாடியது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் என்பது மிகப்பெரிய கனவு. அந்தக் கனவை நோக்கிய பயணம் இன்றும் நெடுந்தூரம் இருக்கிறது.
துணைவேந்தர் முனைவர் க. பாஸ்கரனை சந்திக்கச் சென்றதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன. முன்னொருமுறை நாங்கள் சந்தித்தபோது, தமிழிசை விழாவொன்றைத் தஞ்சையில் நடத்த வேண்டும் என்கிற எனது விருப்பத்தை அவரிடம் நான் தெரிவித்திருந்தேன். ஒருவார விழாவாக, பண்ணிசை, வாத்திய இசை, குரலிசை மூன்றும் இடம்பெறும் விதத்தில் தமிழிசை விழா அமைய வேண்டும் என்பதுதான் எனது அவா. தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அந்த இசைவிழாவை நடத்துவது என்பதுதான்
நோக்கம்.
அடுத்தாற்போல, இந்திப் பிரசார சபையைப் போல, தமிழ் கற்றுக் கொடுக்கும் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, தமிழகத்திலும் அதற்கு வெளியிலும் ஆங்கில வழி கல்வி கற்கும் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பது, அதற்கான தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்குவது என்கிற முயற்சியில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைப்பது. எனது இரண்டு நோக்கங்களும் விரைவில் ஈடேறும் என்கிற நம்பிக்கை பிறந்தி
ருக்கிறது.
துணைவேந்தர் முனைவர் க.பாஸ்கரன் தாம் எழுதிய "தியாகராஜர் கீர்த்தனைகளில் தத்துவச் சிந்தனைகள்' என்கிற புத்தகத்தை அன்பளிப்பாகத் தந்தார். துணைவேந்தர் தத்துவம் படித்தவர்; சைவ சித்தாந்தத்தில் தோய்ந்தவர்; இசையில் நாட்டம் உள்ளவர். அவையெல்லாம் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது வெளிப்படுகின்றன.
இரவோடு இரவாக அந்தப் புத்தகத்தைப் படித்து விட்டேன். தியாகராஜரின் கீர்த்தனைகளில் உள்ள பக்தி ரசத்தை வியந்து போற்றுபவன் நான். அதற்குள் இந்த அளவுக்குத் தத்துவச் சிந்தனைகளும் இருக்கின்றன என்பதை உணர்ந்
தேனல்லன். மதுர பாவனை, சாந்த பாவனை, காந்த பாவனை, வாத்சல்ய பாவனை, சத்ய பாவனை, தாஸ்ய பாவனை என்கிற ஆறு வகை பக்தி நிலைகளும் தியாகராஜரும் என்று எடுத்துக்காட்டியிருப்பதும், மேற்குறிப்பிட்ட பக்தி நிலைகளில் ராதா, மீரா, ஆண்டாள், பிரகலாதன், யசோதை, குசேலர், சுந்தரமூர்த்தி நாயனார், அனுமன், அப்பர் பெருமான் ஆகியோரைக் குறிப்பிட்டுக் காட்டியிருப்பதும் மிகவும் சிறப்பு.
தியாகராஜ சுவாமிகளை ஒரு சீரிய தத்துவ ஞானியாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் துணைவேந்தர் முனைவர் க.பாஸ்கரனின் முயற்சி போற்றுதலுக்குரியது.

சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும், உதவித் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார் இரா.எட்வின் என்பதும், "காக்கைச் சிறகினிலே...' இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பொறுப்பு வகிக்கிறார் என்பதும், பன்முக ஆளுமை கொண்டவர் என்பதும் இவரது முகநூலில் காணப்படும் விவரங்கள்.
அடுத்த முறை திருச்சி செல்லும்போது இவரை நேரில் சந்திக்க வேண்டும். அவரது முகநூல் பதிவில் காணப்பட்ட கவிதை இது :

மாறுவதே இல்லை
நீரின் பயணம்..
ஊர் எதுவாயினும்.
கீழிருந்து மேலாய்
குடிநீரும்...
மேலிருந்து கீழாய்
சாக்கடையும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com