"தமிழ்த் தாத்தா'வும் மகாகவிகளும்!

உ.வே.சா., தம் வாழ்நாள் முழுவதும் ஓலைச்சுவடிகளைத் தேடி எடுத்து பதிப்பித்ததோடு, சிறந்த முகவுரையும் ஆராய்ச்சி உரையும் எழுதி வெளியிட்டார்.
"தமிழ்த் தாத்தா'வும் மகாகவிகளும்!

உ.வே.சா., தம் வாழ்நாள் முழுவதும் ஓலைச்சுவடிகளைத் தேடி எடுத்து பதிப்பித்ததோடு, சிறந்த முகவுரையும் ஆராய்ச்சி உரையும் எழுதி வெளியிட்டார். அக்காலத்தில் வாழ்ந்த கவிஞர்களும் புலவர்களும் உ.வே.சா.வின் பதிப்புப் பணிகளையும் ஏடுதேடிச் சென்றபோது பட்ட துன்பங்களையும், அவர் பெற்ற விருதுகளையும் போற்றி புகழ்ந்துள்ளனர். உ.வே.சா.வின் பதிப்புப் பணியைப் பாராட்டி மகாகவி சுப்பிரமணிய பாரதியார் "கும்பமுனி' என்றும், வங்கக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் "அகத்தியர்' என்றும் அழைத்துள்ளனர்.
உ.வே.சா., "மகாமகோபாத்தியாய' பட்டம் பெற்றதைப் பாராட்ட 1906ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17-ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ் மாணவர்கள் சங்கம் பாராட்டுக் கூட்டம் நடத்தியுள்ளது. அக்கூட்டத்தில் பாரதியார் கலந்துகொண்டு பாடல்கள் பாடியுள்ளதை 1905-6ஆம் ஆண்டு அறிக்கையில் ""மகாமகோபாத்தியாயப் பட்டம் சூட்டப்பட்ட விஷயத்தைக் குறித்துக் கொண்டாடுவதற்குச் சென்னைச் சர்வகலாசாலை அங்கத்தினர்களில் ஒருவராகிய மகா-ஸ்ரீ-ஸ்ரீ.ஜே.எம்.வேலுப்பிள்ளை அவர்களுடைய அக்கிராசனத்தின் கீழ் இவ்வருஷம் மார்ச்சு மாதம் 17ஆம் தேதி ஒருமுறை கூடியது. அப்போது மயிலாப்பூர், பி.எஸ்.ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் மகா-ஸ்ரீ.ஸ்ரீ.இ.வை. அனந்தராமையர் அவர்களும் சுதேசமித்திரன் உதவிப் பத்திராதிபர் ஆகிய மகா-ஸ்ரீ- ஸ்ரீசுப்பிரமணிய பாரதியார் அவர்களும் மற்றும் சிலரும் பாடல்களை நூதனமாக இயற்றிப் படித்தார்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாகவி பாரதியார் ஒரு தாளில் பென்சிலால் மூன்று பாடல்களை எழுதி வாசித்துள்ளார். அதில் "கும்பமுனி' எனத் தோன்றும் சாமிநாதப் புலவன் என்றும்,

""அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி அறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவின் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்
முன்இவன்அப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ!''

என்று புகழ்ந்து பாடியுள்ளார். கி.பி.1918 மே மாதம் 15ஆம் தேதி புதுச்சேரியில் நடந்த சங்கர ஜயந்தி விழாவில் உ.வே.சா.வும் பாரதியாரும் சந்தித்து உரையாற்றியுள்ளனர். இச்சந்திப்பில் ""நான் புதுமைப் புலவன். நீங்கள் பழம் புலவர்களையெல்லாம் வாழச் செய்கிறீர்கள். புலவர் பரம்பரை அழியாமல் காப்பவன் நான். நீங்கள் பழம் புலவர்களைத் தமிழ் மக்கள் மறவாமல் செய்கிறீர்கள். தமிழ்நாட்டில் புலவர் பரம்பரை என்றைக்கும் வாழும். தமிழும் இறவாமல் ஒளிபெற்று விளங்கும். உங்களுக்கு என் மனமார வாழ்த்துக் கூறுகிறேன்'' என்று பாரதியார் கூறியுள்ளார்.
உ.வே.சா. எழுதிய "நினைவுமஞ்சரி' நூலில் "சுப்பிரமணிய பாரதியார்' என்ற கட்டுரையில், மகாகவியின் கவிப்புலமையும் அவர் பெருமைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1.4.1919 அன்று மயிலாப்பூர் டி.எஸ்.இராமசாமி ஐயர் இல்லத்தில் தங்கியிருந்த இரவீந்தரநாத் தாகூரை உ.வே.சா. சந்தித்து உரையாற்றியுள்ளார். அப்போது ""உங்கள் இல்லத்திற்கு வந்து தாங்கள் செய்யும் ஓலைச்சுவடி பதிப்புப் பணியினைப் பார்க்க வேண்டும். நான் வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்'' என்று கூறிய இரவீந்திரநாத் தாகூர், தியாகராச விலாசத்திற்கு வந்து ஏட்டுச்சுவடிகளையும் புத்தகங்களையும் பார்த்து மகிழ்ந்துள்ளார். அப்போது உ.வே.சா., ""தாங்கள் புதிய கவிதைகளை இயற்றி மக்களை மகிழ்விக்கிறீர்கள். நான் பழைய புலவரின் கவிதைகளுக்கு உயிர்கொடுத்துக் காப்பாற்றி வருகிறேன்'' என்றார். உடனே, ""ஆம், இந்த நாட்டில் கவிஞர் பரம்பரை என்றும் போகாது தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்'' என்றாராம் தாகூர்.
உ.வே.சா. மீது பெருமதிப்பு கொண்ட தாகூர் அவரைப் பாராட்டி கவிதை ஒன்றை எழுதி, டி.எஸ்.இராமசாமி ஐயருக்கு அனுப்பியுள்ளார். இதனை "மஞ்சரி' முன்னாள் ஆசிரியர் த.நா.சேனாபதி பெற்று, வங்கா(ள)ளி மொழியிலிருந்ததைத் (ஆதிஜுகேர் ஆந்தாரே தாலபத்ரே ச்சிலோ) தமிழாக்கம் செய்து கட்டுரை
எழுதியுள்ளார்.
""ஆதிகாலத்தில் பனையோலைச் சுவடியில் இருந்த திராவிட நாட்டின் புராதன அந்தப் பெருநிதி, பேராசானே! உன்னால் அன்றோ வெளிப்பட்டது. அந்தக் காலத்து அகஸ்தியனைப் போல நீயன்றோ வந்து உன் அன்னையினைச் சிம்மாசனத்தில் பெருமதிப்புடன் வீற்றிருக்க வைத்தாய்! அம்மட்டோ, ஐம்பெருங் காப்பியங்களுள் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலானவற்றைப் பதிப்பித்து தமிழன்னையின் இணையடியில் சமர்ப்பித்தவர் நீ அன்றோ! சங்க இலக்கியத்தையும் நிலவில் மலர்ந்த முல்லை என ஒளிர வைத்தவரும் நீ அன்றோ! உன்னை வணங்குகிறேன்!'' என்பதுதான் தாகூரின் அந்த வங்காள மொழிக் கவிதையின் தமிழாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com