திருக்குறளின் சாரமான கருத்து

திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. "கடவுள்' என்ற சொல்லுக்குச் சிறப்பான பொருளே அன்புதான்.
திருக்குறளின் சாரமான கருத்து

திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. "கடவுள்' என்ற சொல்லுக்குச் சிறப்பான பொருளே அன்புதான். கடந்து உள்ளிருப்பவர் கடவுள்; கடந்து உள்ளிருப்பது அன்பு. கடவுளால் ஆகாதது இல்லை; அன்பினாலும் ஆகாதது இல்லை. கடவுள் எதையும் எதிர்பார்ப்பது இல்லை; அன்பும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை.
அறிவிற்கு அப்பாற்பட்டவர் கடவுள். எனவேதான் அறிவினால் மட்டும் கடவுளை அடைய முடிவதில்லை. அன்பும் அறிவிற்கு அப்பாற்பட்டதுதான். சில நேரங்களில் அறிவைத் தள்ளிவிட்டு அன்பு வேலை செய்யும். கடவுளை அடைவதுதான் மனித வாழ்க்கையின் குறிக்கோள். அன்புடைத் தன்மையை முழுமையாக (பரிபூரணமாக) அடைவதே வாழ்க்கையின்
குறிக்கோள்.
கடவுளின் உண்மையான பொருள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது; அன்பின் உண்மையான பொருளும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. கற்பது என்றால் அறிவு பெறுவது! எத்தகைய அறிவு? நாம் படிக்கின்றோமே - பல செய்திகளைத் தெரிந்துகொண்டு எனக்கு அது தெரியும், இது தெரியும் என்கிறோமே அந்த அறிவா? இல்லை.
இங்கே திருவள்ளுவர் அறிவின் பயன்பாட்டைச் சொல்கிறார். கற்றதனால் - கல்வியால் பெற்ற அறிவினால் என்ன பயன் என்று கேள்வி கேட்டு, அதன் விளக்கத்தை வேறு ஓர் இடத்தில் அற்புதமாகக் கூறுகிறார்.

அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின்நோய்
தன்நோய் போல் போற்றாக்கடை. (315)

மற்றவரின் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதாதபோது அறிவினால் என்ன பயன்? அறிவு அன்பாக மாறும்போதுதான் இந்த வேலையைச் செய்யும். "வயிற்று வலியும் தலைவலியும் அவனவனுக்கு வந்தால்தான் தெரியும்' - என்பது கிராமத்துப் பழமொழி. இயல்பான விஷயம் எது? அறிவு! அடுத்தவன் வயிற்று வலியைத் தான் உணர முடிந்தால் அதுதான் அன்பு!
"அன்பும் அறனும் உடைத்தாயின்' (குறள்}45) என்கிறார் வள்ளுவர். "அறனும் அன்பும்' என்றுகூட வள்ளுவர் எழுதியிருக்கலாம். ஆனால், அன்பில்லா அறத்தால் பயன் இல்லை; ஆனால், "அறம்' என்கிற செயல் இல்லாவிட்டாலும் கூட அன்பிருப்பின் அதுவே அறமாகிய பயனைத் தரும்.
திருக்குறள் முழுமையும் ஆராய்ந்து பார்க்கும்போது, உலகத்திலுள்ள மக்களை இரண்டே பிரிவாகப் பிரிக்கிறார் வள்ளுவர். ஒன்று அன்பில்லாதவர்; மற்றொன்று அன்புடையவர்கள். சரி. இவர்களை அடையாளம் காண்பது எப்படி என்கிற கேள்வி எழும்.
அன்பில்லாதவர்கள் சுயநலக்காரர்கள். தான், தன் குடும்பம், தன் மனைவி, தன் சுகம், தன் பொருள் என்று கருதி உயிர்கொடுத்து உழைப்பவர்கள். அல்லது உழைத்து உயிர் கொடுப்பவர்கள். அன்புள்ளவர்கள் - தங்கள் வாழ்க்கை, பொருள், அறிவு எல்லாவற்றையும் பிறருக்காகச் செலவழிப்பவர்கள்; பொதுநலம் கருதும் புண்ணியர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com