இந்த வார கலாரசிகன்

சென்னை லலித்கலா அகாதெமியில் நடிகர் சிவகுமாரின் ஓவியக் கண்காட்சியைப் பார்த்தது முதல் எனக்கு ஆதங்கம்.
இந்த வார கலாரசிகன்

சென்னை லலித்கலா அகாதெமியில் நடிகர் சிவகுமாரின் ஓவியக் கண்காட்சியைப் பார்த்தது முதல் எனக்கு ஆதங்கம். இந்த அற்புதமான ஓவியங்களை சென்னைவாசிகள் மட்டும் பார்த்து ரசித்தால் போதுமா, பரவலாக நடிகராக அறியப்படும் சிவகுமாருக்குள் அதி அற்புதமான ஓவியர் ஒருவர் உயிரோட்டமாக ஒளிந்து கொண்டிருப்பதைத் தமிழகம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்கிற ஏக்கம்.
திரையுலகுக்கு வருவதற்கு முன்னால், சென்னை ஓவியக் கல்லூரியில் முறையாக ஓவியம் படித்துத் தேறியவர் சிவகுமார். ஏதோ ஓவியப் படிப்பு படித்தோம் என்பதுடன் நின்றுவிடாமல், பொருளாதார நெருக்கடிக்கிடையிலும் ஊர் ஊராகச் சென்று இவர் அப்போது வரைந்த ஓவியங்களை இப்போது பார்க்கும்போது, நமக்கு வியப்பு மேலிடுகிறது. அதை நேரில் பார்த்தால்தான் அதன் சிறப்பு தெரியுமே தவிர எழுதி விவரிக்க முடியாது.
தினமணி கதிரில் சிவகுமாரின் ஓவியக் கண்காட்சியைப் பற்றி எழுதியது முதல் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தங்கள் ஊரிலும் அவரது ஓவியக் கண்காட்சியை நடத்த முடியுமா என்று கேட்டுத் தொடர்பு கொண்டவர்கள் பலர். மற்ற இடங்கள் இருக்கட்டும். அவரது தாய் மண்ணான கொங்கு நாட்டிலாவது ஓவியக் கண்காட்சி நடத்தித் தங்கள் மண்ணின் மைந்தனின் சிறப்பை அவர்கள் கண்டு ரசிக்க வேண்டாமா என்று தோன்றியது.
முதலில் தயங்கிய சிவகுமார், கோவையில் தனது ஓவியங்களைக் காட்சிக்கு வைக்கச் சம்மதித்தார். கோவையில் வருகிற பொங்கல் அன்று மாலையில் தொடக்க விழா. தொடர்ந்து ஜனவரி 15, 16 இரண்டு நாள்கள் "தினமணி' சார்பில் சிவகுமாரின் ஓவியக் கண்காட்சி கோவையில் நடைபெற இருக்கிறது. அந்த அற்புதக் கலைஞர் வரைந்த ஓவியங்களைப் பார்த்து ரசிக்காத கண்கள் என்ன கண்கள்? நான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டும். கோவையில் சிவகுமாரையும் அவர் வரைந்த ஓவியங்களையும் சந்திக்கத் தயாராகுங்கள். உங்களை வரவேற்க நானும் அங்கே காத்திருக்கிறேன்!

கவிஞர் கே.ஜீவபாரதியின் புத்தகங்கள் விமர்சனத்திற்கு வந்தால் நான் அதில் ஒரு பிரதியை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டு விடுவேன். படித்தும் விடுவேன். அவரைத் தகவல் பெட்டகம் என்று கூறுவதைவிடத் தகவல் சுரங்கம் என்று சொல்வதுதான் பொருந்தும். "ஜனசக்தி' ஆசிரியர் குழுவில் இருந்தவர் என்பதால் அவருக்கு இடதுசாரி சிந்தனையாளர்கள் குறித்த புரிதல் மிகவும் அதிகம்.
கவிஞர் ஜீவபாரதியின் 101-ஆவது படைப்பு "பிறந்த நாள்களுக்காகப் பிறந்தவை.' இந்த 101 படைப்புகளில் 48 நூல்கள் சுயபடைப்புகள். ஏனைய
53 நூல்கள் ஜீவா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதலிய பிரபலங்களின் படைப்புகளைத் தொகுத்து நூலாக்கியவை.
தொகுப்பு நூல்களுக்கு விருதுகள், பரிசுகள் கிடைப்பதில்லை என்பதால் பதிப்பகத்தார் தொகுப்பு நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் தொகுப்பாசிரியருக்கும் பொருளாதார ரீதியாகப் பெரிய ஆதாயம் கிடைப்பதில்லை. ஆனாலும்கூட ஜீவபாரதி அது குறித்துக் கவலைப்படாமல் செயல்படுவதால்தான், நமக்கு அறிஞர்கள் பலரின் படைப்புகள் கிடைத்திருக்கின்றன.
சமுதாயம் பயனுற வேண்டும் என்கிற ஒற்றைக் காரணத்துக்காகச் செயல்படும் கவிஞர் ஜீவ
பாரதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால், அவருக்குத் தரப்பட வேண்டிய அங்கீகாரத்தைத் தமிழ்ச் சமூகம் அவருக்குத் தரவில்லை என்பது வேதனை.
"பிறந்த நாட்களுக்காக பிறந்தவை' என்பது பல அறிஞர்களின் பிறந்தநாளையொட்டி ஜீவபாரதி "ஜனசக்தி'யில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. கூடவே "தாமரை' இதழ் குறித்து, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குறித்து என்று வேறு சில கட்டுரைகளும் இதில் இணைக்கப்பட்டிருக்
கின்றன.
பிறந்தநாள் நாயகர்கள் குறித்துக் கவிஞர் ஜீவபாரதி எழுதியிருக்கும் கட்டுரைகள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டியவை. தோழர் நல்லகண்ணு கூறியதுபோல தெரிந்திராத பல புதிய செய்திகளையும், தகவல்களையும் அள்ளித் தந்திருக்கிறார் ஜீவபாரதி. நன்றி, நன்றி, நன்றி!

எழுத்தாளர் விந்தனின் நூற்றாண்டு, கடந்த செப்டம்பரில் முடிந்தது. அவரது நூற்றாண்டையொட்டி "விந்தன் கதைகள்' என்கிற தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. விந்தன் வாழ்ந்ததென்னவோ 58 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், அவர் எழுதிக் குவித்திருப்பது ஏராளம் ஏராளம். சிறுகதைகள், நாவல்கள், வரலாறுகள், கவிதைகள், குட்டிக்கதைகள், கட்டுரைகள் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். இது போதாதென்று திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார்.
விந்தனின் சிறுகதைகள், குட்டிக்கதைகள், நவீன விக்கிரமாதித்தன் கதைகள் ஆகியவற்றை மட்டும் தொகுத்து வெளியிடப்பட்டிருக்கும் புத்தகம் "விந்தன் கதைகள்'. இதுவே ஆயிரம் பக்கங்களைத் தாண்டிவிட்டது. விந்தனின் கதைகளில் எந்தக் கதை நன்றாக இருக்கிறது என்று சொல்வது, பாயசத்தில் எந்தப் பகுதி சுவையாக இருக்கிறது என்று கூறச்சொல்வதுபோல.
இத்தனை பக்கங்களுடன் தொகுப்பு வரும்போது கையில் எடுத்துப் படிப்பதே சிரமமாக இருக்கிறது. ஒன்று, நான்கைந்து பாகங்களாக வெளியிட வேண்டும். இல்லையென்றால், கூடவே ராமாயணப் பலகையையும் சேர்த்துத் தர வேண்டும்!

எல்லோரும் கேட்கும் கேள்விதான். ஆனாலும் அதையே ஒரு கவிதையாக்கி விட்டிருக்கிறார் வெங்கடேஷ் சக்ரவர்த்தி.

போன வருடம்,
நீருக்கு கோபம்.
இந்த வருடம்,
காற்றுக்குக் கோபம்.
அடுத்த வருடம்?
மண்ணுக்கா
இல்லை,
கண்ணுக்குத் தெரியாத
நெருப்புக்கா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com