அக்கார அடிசில்

தமிழர் கொண்டாடும் பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பானது. "பொங்கல்' அனைவருக்கும் பிடித்த உணவுதான்! அதிலும் சர்க்கரைப் பொங்கல் பலருக்கும் பிடித்தமானது.
அக்கார அடிசில்

தமிழர் கொண்டாடும் பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பானது. "பொங்கல்' அனைவருக்கும் பிடித்த உணவுதான்! அதிலும் சர்க்கரைப் பொங்கல் பலருக்கும் பிடித்தமானது.
பண்டை நாளில் திருக்கோயில்களில் இறைவனுக்குப் பொங்கல் அமுது படைக்கப்பட்டது பற்றியும், என்னென்ன பொருள்களில் அது தயாரிக்கப்பட்டது என்பது பற்றியும் கல்வெட்டுகள் விரிவாகக் கூறுகின்றன. "கும்மாயம்' என்ற உணவு குறிப்பிடப்படுகிறது. பயிற்றுப் பருப்பு (பாசிப்பயிறு), செந்நெல் அரிசி, நெய், தயிர், வாழைப்பழம், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்பட்டாக அம்பாசமுத்திரம் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
"பயற்றுப்போனகம்' என்கிற உணவு பற்றியும் திருப்பைஞ்ஞீலி கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் அதிக அளவு சர்க்கரை மற்றும் பால், நெய் சேர்த்து சற்றுக் குழைவாக பொங்கல் செய்யப்பட்டால் அது "அக்கார அடிசில்' எனப்படும். அக்கார அடிசில் எனப்படும் சர்க்கரைப் பொங்கல் திருவிசலூர், திருவாமாத்தூர், திருச்செந்துறை, காமரசவல்லி முதலிய சிவாலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. குறிப்பாக மார்கழி மாதத்தில் இறைவனுக்குப் படைக்கப்பட்டது.
வைணவத் திருக்கோயில்களிலும் "அக்கார அடிசில் அமுது' சிறப்பாகப் பெருமாளுக்கு அமுது செய்விக்கப் பெற்றதையும் அறிய முடிகிறது. பெரியாழ்வார் தாம் அருளிய திருமொழியில் கண்ணனி டம் பக்தி கொண்டு அழைக்கும் பொழுது, ""அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து சொப்பட நான் சுட்டு வைத்தேன்'' (4ஆம் திருமொழி-156) என்றும், அதனை சாப்பிட கண்ணனையும் அழைக்கிறார். மேலும், பெரியாழ்வார், ""செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால் பன்னிரண்டு திருவோணம் அட்டேன்'' (8ஆம் திருமொழி-208) என்று மகிழ்ந்து கூறுகின்றார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் ராமாநுஜஜீயர் என்பவர் சித்திரை மாத திருவாதிரை நாளில் "அக்கார அடிசில்' அமுது நம் பெருமானுக்குப் படைத்து, பின்னர் அதனை வைணவ அடியார்களுக்கு வழங்க தானமளித்தது பற்றி ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதனைக் குறிக்கும்பொழுது ""சுவாமி நம்பெருமாள் அமுது செய்தருளும்படி செந்நெல் அரிசி சிறு பருப்பு செய்த அக்காரம் நறு நெய் பாலால்' என்ற திவ்யப் பிரபந்தப்படியே அக்கார அடிசில் செற்றியுடனே அமுது செய்தருளி'' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
பாண்டிய நாட்டில் அழகர் கோயில் பகுதியில் ஆட்சி செய்த சிற்றரசர் திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலிவாணாதிராயன் (1428-1477) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குப் பல இறை பணிகள் செய்துள்ளார். இவருடைய கல்வெட்டில் ஆண்டாள் "சூடிக் கொடுத்த நாச்சியார்' என்றே குறிப்பிடப்படுவதைக் காணலாம். இவருடைய பட்டத்தரசி ஸ்ரீரங்கநாச்சியார் என்பவர், ஆண்டாள் கோயிலில் மார்கழி மாதத்தில் பல்வேறு வழிபாடுகளுக்கும் "அக்கார அடிசில் அமுது' படைப்பதற்கும் தானம் அளித்துள்ளார். இவர்களுடைய மகனான சுந்தரத்தோளுடையான் மாவலிவாணாதிராயன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலின் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் போன்றவற்றைக்
கட்டி இறைத்தொண்டு செய்தான் எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
வைணவ ஆச்சாரியரரான உய்யக்கொண்டார், "பூமாலை சூடிக்கொடுத்தாள்' எனவும், "சூடிக் கொடுத்த சுடர் கொடியே' என்றும் ஆண்டாளைப் போற்றுகிறார்.
மகா மண்டபச் சுவற்றில் காணப்படும் கல்வெட்டில், ""சுபமஸ்து நாச்சியார் சூடிக்கொடுத்தருளிய நாச்சியார் மகாமண்டபம் சுந்தரத்தோளுடையார் ஸார்வ்வபெüம மகாபலிபாணாதிராஜா'' என்று பொறிக்கப்பட்டுள்ளது (படம்-1).
ஆண்டாள் அருளிய திருப்பாவையில், "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா' என்பது 27-ஆவது பாசுரம். இப்பாசுரம் பாடப்படும் நாள் "கூடாரைவல்லி' என்று சிறப்பித்து, அன்று வைணவர் வீடுகளிலும், ஆலயங்களிலும் அக்கார அடிசில் அமுது பெருமாளுக்குப் படைப்பது வழக்கமாக உள்ளது. ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில்,

""நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த "அக்கார அடிசில்' சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?''
(7-ஆம் திருமொழி-592)

என்று அழகர் கோயில் பெருமாளை வேண்டுகிறார். மதுரை-அழகர் கோயிலில் சுந்தரத்தோள் அழகன் என்று பெயர்பெற்ற சுந்தரராஜப் பெருமாளுக்கு, ஆண்டாள் வேண்டிக் கொண்டது போன்று, இராமாநுஜரால் நூறுதடா அக்கார அடிசலும், வெண்ணெயும் பெருமாளுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அழகர்கோயிலில் இவ்வைபவம் சிறப்பாக இன்றும் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கத்துப் பெருமாள் இரவு துயில் கொள்ளும் நேரத்தில் "அரவணை' என்ற சர்க்கரைப் பொங்கல் நாள்தோறும் அமுது செய்விக்கப்படுகிறது. அது மிகவும் சுவையானது மட்டுமல்ல, அக்கார அடிசிலின் வரலாறே சுவையானதுதான்!

(தொல்லியல் துணை கண்காணிப்பாளர் - ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com