இந்த வார கலாரசிகன்

தப்போதோ தரப்பட வேண்டியது, இப்போதாவது தரப்பட்டிருக்கிறதே என்கிற மகிழ்ச்சி.
இந்த வார கலாரசிகன்

தப்போதோ தரப்பட வேண்டியது, இப்போதாவது தரப்பட்டிருக்கிறதே என்கிற மகிழ்ச்சி. வண்ணதாசனுக்கு, கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதைத்தான் குறிப்பிடுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் தரப்பட்டிருந்தால், தன் மகனுக்கும் சாகித்ய அகாதெமி விருது கிடைத்த மகிழ்ச்சி தி.க.சி.க்குக் கிடைத்திருக்கும். இப்படி அப்பாவுக்கும் மகனுக்கும் சாகித்ய அகாதெமி விருது கிடைப்பது என்பது அரிது.
தி.க.சி. விமர்சகர் என்றால், கல்யாணி என்கிற, கல்யாணசுந்தரம் என்கிற, கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் ஒரு புனைவு இலக்கியவாதி. எனக்கு எப்போதுமே ஓர் ஐயப்பாடு வரும். வண்ணதாசன் என்கிற எழுத்தாளர், கல்யாண்ஜி என்கிற கவிஞர் இவர்கள் இருவரில் யார் சிறந்த படைப்பாளி என்று. நாணயத்தின் எந்தப் பக்கத்திற்கு மதிப்பு என்று எப்படி முடிவெடுக்க முடியும் என்கிற சமாதானத்தோடு அந்தக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவேன்.
வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றுத் தந்திருக்கும் "ஒரு சிறிய ஆசை' என்கிற சிறுகதைத் தொகுப்பு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான். இதுவரை வெளிவந்திருக்கும் வண்ணதாசனின் ஒரு டஜன் சிறுகதைத் தொகுப்புகளில் எதற்கு வேண்டுமானாலும் சாகித்ய அகாதெமி கொடுக்கலாம். இதற்குக் கொடுத்திருக்கிறார்கள் அவ்வளவே.
வண்ணதாசனின் எழுத்துகள் என்னைக் கவர்ந்ததன் முதல் காரணம் அதில் இருக்கும் மண்ணின் மணம். தாமிரபரணித் தண்ணீரின் ஜிலுஜிலுப்பும், சலசலப்பும், சுவையும் வண்ணதாசனின் எழுத்திலும் காணப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. தாமிரபரணித் தண்ணீர் குடித்து வளர்ந்த எழுத்தாளன் என்பதன் அடையாளம் அது.
இன்னொரு காரணமும் உண்டு. என் போன்றவர்களுக்குப் பின் நவீனத்துவம் புரிவதில்லை. பழைமையும் இல்லாமல், பின் நவீனத்துவமும் இல்லாமல் நவீன இலக்கியம் படைக்கும் கு.ப.ரா., தி.ஜானகிராமன், லா.ச.ரா., வரிசையில் ஒரு தனி பாணி எழுத்து நடையை உருவாக்கிக் கொண்டிருப்பவர் வண்ணதாசன். அவருடைய கதைகள் படித்தால் புரியும். மனதை நெருடும். புத்தகத்தை மூடி வைத்த பின்னும் அதன் தாக்கம் தொடரும். இதுதான் நல்ல சிறுகதை எழுத்துக்கு அடையாளம் என்று நான் கருதுகிறேன். அதனால் எனக்கு வண்ணதாசனைப் பிடிக்கும்.
சரி, பழைய பிரச்னைக்கே வருவோம். வண்ணதாசனா, கல்யாண்ஜியா? ஒருவருக்கே இரண்டு முறை சாகித்ய விருது வழங்க முடியுமா? முடியுமானால், சாகித்ய அகாதெமி கல்யாண்ஜி என்கிற கவிஞனுக்கும் விருதளித்துப் பெருமைப்படுத்த வேண்டும். வண்ணதாசன்
என்கிற எழுத்தாளனுக்கு நிகரான தகுதி கல்யாண்ஜி என்கிற கவிஞனுக்கும்
உண்டுதானே?

கடந்த வாரம் கவிஞர் தோழன் மபாவின் "மறுதாம்பு' கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா கவிக்கோ அரங்கத்தில் நடந்தது. அதற்குப் போயிருந்தபோது கவிஞர் உஸ்மான், கலாம் பதிப்பகம் வெளியிட இருக்கும் "விடுதலைப் போரில் தமிழ் முஸ்லிம்கள்' என்கிற புத்தகத்தை விமர்சனத்துக்குத் தந்தார். தலைப்பின் கீழே "புதிய செய்திகள்' என்று போட்டிருந்தது. எழுதியிருப்பவர் யார் என்று பார்த்தால், அ.மா.சாமி.
பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை சாமானியனிடம் கொண்டு சேர்த்த பெருமை தினத்தந்திக்கும், "ராணி' வார இதழுக்கும் உண்டு. "ராணி' வார இதழ் ஆசிரியரான, "குறும்பூர் குப்புசாமி'
என்கிற புனைபெயரில் கதைகள் எழுதும் அ.மா.சாமியின் பங்களிப்பு கணிசமானது.
இப்படியொரு புத்தகத்தை எப்போதோ அரசு கொண்டு வந்திருக்க வேண்டும். தனது பதிப்புரையில் கலாம் பதிப்பக நிறுவனர், சிங்கப்பூர் "தமிழ் நேசன்' முஸ்தபா குறிப்பிடுவது போல, "இந்திய சரித்திரத்திற்கும், தமிழக வரலாற்றிற்கும் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியது. ""இந்தியாவில் 15 கோடி முஸ்லிம்கள் இருந்தாலும் மொழியை முதல் அடையாளமாகவும், மதத்தை இரண்டாவது அடையாளமாகவும் கொண்டு வாழ்பவர்கள் தமிழ் முஸ்லிம்கள். சாதி வெறி, மத வெறி, மாநில வெறி என்று இந்தியாவைக் கூறுபோடத் துடிக்கும் இன்றைய காலகட்டத்தில், நமது மொழி, நமது மாநிலம், நமது இந்தியா என்ற அகன்ற பார்வை வந்தால்தான் சமூக நல்லிணக்கமும், சமய ஒற்றுமையும் மேலோங்கி வளரும் என்ற நம்பிக்கையுடன் இந்த நூலைப் பதிப்பித்து வெளியிடுகிறேன்'' என்கிற முஸ்தபாவின் எண்ணத்துக்காகவே அவரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
"விடுதலைப் போரில் தமிழ் முஸ்லிம்கள்' என்கிற இந்தப் புத்தகம், 1639-இல் ஆங்கிலேயர்கள் சென்னைக்கு வந்ததிலிருந்து தொடங்குகிறது. புத்தகத்தின் பக்கங்கள் புரளப் புரள, இதற்காக அ.மா.சாமி எத்தனை ஊர்களுக்குப் போயிருப்பார், எத்தனை பேரைச் சந்தித்துத் தகவல் திரட்டியிருப்பார் என்பது மலைப்பை ஏற்படுத்துகிறது. இதற்காக அவர் பட்டிருக்கும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல என்பதை எழுத்தாளனான என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு மிக முக்கியமான சரித்திர ஆவணத்தைப் பதிவு செய்கிறோம் என்கிற கடமை உணர்வு அவரது பதிவில் தெரிகிறது.
இந்தியாவில் சுதந்திரப் போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும் என்கிற "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யின் கருத்தை அ.மா.சாமியும் வலியுறுத்தி இருப்பது தில்லிக்குக் கேட்க வேண்டும். அதேபோல விடுதலைப் போராட்டத்தில் இஸ்லாமியரின் பங்கு மறைக்கப்பட்டுவிட்டது என்கிற முஸ்லிம்களின் மனக்குறை நீக்கப்பட வேண்டும். மேலே குறிப்பிட்ட இரண்டையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.
இது ஏதோ முஸ்லிம்கள் பற்றிய புத்தகம் என்று நினைத்துவிட வேண்டாம். நமது சரித்திரம் பற்றிய புத்தகம். சரித்திர நாவலைப் படிப்பது போன்ற சுவாரஸ்யத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு தமிழனும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய சரித்திரப் பதிவு இது.

கவிஞர் சுரேஷ் ஆதன் என்கிற பெயரை தீராநதி, கணையாழி, அருவி இதழ்களில் பார்த்திருக்கிறேன். அவருடைய கவிதைகள் சிலவற்றைப் படித்து ரசித்தும் இருக்கிறேன். அவர் விமர்சனத்திற்கு அனுப்பியிருந்த கவிதைத் தொகுப்பு அவருடைய "சாம்பல்நிறப் பூனையின் பாதரச உலகம்'. அதில் எனக்குப் பிடித்திருந்த கவிதை இது:

கடவுளின் கைகளை பிடித்து
விளையாடிக் கொண்டிருக்கும்
ஊமை குழந்தை ஒன்றை
விரட்டிப் பிடிக்க முயலுகையில்
ஏதோவொரு ரகசிய வேண்டுதலை
முன் வைக்கிறது குழந்தை
கடவுளைப் பேசச் சொல்லியும்
விரட்டுதலைப் பிடிக்கச் சொல்லியும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com