குழை நக்கும் கூத்து!

தமிழரின் தொன்மைக் கலைகளுள் கூத்தும் ஒன்று. அதன் தெய்வாம்சத்தைக் கருதியே அக்கலைக்கான கடவுளைக் கூத்தாண்டவன், நடராசர், ஆடல்வல்லான் எனப் பெயரிட்டு தமிழ் மக்கள் வழிபட்டு வந்தனர்.
குழை நக்கும் கூத்து!

தமிழரின் தொன்மைக் கலைகளுள் கூத்தும் ஒன்று. அதன் தெய்வாம்சத்தைக் கருதியே அக்கலைக்கான கடவுளைக் கூத்தாண்டவன், நடராசர், ஆடல்வல்லான் எனப் பெயரிட்டு தமிழ் மக்கள் வழிபட்டு வந்தனர். அவர் ஆடிய பல்வகை நடனங்களுள் சக்தியோடு (காளி) ஆடிய நடனம் ஊர்த்துவத் தாண்டவம் எனப்படும். ஊர்த்துவம் என்றால், "மேல்நோக்கம்' எனப் பொருள். இத்தாண்டவம் சக்தியோடு சிவன் நடனமாடி, சக்தியை வென்றதாகக் கூறும். இதை விளக்கும் ஓர் இலக்கியப் பதிவு தனிப்பாடல் ஒன்றில் உள்ளது. இப்பதிவு திருவள்ளுவரின் வாழ்க்கையோடு கற்பித்துக் கூறுவதாக உள்ளது. வாசுகியோடு திருவள்ளுவர் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார். அப்போது அவர் ஏலேலசிங்கர் என்பாரிடம் கூலிக்கு நெசவுத் தொழில் செய்து
வந்தார்.
ஒருநாள் சிலர் திருவள்ளுவரிடம் வந்து, திருவாலங்காட்டில் இறைவன் ஆடும் திருக்கூத்தைக் கண்டுவர அழைத்தார்களாம். வர மறுத்த திருவள்ளுவர், ""பிரம்மாவும், இந்திரனும், திருமாலும் இருந்து காணமுடியாத சிவனது கூத்தை நாவினால் இழையை நக்கி நெருடும் ஏழையோனாகிய நானா கண்டுவிட முடியும்?'' என்றாராம்.

""பூவி லயனும் புரந்தரனும் பூவுலகைத்
தாவி யளந்தோனும் தாமிருக்க - நாவில்
இழைநக்கி நூல்நெருடும் ஏழையறி வேனோ
குழைநக்கும் பிஞ்ஞகன்தன் கூத்து''

வள்ளுவர் கூறிய விடைக்கான இப்பாடலில் சிவனது கூத்தைக் "குழை நக்கும் கூத்து' என்கிறார். இத்தொடர் அரிய கூத்துக் கலையின் சிறப்பை உள்ளடக்கியதாகும்.
நெசவுத் தொழிலில் ஒரு நூல் அறுந்து விட்டால் அதனைப் பிணைக்க வலது கை ஆள்காட்டி விரலை நாக்கின் ஈரப்பசையைத் தொட்டு நூல் முனை இரண்டையும் நிமிட்டுவர். இதைத்தான் நாவில் இழை நக்கி நூல் நெருடும் என்கிறது பாடல். இதனால் தன்னை எளியவனாகக் காட்டிக் கொள்ளும் வள்ளுவர் அரிய பெரிய கூத்தைக் காண இயலுமோ? எனக் கூத்தின் செயலைச் சிறப்பித்தார்.
கூத்துக் கலையை நூற்றெட்டுக் கரணங்களோடு கூத்துக்கலை நூல் சிறப்பிக்கும். கரணம் என்பது செய்து காட்டும் செயல்முறையைக் குறிக்கும். அந்த வகையில் இறைவனைப் பொறுத்தமட்டில் அவன், கால்மாறி ஆடியதும், முயலகன் மீது கால்வைத்து ஆடுவதுமான செயல்கள் அரிதானவை. அவை போலவே காலை உயர்த்தி, அக்கால் விரலால் காதிலுள்ள குண்டலத்தைக் கழற்றிக்காட்டி ஆடியதொரு செயலும் அரிய ஒன்றாகும்.
சிவமும் சக்தியும் தம்முள் யார் உயர்ந்தவர் என்ற போட்டி வந்தபோது, இருவரும் கோபங்கொண்டு கூத்தாடினர். இருவரும் சமமாக ஆடும் நிலையில் வெற்றி தோல்வியை உறுதிப்படுத்த முடியாத அரிய கூத்தாக இருந்தது.
இந்நிலையில் சிவன், தன் வலது காலை உயர்த்தி வலது காதில் அணிந்திருந்த குண்டலத்தை வலதுகால் பெருவிரலால் கழற்றுமாறு ஆடிக்காட்டினார். ஆடவரால் செய்யப்படும் அச்செயல் போல், நாணமே வடிவமான பெண்ணால் செய்ய முடியாததாகையால் சக்தியின் ஆட்டம் தடைப்பட்டது. சக்தி நாணம் கொண்டு தன் தோல்வியை ஒப்புக்கொள்வாள் போல வாழைப்பூவைப் போல் தலைசாய்த்து நின்றதோடு, வலது கால் பெருவிரலால் தரையைக் கீறிக்கொண்டு மெüனம் சாதித்தாள். இதைத்தான் குழைநக்கும் பிஞ்ஞகன் (சிவன்)தன் கூத்து என்கிறது பாடல். இவ்வாடல் காட்சியால், கூத்துக்கலையில் நளினமாக ஆடும் திறமை பெண்மைக்கே உரியதானாலும் ஆடவரின் அரிய திறனும் கூத்துக்கலைக்கான இலக்கணமாய் அமைகிறது எனலாம். இந்த ஊர்த்துவத் தாண்டவம் சிவனின் ஏனைய தாண்டவங்களுக்கு மாறுபட்டதாகும்.
தில்லைச் சிற்றம்பலத்தில் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்களுக்காக ஆடிக்காட்டிய நடனம், ஆனந்தத் தாண்டவம் எனப்படும். எனினும் இக்கூத்துப் பொருளை மணிவாசகர்,

"ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்' (திருவெம்பாவை-12)

என்கிறார். படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தலாகிய ஐந்தொழில்களுக்காகவும் உயிர்கள் பிறவிப் பிணியிலிருந்து தப்பித்துப் பேரின்ப முத்தியடைவதற்காகவும் இவன் தில்லையில் ஆனந்தக் கூத்தாடினானாம். இந்த ஆனந்தக் கூத்தை ஏன் ஆடினான் என்ற கருத்தை மாணிக்கவாசகர்
எதிர்நிலை வினாவாகத் தொடுத்து, திருச்சாழல் என்ற பதிகத்தில் (சாழல், பா-25) இரு பெண்கள் கேள்வி கேட்டு விடை கூறுவது போல விடை பகர்ந்துள்ளார்.
ஆன்மாக்களின் (உயிர்களின்) பொருட்டு ஆனந்தத் தாண்டவத்தைச் சிவன் செய்தாலும் அவன் ஒரு பெண்ணோடு (சக்தியோடு) நடனப் போரினைச் செய்தது ஏன்? என்று கேட்கிறாள் ஒருத்தி. அதற்கு மற்றொருத்தியோ, சக்தி அம்சமான காளியுடன் சிவன் நடனப் போரைச் செய்து உலகை வெறிகொண்டு அழிக்கும் அவளது கொட்டத்தை அடக்குவதற்காகத்தான் என்கிறாள்.
காளி, தாரகன் என்ற அரக்கனை அழித்த ஆவேசத்தால் அவளது உதிரத்தைக் குடித்துச் செருக்கினால் உலகமெல்லாம் அஞ்சுமாறு நடனமாடிளாள். இவளது நடனம் தொடர்ந்தால் உலகே அவளது கொடுமைக்கு உணவாகிவிடும் என்பதால் அந்தக் கொடுமையிலிருந்து உலகை மீட்டெடுக்க வேண்டியே காளியுடன் சிவன் நடமாடினான் என்ற புராணச் செய்தியையே இப்பாடலில் கூறியுள்ளார் மணிவாசகர்.
காளியானவள் தாரகனைச் செற்றதான கதை வழிவழியாகப் பேசப்பட்ட தொன்மத்தை சிலப்பதிகாரத்திலும் (வழக்-37-40) காண முடிகிறது. ஆக, ஆனந்தத் தாண்டவம் ஆடல்வல்லானின் அறக்கருணையையும், ஊர்த்துவத் தாண்டவம் மறக்கருணையையும் காட்டுவதாகவே, "குழை நக்கும் பிஞ்ஞகன் கூத்து' இருந்ததாக உணரப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com