இந்த வாரம் கலாரசிகன்

கவிக்கோவுக்கு இரங்கல் கூட்டம் நடத்த வேண்டும் என்று பலரிடமிருந்தும் கோரிக்கைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. கவிஞர்களின் மறைவுக்கு நடத்தப்படுவது இரங்கல் கூட்டமல்ல,
இந்த வாரம் கலாரசிகன்

கவிக்கோவுக்கு இரங்கல் கூட்டம் நடத்த வேண்டும் என்று பலரிடமிருந்தும் கோரிக்கைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. கவிஞர்களின் மறைவுக்கு நடத்தப்படுவது இரங்கல் கூட்டமல்ல, அஞ்சலிக் கூட்டம். கவிக்கோவுக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்த வேண்டும் என்கிற எண்ணம் அவர் நம்மைவிட்டுப் பிரிந்த நாள் முதலே எனக்கு ஏற்பட்டு விட்டிருந்தது. நண்பர் பேராசிரியர் முனைவர் ஹாஜாகனிக்கும்.
எங்கே நடத்துவது என்கிற கேள்வியே எழவில்லை. கவிக்கோ வாழ்ந்த காலத்திலேயே சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி. காலனியில் அவரது பெயரைத் தாங்கி 'கவிக்கோ மன்றம்' ஏற்படுத்தப்பட்டுவிட்டது. சிங்கப்பூர் தமிழ்நேசன் முஸ்தபாவின் கவிக்கோ மன்றத்தில் கவிக்கோவுக்கு அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
வேருக்கு விழுதுகள் செலுத்தும் கவிதாஞ்சலியாக அது இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். தேர்ந்தெடுத்த பத்து இளம் கவிஞர்கள் கவிக்கோவுக்குக் கவிதாஞ்சலி செலுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. கவிக்கோவுக்குக் கவிதாஞ்சலி செலுத்த விரும்பும் ஏனைய இளம் கவிஞர்களுக்கு எப்படி வாய்ப்பளிப்பது? எல்லோரும் மேடையேறிக் கவிதை படிப்பது என்று சொன்னால், அது சாத்தியமில்லையே...
ஏனைய கவிஞர்கள் கவிக்கோவுக்குச் செலுத்த விரும்பும் கவிதாஞ்சலிகளை 50 வரிகளுக்கு மிகாமல் எழுதி, 'கவிக்கோவுக்குக் கவிதாஞ்சலி' என்று கடிதத்தின் உறையில் குறிப்பிட்டு, ஆசிரியர், 'தினமணி' நாளிதழ், 29, 2ஆவது பிரதான சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை-58 என்கிற முகவரிக்கோ,kaviko.kavithanjali@gmail.com என்கிற மின்னஞ்சல்
முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம். சிறந்த கவிதைகளை ஒரு குழு தேர்ந்தெடுத்து 'கவிக்கோவுக்குக் கவிதாஞ்சலி' என்கிற தலைப்பில் புத்தகமாக வெளிக்கொணர்வது என்று தீர்மானித்திருக்கிறது.
கவிக்கோவுக்குக் கவிக்கோ அரங்கத்தில் கவிதாஞ்சலி நடத்தப்படுகிறதே, அந்தக் கவியரங்கத்திற்கு யாரைத் தலைமை வகிக்கச் செய்வது என்கிற கேள்வியே எழவில்லை. கவிக்கோ கடைசியாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சி கவிக்கோ மன்றத்தில் நடந்த 'கவிக்கோ' விருது வழங்கும் விழாதான். கவிஞர் முத்துலிங்கத்துக்கு இந்த ஆண்டுக்கான 'கவிக்கோ' விருது வழங்கப்பட்டிருக்கும்போது, கவிக்கோவுக்கு நடத்தப்படும் கவிதாஞ்சலிக்குத் தலைமை தாங்க கவிஞர் முத்துலிங்கத்தைவிடப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்?
கவிஞர் முத்துலிங்கத்தின் தலைமையில் வருகிற ஜூன் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற இருக்கும் வேருக்கு விழுதுகள் நடத்தும் 'கவிக்கோவுக்குக் கவிதாஞ்சலி' நிகழ்ச்சியில் தினமணி வாசகர்களும், கவிக்கோவின் ரசிகர்களும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும். இதை எனது தனிப்பட்ட அழைப்பாக வாசகர்கள் கருதிக்கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
கவியரங்கத்தில் இடம்பெறவில்லை என்று யாரும் வருத்தமடையத் தேவையில்லை. கவிக்கோ குறித்த கவிதைச் செறிவும், நெகிழ்வும் கலந்த கவிதைகள் புத்தகமாகத் தொகுக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கவிக்கோ அரங்கத்தில் கவிக்கோவுக்குக் கவிதாஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கூடுவோம்,
வாருங்கள்!


தமிழில் வெளிவரும் முன்னோடி நாளிதழ்களிலும், பல்வேறு வார, மாத இதழ்களிலும் உடல் நலம் சார்ந்த மருத்துவக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர் இராஜபாளையத்தைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் கு.கணேசன். மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிவரும் தொண்டு பரவலாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது.
ஆங்கில மருத்துவம் குறித்த செய்திகளைப் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகத் தமிழில் எழுதுவது என்பது எளிதல்ல. மருத்துவர் கணேசன் இதுவரை 38 மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதியிருக்கிறார். அதுதான் இவரது தனிச் சிறப்பு. வியக்க வைக்கும் 91 கட்டுரைகளை உள்ளடக்கிய 'மருத்துவ மாயங்கள்' என்கிற புத்தகம், பல அரிய மருத்துவத் தகவல்களையும், கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும் பதிவு செய்கிறது. அதே நேரத்தில், பாமரரும் அலுப்புத் தட்டாமல் அவை குறித்துப் படித்துத் தெரிந்து கொள்ளும் வகையிலான எழுத்து நடையுடன் இருப்பது தனிச்சிறப்பு.
சிறுநீரக மாற்று சிகிச்சை, இதய மாற்று சிகிச்சை, கல்லீரல் மாற்று சிகிச்சை பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கருப்பை மாற்று சிகிச்சை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமா? ஸ்வீடன் நாட்டு மருத்துவர்கள் ஒரு பெண்ணுக்குக் கருப்பை மாற்று சிகிச்சை செய்து குழந்தை பிறக்க வைத்த சாதனையை இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரை ஒன்று விளக்குகிறது. ஸ்டெம் செல்கள் எப்படி பல பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கின்றன என்பதை விளக்குகிறது இன்னொரு கட்டுரை.
புற்றுநோயைக் குணப்படுத்தும் பாக்டீரியா, செயற்கை மண்டை ஓடு, செயற்கை ரத்தம், காது கேளாமைக்குப் புதிய தீர்வு, அல்ஸைமருக்கு நவீன சிகிச்சை, வலிப்பு நோய்க்குப் புதிய சிகிச்சை, கருவில் வளரும் சிசுவுக்கு இதய அறுவை சிகிச்சை, ஆஸ்துமாவுக்குப் புதிய சிகிச்சை என்று மருத்துவர் கணேசன் எழுதியிருக்கும் 'மருத்துவ மாயங்கள்' புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும், மருத்துவம் குறித்துப் பாமரர்களுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன.
ஆங்கிலத்தில் உள்ள பல மருத்துவச் சொற்களுக்குத் தமிழ் வார்த்தைகளை வழங்கி, மருத்துவர் கணேசன் அறிவியல் தமிழுக்குச் செய்திருக்கும் பங்களிப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது!


சமுதாயத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி, சம்பிரதாயச் சடங்குகளைத் தகர்க்க முற்பட்ட பெரியார், அண்ணா போன்ற தலைவர்களே, காலப்போக்கில் அவர்கள் எதையெல்லாம் மாற்ற விரும்பினார்களோ அதாகவே மாறிய அவலம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.
கவிஞர் இளைய பாரதி தனது 'மரணத்தின் நட்சத்திரங்கள்' கவிதைத் தொகுப்பில் எழுதியிருந்த கவிதை நினைவுக்கு வந்தது.


படிமங்களை
உடைத்தவர்கள்
படிமங்கள்
ஆனார்கள்!

அடுத்தவாரம் சந்திப்போம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com