உன்னைக் குறைகூறல் நேர்மையாமோ?

சிறுமியர் சிலர் ஆற்றங்கரை மணலில் சிற்றில் எனப்படும் சிறு மண்வீடுகளைக் கட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
உன்னைக் குறைகூறல் நேர்மையாமோ?

சிறுமியர் சிலர் ஆற்றங்கரை மணலில் சிற்றில் எனப்படும் சிறு மண்வீடுகளைக் கட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். குறும்புத்தனம் நிறைந்த சிறுவன் ஒருவன் அந்தச் சிறுவீட்டைக் காலால் எற்றி உதைத்து அழிக்க ஓடோடி வருகிறான். தினமும் நடக்கும் நிகழ்ச்சிதான் இது. இன்றும் சிற்றிலை அழிக்க அவன் ஓடோடி வருவதனைக் கண்டு அச்சிறுமியர் அவனிடம் இனிய மொழிகளைப் பேசி, சிற்றிலை அழிக்காமலிருக்க வேண்டுகின்றனர். உன்னைப் பெற்றெடுக்க உனது தாய் முற்பிறப்பில் பெரிய அரிய தவம் செய்தவளல்லவோ என்கிறாள் ஒரு சிறுமி.
அவ்வாறு உன்னை முயன்று பெற்றவள், எல்லாத் தெய்வங்களையும் அழைத்து உன்னைக் காப்பாற்ற வேண்டிக்கொண்டும் உள்ளாள் என்கிறாள் இரண்டாமவள்.
நீயும் வளர்ந்து முகத்தினை உயர்த்தி நோக்கித் தவழ்ந்து செங்கீரையாடியவண்ணம் பொருளற்ற மழலை மொழிகளைப் பேசினாய் என்கிறாள் முதலாமவள். இவ்வாறு தவழ்ந்துவரும் உனக்குத் தாலாட்டுப் பாடல்கள் பாடி உறங்கவும் வைத்தாள் உன் அன்னை.
பின் உன்னைக் குந்தி உட்காரவைத்துக் கரங்களைச் சேர்த்துச் சப்பாணி கொட்டி விளையாடப் பழக்கினாள், என் இன்னொருத்தி உன்னிடம் தனக்கு முத்தம் தாவென வேண்டினாள். உன்னைக் கூவி அழைத்து வருக, எனக் குறுநடை பழகி வருமாறு வேண்டி, கொஞ்சியும் குலவியும் உன்னை எடுத்து அணைத்துக் கொண்டாள், எனப் பட்டியலிடுகிறாள் வேறொரு சிறுமி.
பின்பு நீ உணவுண்ண மறுத்தபோதெல்லாம் அந்தி சாய்ந்தபின்பு ஆகாயத்தில் வரும் அம்புலியை உனக்கு வேடிக்கை காட்டியும் விளையாட அழைத்தும் உணவூட்டினாள்.
இவையனைத்தையும் செய்தவள், குழந்தாய், நீ சென்று ஓடியாடி விளையாடுவாயாக என உன்னைத் தெருவில் விளையாட அனுப்பியும் வைத்தாள். ஆனால் நீ இங்கு வந்து எமது சிறுவீட்டினை அழிக்க முயல்கிறாய். நாங்கள் இதற்காக உன்னை இங்கனுப்பிய தாயையே நொந்துகொள்ள வேண்டும். உன்னை நொந்து கொள்வது முறைமையல்ல. இதனை நீ உணர்ந்து கொள்வாயாக! நீர்நிலைகளால் சூழப்பெற்ற குறுக்குத்துறை எனும் ஊரின்கண் வாழும் முருகா, எங்கள் சிற்றிலைச் சிதைக்காமல் இருப்பாயாக என வேண்டுகின்றனர் சிறுமியர்.

முந்தித் தவமே புரிந்துன்னை முயன்று பெற்றுக் காப்பாற்றி
முகமே தூக்கிச் செங்கீரை மொழிந்தே ஆடத் தாலாட்டிக்
குந்திக் கரத்தால் சப்பாணி கொட்டச் செய்து முத்தமிட்டுக்
கூவியழைத்து வருகவெனக் கொஞ்சிக் குலவி யெடுத்தணைத்தே
அந்திப் பொழுதைக் கடந்துவரும் அம்பு லிகாட்டிப் பின்னருனை
ஆடி நீவா எனமறுகில் அனுப்புந் தாயர் தமைவிடுத்து
நொந்திங் குன்னைக் குறைகூறல் நேர்மை யாமோ உணர்ந்திதனை
நீர்சூழ் குறுக்குத் துறைவாழும் நிமலா சிற்றில் சிதையேலே.

தி. சு. ஆறுமுகம் சிவதாசன் இயற்றியுள்ள குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழின் சிற்றில் பருவத்துப் பாடலொன்று இவ்வாறு அழகுற அமைந்துள்ளது. பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியத்தில் இப்பருவத்துப் பாடல்கள் தாமிழைக்கும் சிறுவீடாகிய சிற்றிலை அழிக்காதே எனப் பாட்டுடைத்தலைவனான முருகப்பெருமானிடம் சிறுமியர் வேண்டிக்கொள்வதாக அமையும்.
பத்துப் பருவங்களைக் கொண்டமையும் பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியத்தில் ஆண்பால் பிள்ளைத்தமிழானது, கடைசியில் சிற்றில் (அழித்தல்), சிறுதேர், சிறுபறை என மூன்று பருவங்களைக் கொண்டமைக்கப்படும். முதல் ஏழு பருவங்கள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்பனவாகும். மேற்காணும் பாடலில் சிற்றில் பருவத்துப் பாடலொன்றில் அதற்கு முன்பாக வரும் ஏழு பருவங்களையும் வரிசைப்படி சிற்றிற்பருவப் பாடலின் கருத்துடன் தொடர்பு கொண்டதாக இயையப் பொருத்திப் பாடலை இயற்றியுள்ள நயம் வியக்கத்தக்கதாகும். முதல் ஏழு பருவங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் தாய்மார்களின் செயலாதலால் சிற்றிலை அழிக்க வரும் சிறுவனைத் தெருவில் விளையாட அனுப்பியதனையும் அதனால் சிறுவன் சிற்றிலை அழித்தாலும், அது தாயின் தவறே என அதனையும் அவளுடைய செயலாகத் தாய்மீதே ஏற்றிக் கூறுகிறார் புலவர். பிள்ளைத்தமிழின் எட்டுப் பருவங்களை ஒன்றுடன் ஒன்று கோர்வையாகத் தொடர்புபடுத்திப் பாடியுள்ள புலமை போற்றற்குரியது.

-மீனாட்சி பாலகணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com