பாடச் சொல்லிப் பாடியவை

சிற்றிலக்கியங்கள் செழித்த காலத்தில் மன்னர்களும், செல்வர்களும், கற்றறிந்த சான்றோர்களும், ஈற்றடி தந்து வெண்பாவோ, கட்டளைக் கலித்துறையோ பாடச்சொல்லிக் கேட்டு சுவைத்துள்ளனர்.
பாடச் சொல்லிப் பாடியவை

சிற்றிலக்கியங்கள் செழித்த காலத்தில் மன்னர்களும், செல்வர்களும், கற்றறிந்த சான்றோர்களும், ஈற்றடி தந்து வெண்பாவோ, கட்டளைக் கலித்துறையோ பாடச்சொல்லிக் கேட்டு சுவைத்துள்ளனர். பாடச் சொல்லிப் பாடப்பட்ட பாடல்கள் சுவையானவை. அருட்கவிஞர்களின் வரலாறுகளிலும், தனிப்பாடல் திரட்டுகளிலும் அப்பாடல்கள் உள்ளன. அவற்றுள் இரண்டு பாடல்கள் வருமாறு:
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஒருமுறை இராமநாதபுரம் சென்றார்; சேதுபதியைக் காண விரும்பினார்; முடியவில்லை. இவர்தம் பெருமை அறிந்தும், ஏனோ அழைப்பு இல்லை. மன்னர் ஒருநாள், சில புலவர்களை அழைத்து, 'கண்விண்பெண் பொன்பண் கனி' என்ற ஈற்றடி கொடுத்து, தண்டபாணி சுவாமிகளிடம் காட்டி, பாடச் சொல்லிப் பாடலை வாங்கிவரக் கூறினார். புலவர்களோ, சுவாமிகளுக்கு ஈற்றடி கொடுத்ததாகக் கூறாமல், தங்களுக்குக் கொடுத்ததாகக் கூறி, பாடல் கேட்டார்கள். தண்டபாணி சுவாமிகளோ, ஈற்றடி தமக்குக் கொடுத்ததே என்று கூறி,

''முருகனுக்கு மூவாறு, முன்பு தொட்டுக் காத்தல்,
உருகுமயல் ஈதல், உறுபூண் - பெருகுசெவி
உண்மகிழ்ச்சி சேர்ப்ப(து) உலகதனைச் சூழவிடல்
கண்விண்பெண் பொன்பண் கனி''

என்று பாடிக் கொடுத்தார். முருகனுக்கு மூவாறு கண்கள்; முன்பு தொட்டுக் காப்பது விண்; உருகுமயல் ஈதல் (வள்ளி நாயகி என்னும்) பெண்; உறுபூண் பொன்; பெருகு செவியுள் மகிழ்ச்சி சேர்ப்பது பண்; உலகதனைச் சூழவிடல் கனி எனப் பொருள் தோன்றும் இவ்வெண்பா, புலவரின் பாடல் புனையும் திறமைக்குச் சான்றாகத் திகழ்வது.
'கற்பனைக் களஞ்சியம்' என்று போற்றப்பட்ட சிவப்பிரகாச சுவாமிகள், வெள்ளியம்பல முனிவரிடம் தமிழ் கற்கச் சென்றபோது, அம்முனிவர் பெருமான், 'கு'வென்று தொடங்கி, 'ஊருடையான்' என்பதை நடுவில் அமைத்து, 'கு'வென்று முடியுமாறு வெண்பாப் பாடுமாறு பணித்தார். அற்புதமான சொல்லாட்சியும் கற்பனை வளமும் அமைய,

''குடக்கோடு வான் எயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னமணி வாற்கு - வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லையதன் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னும் உலகு''

என்று பாடினார் சிவப்பிரகாசர். தக்கயாகத்தில் சூரியனின் பற்களை உடைத்தது, திருமாலின் வராக அவதாரத்தில் கொம்பைப் பிடுங்கித் தரித்தது, யானை வடிவங் கொண்ட அசுரனைக் கொன்று தோலை உரித்து அணிந்தது ஆகிய சிவபரம்பொருளின் வீரதீரச் செயல்களைக் கூறும் புராண நிகழ்வுகளைக் கொண்டும், இலக்கிய மரபைக் கொண்டும் பாடலைப் புனைந்துள்ளார் புலவர்.
'மேற்குத் திசையை நோக்கி ஓடுகின்ற சூரியனுடைய பற்களை உடைத்தவரும், பன்றியின் கொம்பை முன்னொரு காலத்தில் அணிந்தவரும், வடதிசை நோக்கி ஓடுகின்ற தென்றலைத் தேராக உடைய மன்மதனின் பகைவரும் ஆகிய சிவபெருமானுக்குத் தில்லை ஊராகும்; யானையின் தோல் ஆடையாகும்; வாகனம் எருதாகும் என்று கூறும் உலகு' என்பது பொருள். 'வடக்கோடு தேருடையான்' என்ற தொடரைக் கேட்டு வெள்ளியம்பலவாணர் உவந்தார் என்பர். இத்தகு சுவைமிக்க பாடல்கள் தனிப்பாடல் திரட்டுகளில் நிறையவுள்ளன.
-முனைவர் ந. முருகேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com