இந்த வார கலாரசிகன்

நெல்லைக்குப் போனால் மணிமுத்தாறு அல்லது அகஸ்தியர் அருவியில் குளித்தாக வேண்டும் என்பது எனக்குக் கட்டாயம்.
இந்த வார கலாரசிகன்

நெல்லைக்குப் போனால் மணிமுத்தாறு அல்லது அகஸ்தியர் அருவியில் குளித்தாக வேண்டும் என்பது எனக்குக் கட்டாயம். பள்ளிச் சிறுவனாகப் படித்து வளர்ந்த அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபவிநாசம் பகுதிகளில் பயணிப்பதும், பழைய பள்ளித் தோழர்களையும் நண்பர்களையும் சந்தித்து அளவளாவுவதும் தருகின்ற புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் வார்த்தையில் விவரிக்க முடியாது.

பொதிகைமலை அடிவாரத்தில் தாமிரவருணிக் கரையோரமாகப் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளைத் தழுவிச் செல்லும் தென்றல் காற்று ஏற்படுத்துகின்ற சிலிர்ப்புக்கு இணை இந்த உலகிலேயே எதுவுமில்லை. இந்த முறை கடந்த வெள்ளிக்கிழமை அகத்தியர் அருவியில் ஆசைதீர ஒரு மணி நேரம் குளித்துவிட்டுத் திரும்பும்போது அங்கே ஓர் ஆச்சரியம் என்னை எதிர்கொண்டது.

பிரதமர் நரேந்திர மோடி தூய்மை பாரதத் திட்டத்தை அறிவித்து இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்காகப் பெட்ரோல், டீசல் வாங்கும்போது ஒரு சிறிய தொகை வரியாகவும் பெறப்படுகிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன என்பதைத் தவிர பெரிய அளவில் இந்தியா தூய்மை அடைந்துவிட்டதா என்றால், இல்லை. திட்டம் அறிவிக்கப்படுவதாலேயே இந்தியா தூய்மை அடைந்துவிடாது என்பதுதான் நிதர்சன உண்மை.

ஐந்தாறு வாலிபர்கள், அகத்தியர் அருவியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களால் வீசி எறியப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளையும், துணிமணிகளையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். விசாரித்தபோது, அவர்கள் சுற்றுலாவிற்காக திருப்பூரிலிருந்து வந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. அங்கே இருந்த காவல் துறை அதிகாரியிடம் சுற்றுப்புறம் அசுத்தமாக இப்படி பிளாஸ்டிக் குப்பைகளால் நிறைந்து கிடக்கிறதே என்று அவர்கள் புகார் தெரிவித்தபோது, உள்ளாட்சி அமைப்புகள் இதில் அக்கறை காட்டுவதில்லை என்று அவர் தனது ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்.

அடுத்த நிமிடமே அந்த வாலிபர்கள் துப்புரவுப் பணியில் இறங்கி விட்டார்கள். அவர்கள் செய்வதைப் பார்த்து அங்கே வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சிலரும் களமிறங்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கிருந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு ஓர் இடத்தில் சேர்க்கப்பட்டுவிட்டன. அதைவிட ஆச்சரியமான இன்னொரு செய்தியை அந்தக் காவல்துறை அதிகாரி தெரிவித்தார். பாபவிநாசம் கோயிலுக்கு அருகேயுள்ள ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள ஓட்டுநர்கள், சேர்த்து வைக்கப்பட்ட அந்தக் குப்பைகளை மலையிலிருந்து இலவசமாக எடுத்துச் சென்று ஊராட்சி குப்பைக் கிடங்கில் சேர்க்க உதவுகிறார்களாம்.

முக்கியமான சுற்றுலாத் தலமான அகத்தியர் அருவி பகுதியில் குப்பைகளைச் சேகரிக்கும் குப்பைத் தொட்டிகள்கூட வைக்கப்படாமல் இருக்கிறது என்பதுதான் வேதனை தரும் செய்தி. எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றன. இதுபோன்ற இடங்களில் தங்களது விளம்பரத்திற்காகவாவது குப்பைத் தொட்டிகளை அமைத்துத்தரக் கூடாதா? ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் முறை வைத்துக் கொண்டு அந்தந்தப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களைத் தூய்மைப்படுத்துவதைக் கடமையாகச் செய்யக் கூடாதா?

அந்தத் திருப்பூர் வாலிபர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சி எல்லோருக்கும் வந்தால் மட்டும்தான் இந்தியா தூய்மையாகுமே தவிர, அரசு ஆணைகளால் மட்டுமே மாற்றம் ஏற்பட்டு விடாது!


இந்த முறை நான் நெல்லைக்குப் பயணப்பட்டபோது ரயிலில் படிப்பதற்கு என்று ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த புத்தகங்கள் இருந்தன. அதில் ஒன்று தோழர் தா. பாண்டியனின் "திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்' என்கிற புத்தகம். மார்க்சியத்தில் தோய்ந்த தோழர் தா.பாண்டியனின் பார்வையில் வள்ளுவம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் பேராவல் எனக்கு எழுந்ததால், சென்னையிலிருந்து ரயில் கிளம்பிய சில நிமிடங்களில் அந்தப் புத்தகத்துக்குள் மூழ்கி விட்டேன்.

""ஒருவழிச் சாலையில் நடந்து பழக்கப்பட்ட வாசகர்களை, நாற்கரச் சாலையில் நடக்க வைத்திருக்கிறது இந்த நூல். திருவள்ளுவரை அறவாழியாகவே பார்த்தவர்களை, அவரை ஒரு பொருளியல் வல்லுநராகவும் பார்க்க வைத்திருக்கிறது'' என்கிற அணிந்துரை எழுதியிருக்கும் பேராசிரியர் தி.இராசகோபாலனின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.

வள்ளுவர் வாழ்ந்த காலமும் தமிழ்நாடும் என்று தொடங்கி, திருவள்ளுவரின் கடவுள் கொள்கை, சமுதாயப் பார்வை, சிந்தனைப் போக்கு, வள்ளுவமும் உழவரும், பகுத்துண்ணல், அரசியல் பொருளாதாரம் என்று பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்திருக்கிறார் தோழர் தா.பாண்டியன். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு முனைவர் பட்ட ஆய்வுக்கு ஒப்பானதாக அமைந்திருக்கிறது. அவ்வளவு ஆழமாக, வள்ளுவத்தின் அத்தனை பரிமானங்களையும் கூர்ந்து கவனித்து அலசி ஆராய்ந்திருக்கிறார்.

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்பதற்குத் தோழர் தா.பாண்டியன் தந்திருக்கும் விளக்கம் வித்தியாசமானது, சரியானது. ""பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை'' என்பதைத்தான் ஒப்பரிய, உயரிய லட்சியமாக வள்ளுவப் பேராசான் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருப்பதாகக் கூறும் தோழர் தா.பா, அந்தக் குறளை "கொல்லாமை' அதிகாரத்தில் வைத்திருப்பதால், இதைப் பகுத்தறிவு கொண்டு உணர்ந்து "கொல்லாமையைக் கடைப்பிடித்து பல்லுயிர் வாழ உதவுக' என வற்புறுத்துவதாகத் தெரிவித்திருப்பதும், அதைப் பொருத்தமாக மார்க்ஸ், ஏங்கல்ஸýடன் இணைத்திருப்பதும் அருமை.

வள்ளுவம் குறித்துப் பேசுவதாக இருந்தால், தோழர் தா.பாண்டியன் இந்தப் புத்தகத்தில் கூறியிருக்கும் கருத்துகளை அகற்றி நிறுத்திவிட்டுப் பேச முடியாது. நெல்லையிலிருந்து மதுரை வந்து அங்கிருந்து பாண்டியன் விரைவு ரயிலில் சென்னை திரும்பும்போது மீண்டும் ஒருமுறை என்னைத் திரும்பவும் படிக்க வைத்த புத்தகம், "திருவள்ளுவரின் அரசியல் பொருளா
தாரம்'!

நெல்லையில் ஆங்காங்கே மழை. அந்த மழையைப் பார்த்தபோது, சென்ற வாரம் முகநூலில் பகிரப்பட்ட கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது உறுதியாயிற்று. அந்தக் கவிதை இதுதான் -

நல்லோர் ஒருவர் உளரேல்
அனைவருக்கும் பெய்யுமாமே மழை
ஒருவர்கூடவா இல்லை?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com