சங்க இலக்கியங்களில் மனித நேயம்!

மழை பொழியும் போது ஒரு மண் கட்டி கரைந்து உரு விழக்கிறதே என்று மனம் கசிகின்றான் ஒருவன்; நிலவு தேய்ந்து போகிறதே என்று மனம் கவல்கிறான் ஒருவன்; கடல் இப்படி இரவிலும் உறங்காமல் உலவுகிறதே என்று உள்ளம் வருந்துகிறான் ஒருவன்.
சங்க இலக்கியங்களில் மனித நேயம்!

மழை பொழியும் போது ஒரு மண் கட்டி கரைந்து உரு விழக்கிறதே என்று மனம் கசிகின்றான் ஒருவன்; நிலவு தேய்ந்து போகிறதே என்று மனம் கவல்கிறான் ஒருவன்; கடல் இப்படி இரவிலும் உறங்காமல் உலவுகிறதே என்று உள்ளம் வருந்துகிறான் ஒருவன். அஃறிணைப் பொருள்களிடத்து இப்படி ஓர் அருளுணர்வு கொள்ளுவான் ஒருவன். உயர்திணை மாந்தர் வருந்தும்போது எவ்வகை இரக்கம் காட்டுவர்? எங்ஙனம் விரைந்து துயர்மீட்பு செய்வர்? இதுவே மனித நேயம். இது எல்லா உயிராலும், எல்லா மனிதராலும் பிறக்கும்போது கொண்டு வந்தது. "கொடையும் தயையும் பிறவிக்குணம்' என்பது சான்றோர் மொழி.

உலகம் பொது
உலகம் அனைத்துயிர்க்கும் பொது. இயற்கைச் செல்வத்தை எல்லோரும் துய்ப்பதற்கமைந்த அறமனை. உலகம் தோன்றும் போது இன்னின்ன பகுதி இன்னின்னார்க்கெனப் பட்டயம் தீட்டிக்கொடுக்கப்படவில்லை. முதலீடு அனைத்திலும் பெரிய முதலீடு உழைப்பேயாகும். எல்லோரும் உழைப்பதன் வழியே தம் வாழ்வுக்குரிய உணவு உடை உறையுள் ஆகியவற்றைப் பெற்றாக வேண்டும் என்பது இயற்கைச் சட்டம்.

""மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ
மனிதர்நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ!''

என மனிதர் சமநிலைச் சமுதாயத்தை நோக்கிச் செல்லும் நிலையை மகாகவி பாரதி பாடுகின்றார். இது சங்கச் செவ்விலக்கியங்களின் அடிநாதமான குரலே ஆகும்.
÷நேற்றுவரை அவன் வீட்டு அடுப்பில் பூனை தூங்கிக்கொண்டிருந்தது. அவனுடைய தாய் "இன்னும் என் உயிர் போய்த் தொலையவில்லையே' என்று புலம்பினாளாம். அவள் கோல் காலாகக் கொண்டு நடைமெலிந்து கிடப்பவளாம். சிலந்தி வலை பின்னியது போல அவள் முகமெங்கும் முதுமையின் முகவரிகளாம். அவன் மனைவியோ பல குழந்தைகளைப் பெற்று அவற்றுக்குப் பாலும் தர இயலாதவாறு இளைத்து மெலிந்த உடம்பினளாம். இந்நிலையில் அவள் குப்பை மேட்டில் முளைத்த கீரையைக் கொண்டு வந்து உப்பில்லாமல் வேகவைத்து மோர் கூட ஊற்றுதற்கு வழியின்றி, அக்கீரையை உண்டவள். அவள் அழிந்த உள்ளத்தோடு உடுத்திய சேலையும் கிழிந்தும் மாசுபட்டும் இருந்ததாம். பசி அவன் குடும்பத்தையே தின்று கொண்டிருந்ததாம். இப்படித் தன் நிலையைப் பெருஞ்சித்திரன் என்ற புலவன் குமணவள்ளலிடம் கூறுகிறான். குமணன் இதனைக் கேட்டுப் புலவனுக்குப் பெருஞ்செல்வத்தைக் கொடுத்து அனுப்புகின்றாள். வாழ்நாள் முழுவதும் வறுமையின்றி வைத்து வாழ்வதற்குரிய பொருளை மனைவியிடம் கொண்டு சேர்க்கும் பெருஞ்சித்திரனார் என்ன கூறுகின்றார்?

''நின்னயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின் கிளைமுதலோர்க்கும்
இடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க் கென்னாது என்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமணன் நல்கிய வளனே'' (புறம்.163)

என்று கூறுகின்றார். இது குமணன் கொடுத்த செல்வம். இதனை வேண்டிய எல்லார்க்கும் கொடு என்னைக் கேட்டுக் கொடுக்க வேண்டுமென்பதில்லை நீயே கொடு என்று கூறுவதாக உள்ளது. இதுவே மனித நேயம். பொருள் ஓரிடத்தில் தேங்கிக் குவியுமானால் சமுதாயத்தில் வறுமைப் படுகுழிகள் உண்டாகும். எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டுவதல்லால் வேறொன்றறியேன் என்னும் மனநிலை வேண்டும். பொருள் இரும்புப் பெட்டியிலும் வங்கிக் கணக்கிலும் புதையுமானால் அந்தச் சமூகம் பொருட் புழக்கத்தை இழந்து வறுமைக்கோடு மேலோங்கப்பெறும். பணத்தைப் படைத்த சமூகத்தின் மாபெருங்கேடு இது, கூலமாகவும் பாலாகவும் நெய்யாகவும், எண்ணெய் வித்துக்களாகவும், வாழ்க்கைக்குப் புழங்கு பொருளாகவுமே உள்ள சமூகத்தில் பண்ட மாற்றே நிலவும். அங்குப் பொருளைத் தேக்குதல் இல்லை. இதுவே மனித நேயத்தை வளர்த்தது. பிறர்க்குக் கொடுக்கும் ஒப்புரவும் ஈகையும் மனித நேயத்தின் வெளிப்பாடாக விளங்கின.

மனிதப் பண்பு உயிரிரக்கம்

சாலையில் ஒருவன் அடிபட்டுக் கிடந்தால் வழிச்செல்வோர் "ஐயோ பாவம்' என்ற சொற்களோடு விரைந்து அகன்று விடுதல் உலக வழக்கமாகிவிட்டது. இன்றைய உலகியல் அவலம் இது. செவ்வியல் இலக்கியம் மனித மாண்பாகிய உயிரிரக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. சோழப்பெரு வேந்தர்களின் மனித நேயத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளை மொழிவர் புலவர்.


""எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புண்கன் தீர்த்தோன்''

என்பது அவற்றுள் ஒன்று. இதனைத் தாமப்பல் கண்ணனாரும் குறிக்கின்றார்.

""கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஓரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக''

எனப் புறா ஒன்றைக் காப்பாற்ற அதற்கீடாகத் தன் சதையை அரிந்து கொடுத்தான் என இந்நிகழ்ச்சி கூறப்படும். இச்செய்தியின் மிகைத் தன்மையை நீக்கிக் கண்டாலும், துன்புற்ற புறாவின் துயர்தீர்த்த செய்தி நிகழ்ந்த ஒன்றே என உணரலாம். புத்தர், சித்தார்த்தராக இருந்த போதே அடிபட்ட புறாவிற்கு மருந்து தடவிக் காத்ததோடு, ""உயிரைக் கொல்பவர்க்கு அவ்வுயிரின்மீது யாதொரு உரிமையுமில்லை'' என்ற கூறுவதும் எண்ணத்தக்கது.


""ஆவின் கடைமணி நெஞ்சுசுடத்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்''

என்பது இரண்டாவது நிகழ்வு. இது மகன் சென்ற தேரிற் பலியான கன்றுக்கு நிகராகத் தன்மகனையே தேரூர்ந்து அறம் செய்த மனுவேந்தனைப் பற்றியது. இது அரசன் செலுத்த வேண்டிய நீதிமுறை பற்றியது. இங்கு, கன்றுக்குட்டி உயிர்க்கு மனித உயிரா என்பது கேள்வியன்று. அரசன் தன்கீழ் வதியும் எந்த உயிரும் துன்பப்படக்கூடாது என்ற முறைமையைக் கூறும் கதையிது.
÷சங்க இலக்கியம் மனித நேயத்தின் உச்ச நிலையைக் காட்டுகின்றது. பாரி, பேகன், குமணன் போன்றோர் மனிதநேயச் சிகரங்களாகத் திகழ்ந்தவர்கள். பாரி, பேகன் வரிசையில் வருவோரே, ஆய், அதிகன், நள்ளி, காரி ஓரி என்பாருமாவர்.
அஃறிணை உயிர்களில் எறும்பும், வண்டும், புழுவும் பூச்சியும், பறவையும் விலங்கும் துன்பப்படாது பண்டைத் தமிழ் மக்கள் பாதுகாத்த செயலைக் காணும்போது உயர்திணையாகிய மனிதர்களை அக்காலத்தில் எப்படிக் காத்திருப்பர் என்பதை உய்த்துணரமுடியும்.
÷இன்று பலர் இறக்குமுன் உறுப்புக் கொடைநேர்வதும், உடலை மருத்துவமனை கொள்க என ஓம்படை செய்வதும் மனிதநேயச் சால்புகளேயாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com