தமிழ்ச் செல்வங்கள்: பால்

பல், பால் ஆகும். பல இடங்களில் இருந்து வரும் சுரப்பே பால். பல் வெண்மை, பால் வெண்மைக்கும் உண்டு.
தமிழ்ச் செல்வங்கள்: பால்

பல், பால் ஆகும். பல இடங்களில் இருந்து வரும் சுரப்பே பால். பல் வெண்மை, பால் வெண்மைக்கும் உண்டு. பால் என்பது பருப்பு, தூய்மை, பிரிவு என்பவை முதலாக விரியும் பொருளது. இரு திணை ஐம்பால் - இலக்கணப் பகுப்பு. அவை: உயர்திணை, அஃறிணை. ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால் பலவின்பால்.
÷ஆவின்பால், ஆட்டுப்பால் முதலியவை இயங்குதிணைப் பால். ஆலம்பால், அரசம்பால், அத்திப்பால், கள்ளிப்பால், எருக்கம்பால் முதலியவை நிலைத்திணைப் பால். கரும்புச் சாறு, தென்னம் பாளை, பனம் பாளை வடிநீர், தேங்காய்ப் பிழிவு, மாம்பழப் பிழிவு ஆயவை கரும்புப் பால், தென்னம் பால், பனம் பால், தேங்காய்ப் பால், மாங்காய்ப் பால் எனல் மக்கள் வழக்கு.

""மாங்காய்ப் பால் உண்டு மலை மேல் இருப்பவர்க்குத்
தேங்காய்ப் பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப் பால் ஏதுக்கடி!''

என்பது,குதம்பைச் சித்தர் பாடல். ""தாய்ப்பால் பருகின் நோய்ப்பால் நெருங்கா'' என்பது மருத்துவ ஆய்வு. ""பீரம் பேணி பாரம் தாங்கும்'' என்பது ஒளவையார் மொழி. பீரம் = தாய்ப்பால். முப்பாலுக்கு ஒப்பாம் பால் எப்பாலும் இல்லை என்பது அறவர், அருளர், அறிவர் முடிபு. முப்பாலாவது திருக்குறள்.
மேல்பால், கீழ்பால், வடபால், தென்பால் என்பன திசைப்பெயர்.
÷உன் பால், அவன் பால், என் பால், வீட்டின் பால் என்பவை இடப் பெயர். இப்பாலையும் (இப்பக்கத்தையும்) அப்பாலையும் (அப்பக்கத்தையும்) இணைப்பது பாலம் (பால் + அம்). வெள்ள நீர் நுரை, பால் நுரை. ""பால் நுரைப் போர்வை போர்த்து'' (திருவிளை). வெண்ணிற மெல்லாடை, ""பாலாடை அன்ன மேலாடை'' பால் பருகும் பருவத்தனும், பால் போலும் குறையிலா உளத்தனும் பாலன்! அவன் படிக்கும் பள்ளி பாலர் பள்ளி. கற்பிக்கும் ஆசிரியன், பாலாசிரியன். (எ-டு) மதுரை இளம் பாலாசிரியன் சேந்தங் கூத்தன். மதுரைப் பாலாசிரியன் (சங்கச் சான்றோர்).
÷பால் உறவே உயிரிகளின் வளர்நிலை மரபியல் காவல்! ""ஆலிலை உதிர்வதேன் ஆவின் கன்று சாவதேன்'' என்பது இரு சொல்லழகு. ""பாலற்று, பாலற்று'' என்பது விடை. ஊட்டம் வாயாக் குழந்தை "சவலை'; மழைநீர் வளக் கொழிப்பு அற்ற நிலம் பாலை!
""முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல் பழிந்து பாலை என்பதோர்
படிவம் கொள்ளும்''.
இயற்கை வளம் குன்றிய பாலையை அன்றித் தமிழகத்தில் பாலை என்பது இல்லை. மாந்தர் நேயக் குறுக்கமும் தந்நலப் பெருக்கமும் செயற்கைப் பாலையாக்கி வருதல் வெளிப்படை.
÷யாழ் வகையுள் ஒன்று, பாலை யாழ்! பண் வகையுள் ஒன்று, பாலைப் பண்! பாலை ஒழுக்கம் என்பது பிரிவு ஒழுக்கம். பிரிவுப் பாலை, அன்பின் ஐந்திணையுள் ஒன்று என்பது அகப்பொருள்!
÷"முளைப்பாரி'யைப் பாருங்கள்! பசுமையும் வெண்மையும் கொழுமையும் கண்ணைப் பறிக்கும். அதற்குப் "பாலிகை' என்பது பழம் பெயர்! பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்றான் ஒருவன்; இன்னொருவன் ""அது நழுவித் தேனில் விழுந்து வாயில் விழுந்தது'' என்றான். பாலின் இன்பச் சுரப்புகள் இன்னும் தோன்றுமே!

- தொடர்வோம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com