திருக்குறளும் தேசப்பிதாவும்!

உலக மொழிகளிலே தமிழில் உள்ளது போல் நீதி நூல்கள் எந்த மொழியிலும் இல்லையென்றும் அதில் தலையாய நூல் திருக்குறள் என்றும் முதன்முதல் கூறியவர் வீரமாமுனிவர். திருக்குறளை லத்தீன் மொழியில் முதன்முதல் மொழிபெயர்த்த வரும் இவர்தான்.
திருக்குறளும் தேசப்பிதாவும்!

உலக மொழிகளிலே தமிழில் உள்ளது போல் நீதி நூல்கள் எந்த மொழியிலும் இல்லையென்றும் அதில் தலையாய நூல் திருக்குறள் என்றும் முதன்முதல் கூறியவர் வீரமாமுனிவர். திருக்குறளை லத்தீன் மொழியில் முதன்முதல் மொழிபெயர்த்த வரும் இவர்தான்.
வீரமாமுனிவருக்குப் பிறகு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கின்றனர். ஆங்கிலத்தில் மட்டும் ஜி.யு.போப் முதல் 96 பேர் திருக்குறளை மொழிபெயர்த்திருக்கின்றனர். இந்திய மொழிகளில் 13 மொழிகளிலும் கிழக்காசிய மொழிகளில் 10 மொழிகளிலும், ஐரோப்பிய மொழிகளில் 14 மொழிகளிலும் திருக்குறள் மொழிப் பெயர்க்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் எத்தனையோ தத்துவ நூல்கள் இருக்கின்றன. அவையெல்லாம், இல்லாத உலகத்திற்குச் செல்லாத வழியைக் காட்டக்கூடிய நூல்கள். திருக்குறள் ஒன்றுதான், இருக்கின்ற உலகத்தில் வாழுகின்ற மக்களுக்கு வழிகாட்டக்கூடிய நூலாக இருக்கிறது. ஆகவே, நூல்களில் சிறந்தது திருக்குறள் என்று கூறினார் ஆல்பர்ட் சுவைட்சர்.

""வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்
குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி''

என்று மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். "எல்லா நாட்டைச் சார்ந்தவர்களும் திருக்குறளை அவசியம் படிக்கவேண்டும்' என்று கூறினார் பிரெஞ்சு நாட்டு மொழியியல் அறிஞர் ஏரியல்.
 "எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் திருக்குறளை ஏன் படிக்க வேண்டும்?' என்று ஏரியல் கூறினார் என்று ஏனைய அறிஞர்களிடம் கேட்டபோது, ""என்னதான் படித்தாலும் பைபிள் ஒரு கிறிஸ்துவரைத்தான் உருவாக்குகிறது. குரான் ஓர் இஸ்லாமியரைத்தான் உருவாக்குகிறது. கீதை ஓர் இந்துவைத்தான் உருவாக்குகிறது. திருக்குறள் ஒன்றுதான் ஒரு மனிதனை உருவாக்குகிறது. அதனால் அப்படிச் சொன்னார்'' என்று சொன்னார்கள். ஆக, மனிதனை மனிதனாக உருவாக்கக்கூடிய மகத்தான நூல்தான் திருக்குறள்.
எந்த இனத்தையும் சாராமல், எந்த மொழியையும் சாராமல் மனித இனம் அனைத்திற்கும் பொதுவான நீதியை உரைப்பதால்தான் திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது. அப்படிப்பட்ட நூலைத்தான் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.
""இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால் விந்தியத்திற்கு வடக்கே உள்ளவர்கள் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவின் தலைமை மொழி தமிழ்'' என்று காந்தியடிகள் ஆணித்தரமாகக் கூறினார். லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று லண்டன் பல்கலைக்கழகத்திற்குத் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது காந்தியடிகள் கடிதமும் எழுதினார். அது அன்றைக்கு ஏற்றுக்கொள்ளப் படவில்லை.
காந்தியடிகள் திருக்குறள் மேல் மிகவும் பற்றுடையவராக இருந்தார். அவருக்குத் திருக்குறள் மேல் பற்று ஏற்படச் செய்தவர் டால்ஸ்டாய். திருக்குறளில் "இன்னா செய்யாமை' என்ற அதிகாரத்தில் உள்ள ஆறு குறள்கள் டால்ஸ்டாய்க்கு மிகவும் பிடித்தமான குறள்களாகும்.
திருக்குறள் கருத்தால் ஈர்க்கப்பட்ட காந்தியடிகள் திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழைக் கற்றுக்கொள்ள நினைத்தார். அது இயலவில்லை. ஆனால், தமிழில் கையெழுத்துப் போட மட்டும் கற்றுக் கொண்டார். திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பைச் சிறையில் இருந்தபோது முழுவதும் படித்ததாக அவர் சுயசரிதையில் எழுதியிருக்கிறார். இந்திய சுதந்திரத்திற்கு அறவழிப் போராட்டத்தை அவர் கைக்கொள்ளக் காரணமே திருக்குறள்தான் என்று பல்வேறு அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். காந்தி இருந்திருந்தால் திருக்குறளைத் தேசிய நூலாகவும் தமிழை ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் இருக்கும்படிச் செய்திருப்பார்.
விக்டோரியா மகாராணியார் இருந்தபோது நாள்தோறும் ஒவ்வொரு குறளைப் படித்து, அதன் பொருளை உணர்ந்து கொண்டார் என்று குறிப்பு இருக்கிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் திருக்குறள் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. ரஷ்யாவின் இரும்பு மனிதர் என்று கூறப்படும் ஸ்டாலின், பாதாளச் சுரங்க அறையில் திருக்குறளைப் பாதுகாத்து வைத்திருந்தார் என்று அறியும்போது திருக்குறளின் சிறப்பு எப்படிப்பட்டது என்பதை இந்தியத் தலைவர்கள் எண்ணிப் பார்க்கக் கூடாதா?
 ஏழு என்ற எண் சிறப்பு திருக்குறளுக்கு உண்டு. மொத்தம் 1330 குறள். பூஜ்யத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஏழுதான் கூட்டுத்தொகை. திருக்குறளின் அதிகாரம் 133. இதன் கூட்டுத் தொகையும் ஏழுதான். காமத்துப்பாலின் அதிகாரம் 25. அதன் கூட்டுத் தொகையும் ஏழுதான். பொருட்பாலில் அதிகாரம் 70. பூஜ்யத்தை நீக்கிவிட்டால் அதுவும் ஏழுதான். திருக்குறளின் சீர்களும் ஏழுதான். "திருவள்ளுவர்' என்ற பெயரே ஏழு எழுத்துகளால் அமைந்த பெயர்தான்.
 கடல்கள் ஏழு; இசையும் ஏழு; பிறப்பும் ஏழு; வானவில்லின் நிறமும் ஏழு. இயற்கையோடு ஒன்றிய ஏழும் திருக்குறளுக்குப் பொருந்தும். திருக்குறள் வழி நடந்தால் தேசம் திருந்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com