"திரு'வால் நேர்ந்த தீங்கு!

இலக்கணம், இலக்கியத்திற்கு அமைந்த வேலி. சீரும் தளையும் அடியும் பாட்டின் வடிவழகைச் சிதையாமல் காக்கும் அரண்.
"திரு'வால் நேர்ந்த தீங்கு!

இலக்கணம், இலக்கியத்திற்கு அமைந்த வேலி. சீரும் தளையும் அடியும் பாட்டின் வடிவழகைச் சிதையாமல் காக்கும் அரண். திருவாசகம் தமிழ் இலக்கணத்தையொட்டிப் பல்வகை யாப்புகளில் பாடப்பட்டுள்ள அருள் நூல். "பா எனப்படுவது உன் பாட்டே' என்று மாணிக்கவாசகரைப் போற்றுகிறார் சிவப்பிரகாச சுவாமிகள். இதனால் "பாட்டு' என்று சிறப்பித்துச் சொல்வதற்குரிய எல்லாத் தகுதிகளையும் பெற்றது திருவாசகம் என்பது தெளிவு. ஆதலின் அதில் பிழை இருக்க வாய்ப்பில்லை. அப்படிப் பிழை காணப்பட்டால், அஃது ஏடுபடுத்தியவராலோ பதிப்பித்தவராலோ நேர்ந்ததாகும்.

""ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன்; அன்புருகேன்;
பூமாலை புனைந்தேத்தேன்; புகழ்ந்துரையேன்; புத்தேளிர்
கோமான்நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே''

என்பது திருச்சதகத்தில் "அறிவுறுத்தல்' என்னும் பகுதியின் நான்காவது பாடல். இப்பாடல் கொச்சகக் கலிப்பா. கொச்சகக் கலிப்பா பெரிதும் கலித்தளையையும் (காய் முன் நிரை) ஒருசில இடங்களில் மட்டும் பிற தளைகளையும் பெற்று வரும். எனினும் ,நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர்களை (கூவிளங்கனி, கருவிளங்கனி) பெற்று வாராது. அடிதோறும் நான்கு சீர்கள் கொண்ட நான்கு அடிகளால் வரும். இப்பாட்டின் மூன்றாம் அடியில் ஐந்து சீர்கள் வந்துள்ளன. மர்ரே பதிப்பு முதலான எல்லாப் பதிப்புகளிலும் இவ்வாறே உள்ளது. உரையிட்டோரும் இதுபற்றி யாதும் சொல்லாமலே சென்றுள்ளனர்.
கதிர்மணி விளக்கத்தில் மூன்றாவது அடி, ""கோமான்நின் திருக்கோயில் தூகேன்மெழுகேன் கூத்தாடேன்'' என்று பதிப்பிக்கப்பட்டுள்ளது. தூகேன்மெழுகேன் என்பது நான்கசைச்சீர் (தேமாநறும்பூ) ஆகும். இவ்வகைப் பாட்டில் நான்கசைச்சீர் வருதல் வழுவாகும். மகாவித்துவான் அருணை வடிவேலு முதலியார் மட்டும், "இப்பாட்டில் மூன்றாம் அடி ஐஞ்சீராய் மயங்கிற்று' என்று குறித்துச் சென்றுள்ளார். இவ்வடி எவ்வாறு ஐஞ்சீராயிற்று?
திருவாசகத்திற்குக் காழித் தாண்டவராயர் 1834இல் எழுதிய அனுபூதி உரை உ.வே.சா. நூல் நிலையத்தால் 1954இல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இப்பாட்டுக்கு உரையாசிரியர் தம் சொற்களால் எதனையும் எழுதாமல்,

""நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி என்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே!''

என்னும் அப்பர் திருத்தாண்டகத்தையே உரையாக அமைத்துள்ளார். இதனால் இப்பாட்டு அப்பர் தேவாரத்தின் கருத்தையே வேறுவகையில் வேறுயாப்பில் தருகிறது என்பது வெளிப்படை. எனவே, மூன்றாம் அடியில் உள்ள "தூகேன் (அலகிடல்) மெழுகேன் (மெழுக்கிடல்) கூத்தாடேன்' (கூத்தாடல்) என்பனவற்றில் எதனையும் மிகையாகக் கொள்ளவியலாது. ஆனால், தூகேன் மெழுகேன் என்பது இயற்சீர் வெண்டளை; மெழுகேன் கூத்தாடேன் என்பது நேரொன்றாசிரியத் தளை. இவை பிற தளைகள். இம்மூன்றாம் அடியின் இரண்டாம் சீராகிய "திருக்கோயில்' என்பதில் "திரு'வை நீக்கிவிட்டால், அது, "கோமான்நின் கோயில்தூ கேன்மெழுகேன் கூத்தாடேன்' என்று நான்குசீர் கொண்ட அடியாக அமையும். எல்லா இடத்திலும் மூவசைச் சீராய் வெண்சீர்வெண்டளை அமைந்து சிறக்கும். ஏனெனில், பிற தளைகளில் வெண்சீர்வெண்டளையே இவ்வகைப் பாக்களில் மிகுதியாக இடம்பெறுதல் காணலாம்.
"கோயில்தூ கேன்மெழுகேன்' என்று வகையுளியாக்கலாமா என்னும் கேள்விக்கு இப் பகுதியிலேயே ""சிவனேஎம் பெருமான்எம் மானேஉன்'' என்றும், ""கூத்தாட்டு வானாகி'' என்றும், ""சூழ்த்தமது கரமுரலும்'' என்றும், ""மாளாவாழ் கின்றாயே'' என்றும் வருதல் விடையாய் அமையும். "திரு' என்னும் அடையின்றி வறிதே கோயில் என்று குறித்தல் உண்டு என்பதற்கு, ""வஞ்சகப் பெரும் புலையனேனை உன்கோயில் வாயிலிற் பிச்சன் ஆக்கினாய்'' (திருச்சதகம், 100) என்னும் மணிவாசகமும், ""கோயில் புக்கு'' என்னும் அப்பரடிகள் தொடருமே சான்றுகளாய் அமையும்.
ஏடெழுதியவர் எவரோ, ""கோமான்நின் கோயில்'' என்பதற்குப் பதிலாகக் ""கோமான்நின் திருக்கோயில்'' என்பது கலித்தளையாய் அமைவதுகண்டு அப்படிக் கொள்ளும்போது ஐஞ்சீர் அடியாய் ஆவதைக் காணாமல் எழுதிவிட்டார் என்றே தோன்றுகிறது. எனவே மூன்றாம் அடி, ""கோமான்நின் கோயில்தூ கேன்மெழுகேன் கூத்தாடேன்'' என்றிருப்பதே பொருத்தமாக அமையும். அறிஞர்கள் சிந்திப்பார்களாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com