மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை

சங்க இலக்கியங்களில் மயில், குயில், புறா முதலியவற்றை அழைத்து, தன் மனத்தில் உள்ளவற்றைக் கூறி, தன் தலைவனிடம் சென்று கூறுமாறு வேண்டி விண்ணப்பித்த பாடல்கள் நிறைய உள்ளன.
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை

சங்க இலக்கியங்களில் மயில், குயில், புறா முதலியவற்றை அழைத்து, தன் மனத்தில் உள்ளவற்றைக் கூறி, தன் தலைவனிடம் சென்று கூறுமாறு வேண்டி விண்ணப்பித்த பாடல்கள் நிறைய உள்ளன. ஆனால், இங்கு காக்கையை அழைத்து, தன் மன விருப்பத்
தைக் கூறி நிறைவேற்றுமாறு இருவர் கூறுகின்றனர். ஒருத்தி, ஐங்குறுநூற்றுத் தாய்; மற்றொருவர் திருமங்கையாழ்வார்.
ஒருநாள் தாய் அயர்ந்திருக்கும் வேளையில் தலைவனோடு உடன்போக்கு சென்றுவிடுகிறாள் தலைவி. தன் மகளைக் காணாமல் நற்றாய் வருந்துகிறாள். மீண்டும் தன் மகள் அவள் உள்ளம் கவர்ந்து சென்ற தலைவனுடன் தன் வீட்டுக்கு வரவேண்டும் என்றும், அவ்வாறு வந்தால், அவர்களுக்குத் திருமணம் நடத்தி வைத்துக் கண்குளிரக் காணவேண்டும் என்றும் விரும்புகிறாள். ""இவ்வாறு வருவதற்குக் காக்கையே! நீ கரைய வேண்டும்; அவ்வாறு கரைந்தால், கைம்மாறாக உனக்குப் பச்சை இறைச்சியை சமைத்து அளிப்பேன்'' என்றும் கூறுகிறாள். இத்தாய் கூற்றாக பாலைத்திணையில் வைத்து புலவர் ஓதலாந்தையார் பாடியுள்ளார்.

""மறுவி றூவிச் சிறு கருங்காக்கை
யன்புடை மரபினின் கிளையோ டாரப்
பச்சூன் செய்த பைந்திண வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவன்மாதோ
வெஞ்சின விறல்மேற் காளை யோடு
அஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே''

ஒருவரிடம் உதவி கேட்டுச் செல்பவர்கள் அவர்களிடம் போனவுடனேயே உதவி கேட்டுவிடக்கூடாது. முதலில் அவர்களைப் பலவாறு புகழ்ந்து, பாராட்டிப் பேசிவிட்டு, அவர்கள் மனமகிழ்ந்த பின்பே உதவி கேட்க வேண்டும். அதனால்தான் நற்றாய், "காக்கையே' என்று அழைக்காமல், ""குற்றமில்லாத சிறகுகளை உடைய சிறிய கருங் காக்கையே'' என்று பாராட்டி ""மறுவில் தூவிச் சிறுகருங் காக்கையே'' என்று அதன் அழகைப் பாராட்டியுள்ளாள். உயர்திணையாகிய மக்கள் பலரிடம் இல்லாத "விருந்தோடு உண்ணல்' என்ற பண்பைக் காக்கை கொண்டுள்ளது என்பதைக் குறிக்க, ""அன்புடை மரபினின் கிளையோடார'' என்பதின் மூலம் காக்கையிடம் உள்ள பெருமைக்குரிய பண்பைப் பாராட்டுகிறாள்.
திருமங்கையாழ்வாரோ தன்னை ஒரு பெண்ணாகக் கற்பனை செய்துகொண்டு, திருமாலின் அவதாரமான ராமபிரானின் மேல் கொண்ட பக்தியால் அவனைக் காண விழைகிறார். ராமபிரான் வரவில்லை. அதனால் ""காக்கைப் பிள்ளையே, காளமேகம் போல் கரிய நிறமுடையவனும், சொல்லில் வல்லவனும், நித்தியமான புகழையும் உடைய ராமபிரானை என்னிடம் வருமாறு கரைய வேண்டும்'' என்று வேண்டுகிறார். அப்பாடல் வருமாறு:

""கரையாய் காக்கைப் பிள்ளாய்
கருமா முகில்போல் நிறத்தான்
உரையார் தொல்புகழ் உத்தமனைவரக்
கரையாய் காக்கை பிள்ளாய்''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com