இந்த வார கலாரசிகன்

பெரியவர் சீனி. விசுவநாதன், தான் பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாத்து வந்த சில புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டார் என்று முன்பு ஒருமுறை எழுதியிருந்தது, நினைவிருக்கலாம். அப்படி அவர் அனுப்பித் தந்
இந்த வார கலாரசிகன்

பெரியவர் சீனி. விசுவநாதன், தான் பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாத்து வந்த சில புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டார் என்று முன்பு ஒருமுறை எழுதியிருந்தது, நினைவிருக்கலாம். அப்படி அவர் அனுப்பித் தந்திருந்த புத்தகங்களில் ஒன்று ஸ்ரீபுவனேஸ்வரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட திருலோக சீதாராம் எழுதிய "புதுயுகக் கவிஞர்' என்கிற புத்தகம். மகாகவி பாரதியாரை நுண்ணாடியில் வைத்துப் பார்த்து, அவரது அத்தனை பரிமாணங்களையும் 140 பக்கங்களில் அடக்க முற்பட்டிருக்கும் முயற்சிதான் அந்தப் புத்தகம்.
கவிஞர் திருலோக சீதாராம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னால் "ஆனந்த விகடன்' இதழில் மகாகவி பாரதியார் பற்றித் தனது சிந்தனைத் தடாகத்தில் பூத்த கருத்துகளைத் தொடராக எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் "புதுயுகக் கவிஞர்'.
தனது வாழ்நாள் முழுதும் பாரதியார் பற்றிப் பேசியும், பாரதியின் பாடல்களைப் பாடியும் கழித்தவர் திருலோகம். அவரை சந்திக்கும் போதெல்லாம், "ஐயர் பாட்டு ஒன்று பாடு' என்று அவரைப் பாடச் சொல்லிக் கேட்டு ரசிப்பாராம் பாவேந்தர் பாரதிதாசன். பாரதியாரின் பாடல்களை மட்டுமல்ல, பாரதிதாசன் தொடங்கி அவரது சமகாலக் கவிஞர்கள் அனைவருடைய கவிதைகளையும் திருலோகம் பாடி ரசிப்பதைக் கேட்பது என்பதே சுகானுபவம் என்பார்கள்.
"சேக்கிழார் அடிப்பொடி' டி.என். ராமச்சந்திரனிடம் அரை மணி நேரம் அளவளாவிக் கொண்டிருந்தால், ஆறேழு முறையாவது திருலோக சீதாராம் குறித்து ஏதாவது பேசாமல் இருக்க மாட்டார். திருலோகத்திடம் அப்படியொரு ஈடுபாடும் நெருக்கமும் டி.என்.ஆருக்கு உண்டு. திருலோகம் என்கிற ஆளுமை கவிஞனாகவும், ரசிகனாகவும் மட்டும் இருக்கவில்லை. பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து பல கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. எழுத்தாளர் சுஜாதா, கவிஞர் சுரதா உள்ளிட்ட பலருடைய எழுத்துலகக் கன்னிப் பிரவேசம்
திருலோக சீதாராம் நடத்தி
வந்த "சிவாஜி' பத்திரிகையின் மூலம்தான்.
பாரதியாரைத் திருலோக சீதாராம் சந்தித்ததில்லை. ஆனால், பாரதியாரின் குடும்பத்தினரிடம் அதீத ஈடுபாடும் பக்தியும் கொண்டிருந்தார். பாரதியாரின் மனைவி செல்லம்மா பாரதிக்கு உடல்நலம் இல்லை என்று கேள்விப்பட்டவுடன் அனைத்தையும் போட்டது போட்டபடி போட்டுவிட்டு சென்னைக்குக் கிளம்பி விட்டார். செல்லம்மா பாரதியின் உயிர் பிரிந்தது திருலோக சீதாராமின் மடியில் படுத்தபடிதான். செல்லம்மா பாரதி பெற்றெடுக்காத புதல்வர் திருலோக சீதாராம்.
திருலோக சீதாராமுக்கு மொழிபெயர்ப்பாளர் என்கிற இன்னொரு முகமும் உண்டு. ஜெர்மன் மொழியில் ஹெர்மன் ஹெஸ்úஸ எழுதிய "சித்தார்த்தன்' என்கிற புத்தகத்தைத் தமிழாக்கம் செய்தார் திருலோகம். கவித்துவமாக இருக்கும் அந்த மொழிபெயர்ப்பு. தனது 56 வயதில் திருலோக சீதாராம் காலமானபோது, "திருலோகம் என்பவர் சதா சுற்றித் திரிந்து கொண்டிருந்த சித்தபுருஷர்களில் ஒருவர்' என்று குறிப்பிட்டாராம் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்த ஜெயகாந்தன்.
"திருவையாறு லோகநாதன் சீதாராமன்' என்பதன் சுருக்கம்தான் திருலோக சீதாராம். "புதுயுகக் கவிஞர்' புத்தகத்தைப்
படித்து முடித்ததும், கவிஞர் ரவி சுப்பிரமணியன் எழுதி இயக்கி உருவாக்கிய "திருலோகம் என்கிற கவி ஆளுமை' என்கிற குறும்படத்தை இனியும் பார்க்காமல் வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. உடனே தேடி எடுத்து மடிக்கணினியில் போட்டுப் பார்த்தேன். பார்த்தேன் என்றா சொன்னேன். இல்லை, வியந்தேன், சிலிர்த்தேன், சமைந்தேன்.
திருலோக சீதாராம் "புதுயுகக் கவிஞர்' புத்தகத்தில் மகாகவி பாரதியைப் படம் பிடித்திருந்தார் என்றால், கவிஞர் ரவி சுப்பிரமணியன் தனது குறும்படத்தில் கவிஞர் திருலோக சீதாராமை உயிரோடு உலவ விட்டிருந்தார். இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன், ஜெயகாந்தன், டி.என். ராமச்சந்திரன் வரிசையில் அவர் ஆவணப்படுத்தி இருக்கும் இலக்கிய ஆளுமை திருலோக சீதாராம்.
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த எல்லா இசை, இலக்கிய ஆளுமைகளையும் இதுபோல ஆவணப்படமாக எடுத்துப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. இதுபோன்ற முயற்சியில் ஈடுபடுபவர்களுக்குத் தமிழக அரசும், இந்திய அரசும் தாராளமாக நிதியுதவி செய்து ஊக்குவிக்க வேண்டும்.
இப்படியெல்லாம் சிந்தித்தபடி இரண்டாவது முறையும் கவிஞர் ரவி சுப்பிரமணியனின் ஆவணப்படத்தைப் பார்த்து முடித்தபோது பொழுது புலர்ந்திருந்தது. காகம் கரையத் தொடங்கியது. வாகனங்கள் இயங்கத் தொடங்கிவிட்டன. உலகம் விழித்தபோதுதான் அன்று நான் உறங்கத் தொடங்கினேன்.


எங்கள் தலைமுறையினருக்குப் பொருளாதாரம் கற்றுத் தந்தது "தினமணி' ஆசிரியராக இருந்த பெரியவர் ஏ.என். சிவராமன் என்றால், பொது அறிவை வளர்த்த பெருமைக்குரியவர் தமிழ்வாணன். இப்போது போல இணையதளம் இல்லாத காலம். வாராவாரம் "கல்கண்டு', படித்துத்தான் பொது அறிவை வளர்த்துக் கொள்வோம். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களே கூட "கல்கண்டு' பத்திரிகைத் துணுக்குகளில் வரும் தகவல்களைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள்.
கல்கண்டு பத்திரிகை துணுக்குச் செய்திகளுக்காக மட்டுமல்லாமல், தமிழ்வாணன் எழுதும் துப்பறியும் சங்கர்லால் கதைகளுக்காகவும், அவரது கேள்வி பதில்களுக்காகவும் லட்சக்கணக்கில் விற்பனையான பத்திரிகை. தமிழ்வாணனின் பதில்கள் நறுக்குத் தெறித்தாற்போல இருக்கும். சினிமா, அரசியல், மருத்துவம், அறிவியல் என்று எதையும் விட்டு வைக்காமல் அவர் சாதுர்யமாகவும், புத்திசாலித்தனமாகவும் அளிக்கும் பதில்களில் மனதைப் பறிகொடுத்த பலரில் நானும் ஒருவர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரு வருடம் புகுமுக வகுப்புப் படித்தபோது பல பிரமுகர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் தேடிச் சென்று சந்தித்தவர்களில் தமிழ்வாணனும் ஒருவர். நான் அடைந்த பரவசத்தை வார்த்தையால் வடிக்க முடியாது. தமிழ்வாணனை நேரில் சந்தித்திருக்கிறேன் என்று நண்பர்களிடம் அதுகுறித்துப் பல ஆண்டுகள் பெருமையடித்துக் கொண்டிருந்தேன்.
"தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்' என்றொரு புத்தகம். அதிலுள்ள கேள்வி பதில்களில் ஒன்று.
"தமிழகத்தில் செளக்கியமாக இருந்துவரும் எழுத்தாளர்கள் யார்?'
"போர்டு எழுதுகிற எழுத்தாளர்கள் எல்லோருமே செளக்கியமாக இருக்கிறார்கள். ஜிப்பா எழுத்தாளர்கள் இருக்கிறார்களே, இவர்கள் எல்லாம் கஷ்டப்படுகிறார்கள்!'


முகநூலில் வெளியாகி, எனக்கு அனுப்பப்பட்டிருக்கும் கவிதை இது :

மலையும் மலைசார்ந்த இடமும்
குறிஞ்சி அல்ல - குவாரி!
காடும் காடுசார்ந்த இடமும்
முல்லை அல்ல - தொழிற்சாலைகள்!
வயலும் வயல்சார்ந்த இடமும்
மருதம் அல்ல - ப்ளாட்டுகள்!
கடலும் கடல்சார்ந்த இடமும்
நெய்தல் அல்ல - அமிலக்கழிவுகள்!
மணலும் மணல்சார்ந்த இடமும்
பாலை அல்ல - லாரிகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com