கவிதாயினி அனந்தம்மாள்

கவிதாயினி அனந்தம்மாள், 1863ஆம் ஆண்டு, சனவரி மாதம் பிறந்தவர். 1923 ஏப்ரல் 17ஆம் நாள் சாதனைகள் பல செய்து தம் வாழ்வில் நிறைந்தார்.
கவிதாயினி அனந்தம்மாள்

கவிதாயினி அனந்தம்மாள், 1863ஆம் ஆண்டு, சனவரி மாதம் பிறந்தவர். 1923 ஏப்ரல் 17ஆம் நாள் சாதனைகள் பல செய்து தம் வாழ்வில் நிறைந்தார். அறுபது வயது வரை வாழ்ந்த இக்கவிதாயினி, தஞ்சை மாவட்ட பூநன்னிலம் பகுதியிலுள்ள பெரும்பண்ணையூரில் கனவான் சின்னுடையார் மகளாகப் பிறந்து, இலந்தவனஞ்சேரி அப்பாசாமி உடையார் மனைவியாக வாழ்ந்து, வட இந்தியா அசாமில் முசபர்ப்பூரில் காலமானார்.

இவர் எழுதிய கவிதைகள் மிகப் பல. அவற்றுள் 396க்கும் மேலான கவிதைகள் (562 பக்கங்கள்) "ஸ்ரீமதி அனந்தம்மாள் பாடல்கள்' என்ற தலைப்பில் நூலாக அச்சிடப்பட்டுள்ளது. இவர் இறந்து பத்தாண்டுக்குப் பின்பே இவர் எழுதியவை நூலாக வெளிவந்துள்ளன. அந்தக் காலத்திலேயே அனந்தம்மாள் அறக்கட்டளை ஒன்றையும், முதியோர் இல்லம் ஒன்றையும் நிறுவியுள்ளார்.
அனந்தம்மாளின் பாடல்கள் பத்துப் பிரிவுகளாக வகைப்படுத்தப் பெற்றுள்ளன. அவை: குழந்தை இயேசு பாடல்கள், தேவன் பாடல்கள், தேவமாதா பாடல்கள், அரிய பெரியோர்களைப் பற்றிய பாடல்கள், ஹிதோபதேசப் பாடல்கள், பிரலாபப் பாடல்கள், தனநாசன் என்னும் சந்திரகாசன் விலாசப் பாடல்கள், நோவா பேழையும் வேடிக்கைப் பாடல்களும், மெய்ஞ்ஞானக் கும்மிப் பாடல்கள், பழமொழி மாலை.

கவிதையின் யாப்பு அமைப்பு

இவர் இலக்கிய - இலக்கண நூற்புலமை மிக்கவர். யாப்பிலக்கணம் நன்றாகக் கற்றுத் துறைபோயவர். எனவே, மரபுவழியாகிய யாப்பு வழியில் கவிதைகள் வடித்துள்ளார். அவை: வெண்பா, ஆசிரியப்பா, விருதப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மற்றும் கண்ணிகள், இயைபுத் தொடை நயம் நிறைந்தவை.

இராகம், தாளம், பல்லவி, சரணம்:
இவர், கவிதைகளை இயற்றியும் அவற்றிற்கு இன்ன தாளம், இன்ன ராகம் என்றும் பெயரிட்டு பல்லவி, அனுபல்லவி, சரணம் என அமைத்து இசைத்தவர் எனத் தெரிகிறது. பல வகையான ராகங்களின் பெயர்களையும், தாளங்களின் பெயர்களையும் ஒவ்வொரு கவிதையின் முகப்பிலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டார் - நகரத்தார் உரையாடல்
கிராமத்திலுள்ளாரும் நகரத்தில் உள்ளாரும் உரையாடுவதைப் போல் பெரிய கவிதை எழுதிய அனந்தம்மாளின் திறன் வியக்க வைக்கிறது. பாடல் பகுதி வருமாறு:

நாட்டாரே நாட்டாரே நாகரிகம் உமக்குண்டோ?
மாட்டை கட்டியடித்து மண்ணை உழுதுண்பீர்
கோட்டு வாசல் அறியீர் கோமானார் வீடறியீர்
ஆட்ட பாட்டம் அறியீர் அங்காடி வீதி அறியீர்
பாட்டுக் கச்சேரி வைத்துப் பாடமாட்டீர் ஆடமாட்டீர்
வீட்டுக்கு வீடு விருந்துண்டு வெறிஏறி
மாட்டை அடித்து மகத்தான விருந்துண்பீர்!

நகர வாசியே கேளும் நாட்டார்க்கென்ன தெரியும்?
எத்தொழிலுக்கும் ஆதி ஏரின் தொழிலாக
அத்தன் கொடுத்திருக்க அறியாமல் பேசுவதேன்?
ஏருழவு தொழில்தான் எல்லோருக்கும் அன்னமிடும்
ஏராளமான இறை வரிகள் தான் கொடுக்கும்.
எள்ளு விளைந்து வரும் எழிலான எண்ணெய் ஆகும்
கொள்ளு விளைந்து வரும் குதிரைக்குத் தீனியாகும்
அவரை விளைந்து வரும் அமுதக் கறியாகும்
துவரை விளைந்து வரும் தூய கறியாகும்!

நோவா பேழை
நோவா என்பவர் முதல் பிரளய யுகத்தில் அழிந்துவிடும் உலகையும், உலகப் பொருள்களையும் காப்பாற்ற எண்ணினார். ஜெருசல நாட்டு மக்களுக்காக விலங்கு, பறவை, பொருள்கள் யாவற்றையும் காப்பாற்ற ஒரு பேழை செய்தார். கடல் அளவுள்ள பெரிய கப்பலில் பொருள்கள் நிறைந்துள்ளன. மரவகைகள், விலங்கினங்கள் பறவைகள், மீன் வகைகள், வித்துக்கள், மணப் பொருள்கள், உணவு வகைகள், நகைகள், எண்ணெய் வகைகள், வீட்டு உபயோக மரச்சாமான்கள், சரக்குகள் என இப்பேழையில் உள்ள பொருள்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே செல்கிறார் அனந்தம்மாள். எண்பதுக்கு மேல் பாம்பு வகைகளின் பெயர்கள், நாற்பதுக்கு மேலான பூச்சிகளில் வகைகள், வண்டு வகைகளின் பெயர்கள், மீன் வகைகளின் பெயர்கள், நவதானியப் பெயர்கள், நெல் வகைகளின் பெயர்கள் முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளது வியக்க வைக்கிறது!
 
பழமொழி மாலை
பழமொழி மாலை என்ற தலைப்பில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அறக்கருதுகளைப் பழமொழி வடிவில் அடுக்கி எழுதியுள்ளார். இப்பழமொழிகள் இவரே புனைந்த மொழிகள் எனலாம். ஆண்கள், பெண்கள், சமுதாயம், பொதுவானவை என இவருடைய பழமொழிகளை வகைப்படுத்தலாம். அவற்றுள் சில : "கணவன் உரைக்கு இணங்காது இரேல்', "மங்கையர்க்குப் பங்கம் செய்யாதே', "தன்மைக் குணம் பெண்ணுக்கு அழகு', "கண் அடக்கம் பெண்ணுக்கு அவசியம்'; "ஏர் ஒழிந்தால் சீர் ஒழியும்', ""நீசர் மிகுந்தால் பிசாசே ஆளும்', "கள்ள மனத்தில் முள்ளு முளைக்கும்', "எத்தொழிலுக்கும் ஏர்த்தொழில் நன்றாம்'.
கவிதாயினி அனந்தம்மாள் இயல், இசை, நாடகப் பாணியில் கவிதைகள் படைத்த முத்தமிழ்ப் புலமை மிக்கவராகத் திகழ்கிறார். அன்னையர் தினமான இன்று (14.5.17) அனந்தம்மாளின் தமிழ்ப் புலமையை நாம் வியந்து போற்றுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com