நடத்திசின் சிறிதே...

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எட்டு வரை மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் சுட்டுவார்.
நடத்திசின் சிறிதே...

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எட்டு வரை மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் சுட்டுவார். உள்ளத்து உணர்ச்சி மெய்யின்கண் விளங்கித் தோன்றுதல் மெய்ப்பாடு. இதனைச் "சுவை' என்றும் கூறுவர். எட்டோடு "சாந்தம்' என்ற ஒன்றையும் சேர்த்து "நவரசம்' என்பர் வடநூலார்.
எண்வகைச் சுவைகள் இலக்கியத்தில் இடம்பெற்றாலும், அவலச் சுவைமிக்க இலக்கியம் நம் உள்ளத்தை விட்டு நீங்காதிருக்கிறது. அம்முறையில், வன்பரணர் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடலொன்று நெஞ்சை நெகிழச்
செய்கிறது.
தலைமகன் போரில் புண்பட்டு வீழ்ந்த இடத்துக்குச் சென்றாள் தலைவி. அருகே காடு அடர்ந்த மலைப் பகுதி; அங்கே புலி முதலிய கொடிய விலங்குகள் இருந்தன. தலைவன் வீழ்ந்து கிடக்கும் இடமோ நிழல் இல்லாத வெட்டவெளி; காலமோ வெயில் மறையாத மாலைப் பொழுது; அங்கு அவளுக்கு ஆறுதல் கூற ஆளில்லை; சாய்ந்து அழத் தோளில்லை; கதறி அழவும் வழியில்லை. காரணம், கதறி அழும் ஒலி கேட்டுப் புலி வந்து உயிரற்ற உடலையும் எடுத்துச் சென்றுவிடுமோ என்ற அச்சம். அவனது உடலைச் சுமந்துகொண்டு, எப்படியாவது அங்கிருந்து அகன்று விடலாம் என்றால், அதுவும் அவளால் முடியவில்லை. அவலத்தின் உச்சத்தில், உயிர் கவர்ந்த எமனுக்கு விடுக்கின்றாள் ஒரு சாபம். என்னவென்று? அச்சம், அவலம், கோபம் எனப் பலவகை உணர்ச்சிகள் தாக்க உடலும், உள்ளமும் நடுங்கி நிற்கும் தன்னுடைய நிலைமை எமனுக்கும் வாய்க்க வேண்டுமென்கிறாள் தலைவி.
உயிரற்ற கணவனிடம் பேசுகிறாள் தலைவி. "ஐயா! வளையல் அணிந்த என் கையைப் பற்றிக் கொள்; மெல்ல நடப்போம். தொலைவில் மலை தரும் நிழல் இருக்கிறதே... அதுவரையாவது நடப்போம். வெயில் வருத்தாது' என்று பிணமாகக் கிடக்கும் தன் தலைவனிடம் வேண்டுவதைக் கேட்டுக் கலங்காத உள்ளமும் உண்டோ? அப்பாடல்
வருமாறு:

""ஐயோ வெனின்யான் புலியஞ் சுவலே;
அணைத்தனன் கொளினே அகன்மார்
}பெடுக்க வல்லேன்;
என்போற் பெருவிதிர்ப் புறுக நின்னை
இன்னா துற்ற அறனில் கூற்றே!
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழற் சேர்க நடத்திசின் சிறிதே'' (புறம்.255)

""அவல மிகுதியால் பிறக்கும் அரற்றாதலின் இரண்டாமடி நீண்டு நெடிலடியாமாறு காண்க'' என ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் உரையில் கூறியுள்ள நுட்பமான கருத்து நோக்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com