நிமித்தம் பார்த்த பன்றி!

"நிமித்தம்' என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதிகளில் காரணம், சகுணம், அடையாளம், பொருட்டு எனப் பொருள் கூறப்பட்டுள்ளது.
நிமித்தம் பார்த்த பன்றி!

"நிமித்தம்' என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதிகளில் காரணம், சகுணம், அடையாளம், பொருட்டு எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. நிமித்தம் என்ற சொல்லாட்சி சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை என்றாலும், சங்க கால மக்கள் நிமித்தம் பார்த்த செய்திகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இத்தகைய நம்பிக்கைகள் மக்களிடையே இன்றளவும் காணப்படுகின்றன.
நிமித்தம் பார்ப்பது மனிதர்களிடம் மட்டுமே காணப்படுகின்ற பழக்க வழக்கமாயினும், விலங்குகளும் நிமித்தம் பார்த்த செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, இரவுக்குறி வந்த தலைமகனை நோக்கித் தோழி கூற்றாய் அமைந்த, ஈழத்துப் பூதன்தேவனார் இயற்றிய அகநானூற்றுக் குறிஞ்சித் திணைப் பாடலில் பன்றி நிமித்தம் பார்த்த செய்தி இடம்பெற்றுள்ளது.

""முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி,
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம்
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து
இரும்புலி தொலைத்த பெருங் கை யானைக்
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்
இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து,
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி,
கொடு விரல் உளியம் கெண்டும்
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே'' (பா.88)

"பழங்கொல்லையாகிய மேட்டு நிலத்தில் நன்கு தழைத்து வளர்ந்த செந்தினையின் உயர்ந்த வளைந்த பெரிய கதிரை உண்ண வரும் இளமை பொருந்திய பன்றியானது தினையை உண்பதற்குத் தடை வருமோ அல்லது தன் உயிருக்குக் கேடு வருமோ எனக் கருதி, தினைப்புனத்திற்குச் செல்லும் முன் பல்லியின் குரல் எவ்விடத்தில் ஒலித்தது என நோக்கிப் பலனை ஆராய்ந்து, தினைப்புனத்தில் பொறியில்லை என்ற போதிலும் காவல்காரன் ஏற்றும் விளக்கினைக் கண்டு தினைப்புலக் காவல் உள்ளதால் தினையினைக் கவரச் சென்றால் ஆபத்து உண்டு என்பதனைப் பிளவுப்பட்ட வாயையுடைய பல்லியின் சொல் மூலம் உணர்ந்து தப்பித்துக் கொள்கிறது' என்பது இப்பாடலின் பொருள்.
மேலும், நற்றிணையில் உக்கிரப்பெருவழுதி எழுதிய குறிஞ்சித்திணைப் பாடலும் இங்கே குறிப்பிடத்தக்கது. தினைப்புனத்தினைக் கவர வரும் விலங்குகளைக் கவ்விப் பிடித்துத் தினையினைக் காப்பதற்காக தினைப்புனக் காவலன் பெரிய பொறி ஒன்றினை வைத்துள்ளான். இப்பொறியின் அருகே வரும் பன்றியானது பல்லியின் ஒலியினைக் கேட்டுப் பின்வாங்கிச் சென்று உயிர் தப்பி ஓடிவிடுகிறது. உள்ளுறை உவமமாகக் கூறப்பட்ட நற்றிணைப் பாடல் வருமாறு:

""எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில், தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே-
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே'' (நற்.98)

இவ்வாறு பன்றியும் நிமித்தம் பார்த்தது என்பது நம் சங்க இலக்கியம் கூறும் அரிய செய்தி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com