இச்சா... இனியா...?

அஃது என்ன இச்சா? இனியா?, காயா? கனியா?, மலையா? மிதியா? சங்கத்துக்கு முன்பிருந்தே நம் தமிழ்ப் பெண்கள் விளையாடி,
இச்சா... இனியா...?

அஃது என்ன இச்சா? இனியா?, காயா? கனியா?, மலையா? மிதியா? சங்கத்துக்கு முன்பிருந்தே நம் தமிழ்ப் பெண்கள் விளையாடி, இன்றளவும் தமிழ்நாட்டில் மரபு வழியாக ஆடிப்பாடப்பெறும் விளையாட்டுப் பாடல் இது. இதை 'உப்புக்கோடு மரூவுதல்' என்பர். இஃது 'ஒப்புக்கு ஓடி மரூஉதல்' என்ற பெயரில் இருந்திருக்கக் கூடும். கிளித்தட்டு அல்லது கிளிக்கூடு பாய்தல்; வட்டாட்டம் (காசு போட்டு விளையாடுதல்); (மாங்கொட்டை எத்துதல்) 
எத்தல் போன்ற பெயர்களில் இவ்விளையாட்டு விளையாடி வரப்பெறுகிறது.
தொல்காப்பியர் உள்ளிட்ட இலக்கணிகள் இந்நாட்டு மக்கள் பேசிவந்த சொற்களை எல்லாம் எடுத்துக் கையாண்டு இலக்கணம் செய்தனர். அதனால்தான் அவர்கள், 'மொழிப, என்மனார், என்ப, அறிந்திசினோரே, சிவணி' என்றெல்லாம் தத்தம் இலக்கணப் பாடல்களில் சான்றுகளை வைத்துப் பாடியுள்ளனர். 
இந்நாட்டு மக்கள் மண்ணில் உழைக்கிறபோதே அயர்வைப் போக்க ஆடியும், பாடியும், பேசியும், மகிழ்ந்தும் களைப்பைப் போக்கிக் கொண்டார்கள். அரசர்கள், வேந்தர்கள், குறுநில மன்னர்கள் உழைக்கும் மக்களின் உழைப்பைச் சரண்டி, தனதாக்கிக் கொண்டார்கள். அவர்களுக்கு ஏதுவான புகழ்பாடிகளை வைத்திருந்தார்கள். மன்னர்களுடைய போர்கள் நாட்டின் புறத்திலேயே (வெளியே)நடந்தன. அவை பற்றிப் புகழ்பாடி, புலவர்களால் பாடப்பட்ட பாடல்கள் புறப்பாடல்கள் (புறநானூறு) ஆகும். 
நாட்டுக்குப் புறத்தே நிகழ்ந்த நிகழ்வுகளை வைத்துப் பாடப்பட்ட பாடல்கள் யாவும் 'நாட்டுப்புறப் பாடல்கள்'தானே? அதனால்தான் இம்மண்ணில் உழைக்கும் மக்கள் பாடி வருகின்ற பாடல்களை 'நாட்டுப்புறப் பாடல்கள்', 'விளிம்பு நிலை மாந்தர் பாடல்கள்' என்று நாம் கூறி வருகிறோம். இஃது என்ன முறைமை?
இதனை, 'மண்சுமந்த பாடல்கள்' அல்லது 'உழைப்பார் பாட்டு'' என்றல்லவா அழைக்க வேண்டும். அஃதே முறைமை! 
இப்பாடல்கள் யாவும், அகநானூறு, குறுந்தொகை உள்ளிட்ட சங்க அகப்பாடல்களுக்கு முன்மாதிரியாக வைத்துப் போற்ற வேண்டிய பாடல்களாகும்.
தோழிகளோடு விளையாடும் தலைவி, தலைவனின் காதில் கேட்குமாறு, ஒவ்வொரு பாண்டிக் கட்டத்தையும் தாண்டும் போதும், சிலேடையாக, 
''இச்சா- இச்சையுள்ள(தலைவனே!) - தோழியே!
இனியா? - எமக்கு இனிமையானவனே! இனிமையானவளே! 
பூவா? - எனக்குத் தரப் பூ வைத்திருக்கிறாயா இல்லை வேறு ஏதாகிலும் கொண்டு வந்திருக்கிறாயா?
காயா? - என்மீது கோபமா? 
கனியா? - என்னோடு கனிவாகப் பேசுவாயா?
மலையா! - மலை நாட்டுக்குத் தலைவனே! மலைக்காதே!
மிதியா! - உன்னுடைய மிதியடி கிடக்கிறது! - ஏடீ... தோழீ! நான் ஆடும் காயை மிதிப்பது சரிதானே? 
இப்படி, இருபொருள்பட தோழிக்கும் தலைவனுக்கும் தெரியும்படியாகவே தலைவி பாடுகிறாள். இதனைக் கேட்ட தலைவன், அவளுடைய அண்ணன் தம்பிகள், சிற்றப்பன், பெரியப்பன் மக்களோடு கபடி (கால்பிடி) விளையாடுகிறான். அவனும் அவளுக்கு மட்டுமே புரியும்படி குறியிடங் (இருவரும் சந்திக்கும் தனியிடம்) கூறிப் பாடுகிறான்.

இஞ்சி! எலுமிச்சி! 
இழுத்து விட்டாப்போச்சு! 
மூச்சு! 

இதன் பொருளாவது, இஞ்சியும் எலுமிச்சையும் விளைந்துள்ள இடத்திற்குப் போ! நான் அங்கு வருகிறேன். என்னோடு விளையாடுபவனை இழுத்து விட்டால் ஆட்டம் முடிவடையும். அவ்வாறு இல்லையெனில் எனக்குத் தோல்வியுண்டாகும். ஆனால், வெற்றியோடு நான் அங்கு வருவேன். காலம் கடந்துவிட்டால் போச்சு! (இழுத்துவிட்டால் போச்சு), இனிமேலும் காலதாமதங்கூடாது. (மூச்சு) என் உயிரே! என்று தலைவன் தலைவிக்குக் கேட்கும்படியாக நயம்பட மொழிகின்றான்.
இப்பாடல் தலைவன் தலைவிக்குக் குறியிடம் கூறிய துறையிலமைந்த உழைப்பார் பாடலாகும். காலங்கடந்து செவிவழியாகக் கேட்டு, இன்றளவும் மரபு நீங்காது நம்மையும் நந்தமிழையும் தலைநிமிரச் செய்யும் 'உழைப்பார் பாடல்களை' உலகறியச் செய்வது நங்கடன் தானே?
இப்பாடலில் வரும் பூவா? என்னும் சொல் பூத்தரு புணர்ச்சியைக் குறிக்கும். இப்பாடலானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களிலும் பாடப்பெறுவதால், திணைவழுவமைதியாகவும் கொள்ளப்பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com