குழந்தை இலக்கிய முன்னோடி

''குழந்தைகளின் இன்பமே எனது இன்பம்; அவர்களுக்குத் தொண்டு செய்வதே என் முக்கிய குறிக்கோள்'' எனப் பெரிதும் செயல்பட்டவர் குழந்தை இலக்கிய
குழந்தை இலக்கிய முன்னோடி

''குழந்தைகளின் இன்பமே எனது இன்பம்; அவர்களுக்குத் தொண்டு செய்வதே என் முக்கிய குறிக்கோள்'' எனப் பெரிதும் செயல்பட்டவர் குழந்தை இலக்கிய முன்னோடியும், குழந்தைக் கவிஞருமான அழ.வள்ளியப்பா (1922-1989).

''வட்டமான தட்டு - தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு - எட்டில் பாதி பிட்டு
எடுத்தான் மீதம் கிட்டு....''

''கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம் ...''

''கை வீசம்மா கைவீசு...
கடைக்குப் போகலாம் கைவீசு ...''

''மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்''

என அவருடைய நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி மகிழாத குழந்தைகளே இல்லை எனலாம். குழந்தைகள் பாடி மகிழ்வதற்கு வசதியாக, எதுகை மோனையுடன், சின்னச் சின்ன வரிகளில் அமைந்திருப்பதால்தான், அன்று முதல் இன்று வரை அழ.வள்ளியப்பாவின் பாடல்கள் காலங்களைக் கடந்தும் மிக அற்புதமாகத் திகழ்கின்றன.
பாட நூல்கள் இல்லாது குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக - தனியாக எழுதப்பட்ட பாடல் நூல்கள் வெளிவர பெரிதும் காரணம் இவரே. இவரது 'மலரும் உள்ளம்' முதல் தொகுதியைப் படித்துப் பெரிதும் நெகிழ்ந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ''நித்தம் இளமை நிலைக்கும்படி ஈசன் வைத்திலனே என்று வருந்துகிறேன். சித்திரமும் பாட்டும் சிறந்து விளங்கும் இப்புத்தகத்தைப் பார்க்கும்போது'' என வியந்த அவர்,

''பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள்
பாடிப்பாடி மகிழ்வெய்த
தெள்ளத் தெளிந்த செந்தமிழில்
தேனார் கவிதைகளை செய்துவரும்
வள்ளியப்பா''

எனப் பாராட்டினார்.
'மலரும் உள்ளம்' இரு தொகுதிகள்; 'சிரிக்கும் பூக்கள்' மற்றும் கதைப் பாடல்கள், வேடிக்கைப் பாடல்கள், கதைகள், பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் என இவர் எழுதிய ஐம்பது நூல்கள் பெரிதும் குறிப்பிடத்தக்கவை.
தாம் படைப்பாளியாக மட்டுமல்லாமல், குழந்தை இலக்கியப் படைப்பாளர்களை உருவாக்கும் உழைப்பாளியாகவும் திகழ்ந்தார் வள்ளியப்பா. பாண்டித்துரை தேவர் மதுரையில் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கியது போல், 1950இல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தை அழ.வள்ளியப்பா தோற்றுவித்தார்.
அவரது ஐம்பதாண்டு கால செயல்பாடு - குழந்தை இலக்கியத்தின் பொற்காலம் ஆகும்; இருபதாம் நூற்றாண்டு குழந்தை இதழ்களின் நற்காலமாகும். 'பாலர் மலர்', 'பூஞ்சோலை', 'கோகுலம்' ஆகிய இதழ்களின் கெளரவ ஆசிரியராக இருக்கும்போது, இவரது அளப்பரிய ஊக்குவிப்பினால் உயர்ந்த, குழந்தை எழுத்தாளர்கள் பலர். 'குழந்தைக் கவிஞர் எழுத்துப் பரம்பரை' என இன்னும் விளக்குவது பெரும் சிறப்பு.
குழந்தை எழுத்தாளர்களுக்கென்றே சங்கம் அமைத்து, குழந்தைப் புத்தகக் காட்சி, நாடக விழா, கதை சொல்லல் நிகழ்ச்சி, குழந்தை இலக்கிய மாநாடுகள், எழுத்தாளர்-பதிப்பாளர் சந்திப்பு, அதிகளவு குழந்தைப் புத்தகங்களை வெளியிட ஏற்பாடு செய்தமை என இவரது சலியா செயல்பாடு, வேறு எந்த மொழியிலும் யாருமே செய்திடாத அரும் சாதனை; பெரும் சாதனை.
குழந்தைகளுடன் நெருங்கிப் பழகியவரும், குழந்தை எழுத்தாளர் சங்கச் செயலாளராக செயலாற்றியவருமான 'இலக்கியச் சாரல்' நிறுவனர் கவிமாமணி இளையவன், ''குழந்தைப் பாவுக்கே பெயர் வள்ளியப்பா'' எனக் கூறியதுடன், குழந்தைப் பாடல் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா போன்ற எந்த வகையைச் சேர்ந்தது என்று கூறுகிறபோது,

''வஞ்சிப்பா வெண்பா கலிப்பா வகையெல்லாம்
செஞ்சொல் கவியினத்துச் செல்வங்கள்- நெஞ்சாரும்
வள்ளியப்பா என்றோர் மரபு
குழந்தைகள் துள்ளியப்பா செய்யும் திறம்''

என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா பிறந்த ஊர் ராயவரம். ஆம், உண்மையில் குழந்தை இலக்கியத்திற்கு அது அற்புத வரம். வை.கோவிந்தன் (அணில்), இராம.தியாகராஜன் (பாப்பா), முத்து நாராயணன் (பாப்பா மலர்), பழனியப்பச் செட்டியார் (பழனியப்பா பிரதர்ஸ்), வே.சுப. நடேசன் (பாலர் மலர் பதிப்பாளர்) ஆகியோரின் பிறந்த ஊரும் ராயவரமே!
குழந்தைக் கவிஞரைப் பற்றி கவிஞர் வெற்றியூர் திருஞானம் பாராட்டுகையில் இவ்வாறு கூறுகிறார்: 

''கள்ளமில்லா பிள்ளை முகம்; கலங்கமில்லா புன்சிரிப்பு;
அள்ளித் தருவதென்றால் ஆழ்கடலின் நல்முத்து;
அத்தனையும் தமிழர்களின் அளப்பரிய பெரும் சொத்து''

பிறந்த ஊரில், படித்த பள்ளியில் குழந்தைக் கவிஞருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு தபால் உறையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்ச் சான்றோரின் பெயரில் தமிழக அரசு ஆண்டுதோறும் விருது வழங்குவது போன்று - 'குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா விருது' எனும் பெயரில் ஆண்டுதோறும் சிறந்த குழந்தை இலக்கியப் படைப்பாளிக்கு விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்.
குழந்தைக் கவிஞரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அவருடைய பாடல்கள், கதைப் பாடல்கள், வேடிக்கை பாடல்கள், கதைகள் மற்றும் பிற நூல்கள் அனைத்தும் 'குழந்தைக் கவிஞர் களஞ்சியம்' என்கிற பெயரில் வெளிவர வேண்டும். 2022ஆம் ஆண்டு குழந்தைக் கவிஞரின் நூற்றாண்டு தொடக்கம். அச்சமயம், மத்திய அரசு அவருக்கு சிறப்பு தபால் தலை வெளியிட்டு, அவரைச் சிறப்பிக்க வேண்டும். அழ.வள்ளியப்பாவின் பிறந்தநாள் 'குழந்தை இலக்கிய தின'மாகக் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். 

- 'குழந்தை இலக்கியச் செல்வர்' பி.வெங்கட்ராமன்


நவ. 7 அழ.வள்ளியப்பாவின் 95-ஆவது பிறந்த நாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com