இந்த வார கலாரசிகன்

'உயர் வள்ளுவம்' அமைப்பின் சார்பில் நடைபெறும் இலங்கை ஜெயராஜ் ஐயாவின் திருக்குறள் தொடர் வகுப்புகள் வரிசையில் நேற்றும், இன்றும் "புதல்வரைப் பெறுதல்' அதிகாரம் பற்றி சென்னை சேத்துப்பட்டு
இந்த வார கலாரசிகன்

'உயர் வள்ளுவம்' அமைப்பின் சார்பில் நடைபெறும் இலங்கை ஜெயராஜ் ஐயாவின் திருக்குறள் தொடர் வகுப்புகள் வரிசையில் நேற்றும், இன்றும் "புதல்வரைப் பெறுதல்' அதிகாரம் பற்றி சென்னை சேத்துப்பட்டு, டாக்டர் குருசாமி சாலையிலுள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் வகுப்பு நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை, உயர் வள்ளுவம் திருக்குறள் சொற்பொழிவின் முதல் தொகுப்பின் குறுந்தகடு நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்களால் வெளியிடப்பட இருக்கிறது. பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி, பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் ஆகியோருடன் நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறேன். 
"கற்க கசடற' அமைப்பைச் சேர்ந்த தி. இராஜேந்திரனும், சு. செந்தில்குமாரும், அவர்களுடைய நண்பர்களும் செய்துவரும் பணி மகத்தானது. "கம்ப வாரிதி' இலங்கை ஜெயராஜ் ஐயாவின் ஏற்புரையுடன் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில், நமது வாசகர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்பது எனது அவா. யான் பெறும் இன்பம் பெறுக வாசகர்கள் என்று கருதுவதில் தவறில்லைதானே! 

பேராசிரியர் முனைவர் கு. மோகனராசுவை இரண்டாண்டுகளுக்கு முன்பு வடலூரில் நடந்த திருக்குறள் தேசிய நூல் மாநாட்டின்போது சந்தித்தேன். இரண்டு நாள்கள் முன்பு சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த மதுரை மணிமொழியார் அறக்கட்டளை சொற்பொழிவின்போது மீண்டும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 
70 வயதான முனைவர் மோகனராசு, இப்போதும் 17 வயது இளைஞனின் துடிப்போடு திருக்குறள் பரப்பும் பணியில் தொடர்ந்து செயல்பட்டு வருவதற்கு, அவருக்குத் தமிழன்னையின் முழுமையான ஆசி கிடைக்கப் பெற்றதுதான் காரணம் என்று கருதுகிறேன்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆய்வுப் பகுதியில் 36 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர், திருக்குறளையே தனது மூச்சாகவும், வாழ்வாகவும், தொழுகையாகவும் கடந்த 42 ஆண்டுகளாகக் கொண்டிருக்கிறார். 50க்கும் மேற்பட்ட மாநாடுகளிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வரங்குகளிலும் பங்கேற்றிருக்கும் முனைவர் கு. மோகனராசு, 900க்கும் மேற்பட்ட தலைப்புகளில் திருக்குறள் குறித்த ஆய்வுரைகள் வழங்கியிருக்கிறார்.
இவருடைய ஆய்வுகள் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களாக வெளிவந்துள்ளன. இந்த ஆய்வுகளின் வழி ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய ஆய்வு முடிவுகளை வழங்கி, சாதனை படைத்திருக்கும் முதல் தமிழன் என்கிற பெருமைக்குரியவர் இவர்.
"உலகத் திருக்குறள் மையம்' என்கிற அமைப்பை நிறுவிப் பல்வேறு வகைகளில் திருக்குறளைப் பரப்புவதுடன் நின்றுவிடாமல், 40க்கும் மேற்பட்ட மாநாடுகள் கூட்டியிருக்கிறார் முனைவர் கு. மோகனராசு. கடந்த 15 ஆண்டுகளாக, சனிக்கிழமைதோறும் வள்ளுவர் கோட்டத்தில் இவர் நடத்திவரும் திருக்குறள் உயர் ஆய்வரங்குகள் குறித்து வியந்து பேசாத தமிழறிஞர்களே இல்லை.
தமிழக அரசால் திருவள்ளுவர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசுவின் 70ஆவது அகவை நிறைவையொட்டி, "எழுபது வயதில் எழுபது சாதனைகள்' என்கிற புத்தகம் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. தனது இளமைப் பருவத்திலிருந்து திருக்குறளால் ஈர்க்கப்பட்டு, தனது வாழ்க்கையையே வள்ளுவத்துக்காக அர்ப்பணித்திருக்கும் முனைவர் மோகனராசுவின் சாதனைகள் மலைப்பை ஏற்படுத்துகின்றன.
இவர் சிறுவனாக இருக்கும்போது, "மோகனா நீ படித்துப் பெரிய ஆளா வருவியா' என்று அடிக்கடி கேட்கும் இவரது தாயார் திருமதி தேசம்மாளுக்கு, "வருவேம்மா' என்று தொடர்ந்து உறுதியளித்ததன் விளைவுதான், இன்று முனைவர் மோகனராசு குறள்வழிச் சாதனை நிகழ்த்தியிருப்பதன் காரணமாக இருக்கக்கூடும். 


"தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் 87 ஆண்டுகள் வாழ்ந்தவர். தம்முடைய 23ஆவது வயதில் "வேணுவனலிங்க விலாசச் சிறப்பு' என்னும் நூலை 1808இல் பதிப்பித்தார். வாழ்வின் இறுதிக் காலம்வரை நூல்களைக் கற்றும், ஆராய்ந்தும் இவர் பதிப்பித்திருக்கும் இலக்கிய நூல்கள் 74; எழுதிய உரைநடை நூல்கள் 18.
உ.வே.சா. பத்துப்பாட்டு நூலை 1889ஆம் ஆண்டில் பதிப்பித்தார். 1894இல் புறநானூற்றையும், 1903இல் ஐங்குறுநூற்றையும், 1904ஆம் ஆண்டில் பதிற்றுப்பத்தையும், 1918இல் பரிபாடலையும், 1937ஆம் ஆண்டு குறுந்தொகையையும் பதிப்பித்தார். பாட்டும் தொகையுமாக பதினெட்டு சங்க நூல்களில் நற்றிணை, கலித்தொகை, அகநானூறு தவிர, ஏனைய 15 நூல்களையும் பதிப்பித்த பெருமை தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரையே சாரும்.
சங்க நூல்களில் உ.வே.சா. பதிப்பித்த குறுந்தொகை பதிப்பு பல்வேறு வகைகளில் சிறப்புப் பெற்றது. பல நூல்களைப் பதிப்பித்த பேரனுபவத்தையும், பெரும் புலமையையும் குறுந்தொகை பதிப்பில் காண முடிகிறது. தனது 82ஆவது வயதில் இந்தப் பெரும் பணியைத் "தமிழ்த் தாத்தா' ஆற்றியிருக்கிறார் எனும்போது, அவரை இருகரம் கூப்பி வணங்கச் சொல்கிறது எனது தமிழ் உணர்வு.
உ.வே.சா. பதிப்பித்த குறுந்தொகை இப்போது 7ஆவது பதிப்பையும், பத்துப்பாட்டு 8ஆவது பதிப்பையும் காண்கிறது. "தினமணி'யின் முன்னாள் ஆசிரியரும், தொல்லியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவனின் நிதியுதவியுடன் குறுந்தொகையும், நாணயவியல் அறிஞர், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தியின் நிதியுதவியுடன் பத்துப்பாட்டும் இப்போது புதிய பதிப்புகளாக வெளிவந்திருக்கின்றன. 
தமிழுக்குப் பத்துப்பாட்டையும், குறுந்தொகையையும் ஓடி அலைந்து, தேடிப்பிடித்து மீட்டுத் தந்த தமிழ்த் தாத்தாவுக்கும், மீண்டும் ஒரு பதிப்புக்கு வழிகோலிய இருபெரும் மூத்த தமிழறிஞர்களுக்கும் தமிழுலகம் தலைவணங்கக் கடமைப்பட்டிருக்கிறது.


கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்ஆப்) "கலாம் பதிப்பகம்' குழுவில் நானும் இருக்கிறேன். கவிஞர் அறிவுமதி மூன்று நாள்களுக்கு முன்பு அந்தக் குழுவில் எங்கள் பார்வைக்குப் பதிவு செய்திருந்த கவிதையைப் படித்தபோது, அது என்னை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. இரண்டு வரி பற்றிய அந்த நான்கு வரிக் கவிதை இதுதான்:

இரண்டடி கொடுத்தால்
தானே திருந்துவாய்
வாங்கிக் கொள் அதை 
வள்ளுவனிடம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com