உத்தர ஞான சிதம்பரம்

நடராஜப் பெருமான்' என்றால் தில்லை "சிதம்பரம்'தான் நினைவுக்கு வரும். அதுபோல, தைப்பூசம் என்றாலும், வள்ளலார் என்றாலும் வடலூர்தான் நினைவுக்கு வரும்.
உத்தர ஞான சிதம்பரம்

நடராஜப் பெருமான்' என்றால் தில்லை "சிதம்பரம்'தான் நினைவுக்கு வரும். அதுபோல, தைப்பூசம் என்றாலும், வள்ளலார் என்றாலும் வடலூர்தான் நினைவுக்கு வரும். வடலூரை உத்தர ஞான சிதம்பரம் என்றும், உத்தர ஞான சித்திபுரம் என்றும் கூறுவர். வடலூருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. அதாவது, வடலூரை உத்தர ஞான சிதம்பரம் என்ற வள்ளலார், சித்தியெலாம் பெற்ற அம்பலமே எனவும் கூறுவார். உத்தரமென்றால் இன்றைய - இப்பொழுது என்று பொருள். பூர்வமென்றால் ஆதி - முந்தைய என்று பொருள் (பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தவை). இன்றைய சிதம்பரம் (உத்தரம்) வடலூர் சித்துக்கள் நிறைந்த இடம். வள்ளலார் மறைந்த - ஜோதியில் கலந்த ஞான பூமி, ஞான சபை, தருமச்சாலை, தண்ணீரில் விளக்கெரித்த கருங்குழி இல்லம், வள்ளலார் பிறந்த மருதூர் நீரோடை ஆகியவற்றைக் கொண்ட ஞான பூமி இது.

தில்லை தரிசனம்

ஐந்து மாத குழந்தை இராமலிங்கம், பெற்றோருடன் தில்லையம்பல நடராஜ மூர்த்தியின் சந்நிதியின் முன்னே தீபாராதனை காட்சியோடு திருவுருக் காட்சியும் கண்டு கலகலவென சிரித்ததாம். நடராஜர் மீது அவர் கொண்ட அன்பின் வெளிப்பாடு காரணமாகப் பின்னாளில் "சிதம்பரம் இராமலிங்கமென' கையொப்பமிடலானார். பூர்வ ஞான சிதம்பரம், உத்தர ஞான சிதம்பரம் இரண்டுக்கும் மாபெரும் ஓர் ஒற்றுமையுண்டு. சிதம்பரத்தின் பெருமை அளவிடற்கரியது. அதுபோல் வடலூரின் பெருமையும் அளவிடற்கரியது. வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றது, தண்ணீரில் விளக்கெறித்தது இத்தலத்தில்தான். தினம் பல்லாயிரம் பேருக்கு உணவு வழங்கும் புண்ணிய ஞான பூமி, வள்ளலாரால் பல சித்துக்கள் நிகழ்த்தப்பட்ட பூமி இது. மேலும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களாலும் மன்னர்களாலும் கட்டப்பட்ட கோயில்களின் சிறப்புகளை உடையது. 

திருக்கோயில்களும் சித்தர்களும்
அகத்தியர் திருக்குற்றாலத்திலும்; ஆண்டாள் திருவரங்கத்திலும்; இடைக்காடர் திருஅண்ணாமலையிலும்; கமல முனி திருவாரூர்; குதம்பை சித்தர் மயிலாடுதுறை; குமார தேவர் விருத்தாசலம்; குருஞான சம்பந்தர் தருமபுரம்; தன்வந்திரி வைத்தீஸ்வரன் கோயில்; திருமூலர் சிதம்பரம்; திருநாவுக்கரசர் திருப்புகலுர்; பட்டினத்தார் திருவொற்றியூரிலும் மறைந்தும் ஜீவ சமாதி அடைந்தும் அருளாற்றல் பெற்ற காரணத்தினால்தான் இத்தகைய கோயில்களுக்குப் பெயரும் புகழும் உண்டாயின. 
ஆனால், கோயில்களின் கருவறையில் செம்பினாலும் கல்லினாலும் சிலைகள் நட்டு வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு, ""நாலு புஸ்பம் சாத்தி, சுத்தி வந்து மொணமொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா; நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்'' என்று சிவவாக்கிய சித்தர் சொல்லி வைத்தார்.
வள்ளலார் கடவுளை ஜோதி என்று சொன்னார். அதனால் "ஜோதி ஜோதி சிவம், ஜோதி ஜோதி பரம், ஜோதி ஜோதி சுயம்' என்றும் கூறி, இறைவனை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையாகக் கண்டார். ஆகவே, மக்கள் ஜோதி வழிபாட்டை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். 

""நீண்ட மறைகள் ஆகமங்கள்
நெடுநாள் முயன்று வருந்திநின்று
வேண்ட அவைகட் கொருசிறிதும் 
விளங்கக் காட்டாது என்மொழியைப்
பூண்ட அடியை என்தலைமேல் 
பொருந்தப் பொருத்தி என்தன்னை
ஆண்ட கருணைப் பெருங்கடலே 
அடியேன் உன்றன் அடைக்கலமே''

""பாடும் சிறியேன் பாடலனைத்தும் 
பாலிக்கக் கருணை பாலித்துக் 
கோடு மனப்பேய்மனக் குரங்காட்டம் 
குலைத்தே கூற்றையொழித்து நீடுலகில் 
அழியாத நிலை மேல் எனைவைத் 
தென்னுளத்தே ஆடும் கருணைப் 
பெருவாழ்வே அடியேன்
உன்றன் அடைக்கலமே''

இவ்வாறு இறைவனிடம் அடைக்கலம் அடைந்த வள்ளற் பெருமான் பாடிய பாடல்கள் அனைத்தையும் கருணை பாலித்த இறைவன், வள்ளலார் வாழ்ந்த குடிசையினுள் நுழைந்து பாலும் கொடுத்து, பதிதிறக்கும் ஓர் திறவுகோலும் கொடுத்து மகிழ்ந்தான். இது மட்டுமா? 
""தூக்கம் கெடுத்தான் சுகம் கொடுத்தான் என்னுள்ளத்தே ஏக்கம் தவிர்த்தான்; இருள் அறுத்தான்; ஆக்கம் மிகத் தந்தான் எனையீன்ற தந்தையே என்றழைக்க வந்தான்; என் அப்பன் மகிழ்ந்தே அறியாத பருவத்தே எனை வலிந்தழைத்து ஆடல் செய்யும் திருவடிக்கே பாடல் செய்யப் பணித்தான்'' என்கிறார்.
பாடல் செய்யப் பணித்த இறைவன் வள்ளலாருக்கு "மணிமுடியும் சூட்டி, மரணமிலாப் பெருவாழ்வையும் கொடுத்து, ஏறா மேல்நிலைக்கே ஏற்றி வையமிசை நீடுவாழ அருட்செங்கோலும் கொடுத்து, அருளாட்சி புரிக என் மகனே!' என வாழ்த்திய அருட்பெருஞ்ஜோதியை மேலும் புகழ்ந்து புகழ்ந்து, பணிந்து பணிந்து, அன்பு நிறைந்து நிறைந்து, கனிந்து கனிந்து, உருகி உருகி, நெக்கு நெக்காட பாடிய 6000 பாடல்களும், மரணமிலாப் பெருவாழ்வு பெற ஏக்கமுடன் பாடிய பாடலும் ஒழுக்க நெறியும் தயவு கருணை ஆகியவையும் கடைப்பிடித்து, இரவும் பகலும் துதி செய்த வண்ணமாக கவலை தோய்ந்த முகத்தோடும் அவர் பட்டபாடெலாம் பாட்டாகக் கொட்டித் தீர்த்தார். நம்மையும் இந்நெறியில் வாழ வலியுறுத்திப் பாடிய பாடல்கள் ஏராளம். வள்ளலார் சொன்ன வழியில் நடப்போம்; மரணமிலாப் பெருவாழ்வு பெற முயற்சி செய்வோம்.

அக். 5 வள்ளலார் அவதார தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com