"குணமும் குற்றமும்' திரு.வி.க.வின் "எண்ண' விளக்கம்!

திருக்குறளின் "தெரிந்து தெளிதல்' என்ற அதிகாரத்தில் வரும் நான்காவது குறள் இது: 
"குணமும் குற்றமும்' திரு.வி.க.வின் "எண்ண' விளக்கம்!

திருக்குறளின் "தெரிந்து தெளிதல்' என்ற அதிகாரத்தில் வரும் நான்காவது குறள் இது:
"குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்' 
இதற்குப் பரிமேலழகர் தரும் உரை: ""குணம் குற்றங்களுள் ஒன்றே உடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து; ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து, பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து அவனை அம் மிக்கவாற்றானே அறிக. அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல்.
இங்கு உள்ள குணம், குற்றம் என்னும் இடங்களில் "நல்ல எண்ணம்', "தீய எண்ணம்' என்னும் சொற்களை வைத்து எண்ணிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். இந்த இருவகை எண்ணங்களைப் பற்றிய திரு.வி.க.வின் (உள்ளொளி: 1. உள்ளமும் உருவமும் : எண்ணங்கள்) விளக்கவுரையில் குணம், குற்றம் என்னும் இரண்டும் தெளிவு பெறும் என்று எண்ணத் தோன்றுகிறது"
""நல்ல எண்ணம், தீய எண்ணம் என்னும் இரண்டில் எது ஆற்றல் வாய்ந்தது? சிலர் நல்லது என்பர்; சிலர் தீயது என்பர். சில சமயம் தீயதே பேராற்றல் வாய்ந்தது போலத் தோன்றும். ஆழ்ந்த ஆராய்ச்சியால் நல்லதே பேராற்றல் வாய்ந்தது என்பது விளங்கும். எண்ணத்தின் ஆற்றல் பொதுவாக அது தோன்றும் இடத்தைப் பொறுத்து நிற்பது. ஒருவனது நெஞ்சம் தீமையையே எண்ணி ஆழ எண்ணி, அதில் ஒன்றி அது ஆகிறது. இன்னொருவன் நெஞ்சம் நல்லதை எண்ணுகிறது; ஆனால் அதுவாகவில்லை. இவ்விருவித எண்ணங்களில் எது ஆற்றல் வாய்ந்தது? தீய எண்ணமே ஆற்றல் வாய்ந்தது ஆகும். வேறு ஒருவன் உள்ளம் நல்லதிலேயே ஒன்றி ஒன்றி அது ஆகிறது. மற்று ஒருவன் உள்ளம் தீயதில் ஒவ் ஒருபோது படிகிறது. ஆனால் அதுவாகவில்லை. இவ்விரு வகை எண்ணங்களில் வல்லமை உடையது எது? நல் எண்ணமே வல்லமை உடையது ஆகும். தீமையையே எண்ணி எண்ணி அது ஆகிய நெஞ்சம் ஒன்று. நல்லதையே எண்ணி எண்ணி அது ஆகிய நெஞ்சம் ஒன்று. இரண்டும் அவ்வத் தன்மையில் பூரண சக்தி பெற்றிருக்கின்றன. இவைகளில் எதைப் பெரிது என்று சொல்வது? இதற்கு அனுபவம் தேவை. நல்லதே பெரிது என்று அனுபவம் உணர்த்தும். முழு நல்லது முழுத் தீமையை வெல்லும். அரைகுறையிலேயே (நல்லதிலேயே) தீமை மேம்படுவதாகும். ஆகவே, நல்லெண்ணங்கள் பெருகப் பெருக உலக நலம் பெறுவதாகும் என்க''. இவை மேன்மேலும் சிந்திக்கற்பாலனவாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com