சங்ககால ஐக்கூ

இன்றைய "ஐக்கூ'க் கவிதை பாணியில் எழுதப் பெற்ற பெயர்காணாப் புலவர் ஒருவரின் கவிதை இது.
சங்ககால ஐக்கூ

இன்றைய "ஐக்கூ'க் கவிதை பாணியில் எழுதப் பெற்ற பெயர்காணாப் புலவர் ஒருவரின் கவிதை இது.

""பூத்தவேங்கை வியன்சினை ஏறி
மயிலினம் அகவு நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே!''

இதன் சுருக்கமான பொருள்:

""தலைவியின் மனத்தை விட்டு அகலாத
தலைவன் ஒருவன். அவன் பூக்கள்
நிரம்பிய வேங்கை மரங்களின்
கிளைகளில் ஏறி நின்று மகிழ்ச்சியுடன்
கூவுகின்ற மயில்கள் நிறைந்த 
நாட்டைச் சேர்ந்தவன்''

இச்செய்யுள், தற்கால "ஐக்கூ'க் கவிதையின் தன்மையில் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. மூன்று வரிகளில் செய்தி சொல்லப்பட வேண்டும். முதல் வரியிலும், மூன்றாம் வரியிலும், வினை (நிகழ்வு) விவரிக்கப்பட வேண்டும். அதனை நிகழ்த்தியவன்(வினைஞன்) இரண்டாம் வரியில் குறிப்பிடப்பட வேண்டும் என்பது ஐக்கூக் கவிதை இலக்கணக் கூறுகளுள் ஒன்று.
மேலும், ஐக்கூக் கவிதைகளில் உவமைகள் இருப்பதில்லை. அனுபவங்களை அப்படியே கூறுவதுதான் ஐக்கூக் கவிதை. மேற்சொன்ன "பூத்தவேங்கை' கவிதையிலும் எந்த உவமையோ தத்துவமோ இடம்பெறவில்லை. எனவே, இக்கவிதை ஒரு சிறப்பான ஐக்கூக் கவிதையாகத் திகழ்கிறது. ஆனால், இச்செய்யுள் சங்கப் புலவர்களால் மிகப் பரவலாகக் கையாளப்பட்ட ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது என்றும் கூறலாம்.
குறிப்பாக இச்செய்யுள் இணைக்குறள் ஆசிரியப்பா என்று தெரிகிறது. முதலடியும் மூன்றாம் அடியும், ஈரசைச் சீர்கள் கொண்ட அளவடியாக உள்ளன. (4 சீர்கள் கொண்டவை அளவடி) இரண்டாம் அடி சிந்தடியாக அமைந்துள்ளது. (மூன்று சீர்கள் கொண்டவை சிந்தடி). இதனுடன், இச்செய்யுளின் இறுதிச் சீர் ஏகாரத்தில் முடிவுற்று, ஆசிரியப் பாவின் விதி கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்செய்யுளில் செய்யுட்களுக்கே உரிய தொடை இலக்கணம் அமையப் பெறவில்லை. அதுவும் எளிய யாப்புக்குப் பெயர்பெற்ற ஆசிரியப்பாவில் எதுகை, மோனைத் தொடை அமையப் பாடுவது மிகவும் சிறப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.
இச்செய்யுளில் எதுகைத் தொடை அமையவில்லை. மோனைத் தொடை என்று பார்த்தால், முதலடியில் இரண்டாம் சீரிலும், மூன்றாம் சீரிலும், "வே'(ங்கை) "வி'(யன்சினை) என்று அமைந்து, இடைப்புணர் மோனை மட்டும் காணப்படுகிறது. மற்ற இரு அடிகளிலும் எந்தவொரு எதுகைத் தொடையோ, மோனைத் தொடையோ அமையவில்லை. ஆனால் இச்செய்யுளில், ஆசிரியப் பாவுக்குக் கட்டாயம் அமைய வேண்டிய, "அகவலோசை' நன்றாகவே அமைந்துள்ளது.
இன்று நாம் கையாளும் உரைநடையைப் போன்றே சங்கப் புலவர்கள் மிகச் சரளமாகக் கையாண்ட உரைநடைதான் ஆசிரியப்பா என்று கூறப்படுகிறது. சங்க நூல்களில் பல ஆசிரியப்பாவால் இயற்றப் பெற்றவையே.
நாம் காணும் "பூத்தவேங்கை' ஆசிரியப்பா போன்றே பல செய்யுள்களை அந்த இலக்கியங்களில் காண முடிகிறது. தொடையிலக்கண வரம்புக்குள் அவை வராத போதும், அச்செய்யுள்கள் சீரிய முறையில் நல்ல நடையில் அகவலோசையுடன் அமைந்து இன்பம் அளிப்பவையாக உள்ளன. இத்தகைய செய்யுள்களை "செந்தொடை' அமையப் பாடப்பட்ட செய்யுள்கள் என்று யாப்பிலக்கணம் அனுமதி அளித்துள்ளது.
செந்தொடை அமையப் பாடுதல் என்பது எளிதன்று. பொருட்செறிவும், கருத்தாழமும் கைவரப் பெற்ற புலமை உடைவர்களால் மட்டுமே செந்தொடை இயற்றப்படக்கூடும். அவையே காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்பதற்கு மேற்சொன்ன செய்யுளே சான்றாக இலங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com