அரியும் சிவனும்

அரியும் சிவனும் ஒன்னு; இதை அறியாதவர் வாயிலே மண்ணு' எனும் சொல் வழக்கு ஒன்று உண்டு. எப்பொழுதும் "கிருஷ்ணா...
அரியும் சிவனும்

அரியும் சிவனும் ஒன்னு; இதை அறியாதவர் வாயிலே மண்ணு' எனும் சொல் வழக்கு ஒன்று உண்டு. எப்பொழுதும் "கிருஷ்ணா... கிருஷ்ணா' என்று சுற்றிச் சுற்றி வந்த பாண்டவர்கள் சிவ பக்தர்கள். சிவனை பூஜித்த பின்னரே அவர்கள் எந்த வேலையையும் தொடங்கினார்கள் என்பதை மகாபாரதத்தின் மூலம் அறிகிறோம். இதற்காக ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் மீது கோபம் கொள்ளவில்லை. சிவபெருமானும் ஸ்ரீகிருஷ்ணனும் சம்பந்திகள் என்பதையும் அறிவோம். இராமன் சிவனை வணங்கிய இடம் இராமேஸ்வரம். ஆனால், மனிதர்களுக்குள் சமய வேற்றுமை, பகைமை. 
இவர்கள் வேற்றுமையின்றி ஒற்றுமை பாராட்ட சிவபெருமானும் பெருமாளும் ஒன்று என்று கூறும் சிலேடைப் பாடல் ஒன்று உண்டு. வைணவர்கள் வாழ்த்த பெருமாள் வாழ்த்தாகவும்; சிவ பக்தர்கள் வாழ்த்த சிவபெருமான் வாழ்த்தாகவும் இப்பாடலைப் பொருள் கொள்ளலாம். 
சாரங்க பாணியரஞ் சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓரங்கங் கொய்த வுகிர்வாளர்- பாரெங்கும்
ஏத்திடுமை யாக ரினிதா யிவரும்மைக்
காத்திடுவ ரெப்போதுங் காண்.
பெருமாள் வாழ்த்தாகப் பொருள் கொள்ளும் முறை:
சாரங்க பாணியர் - சாரங்கம் என்னும் வில்லை கையில் ஏந்தியவர்; அஞ்சம் கரத்தர் - தாமரைப் போன்ற திருக்கரத்தை உடையவர்; கஞ்சனை - கம்சனை; முன் ஓர் அங்கங் கொய்த - முன்னொரு காலத்தில் உடலை கிழித்த; உகிர் வாளர் - நகத்தை உடையவர்; பாரெங்கும் ஏத்திடும் - உலகமெல்லாம் துதிக்கப் பெறும்; மையாகர் - கரிய திருமேனியையுடையவர்; இவரும்மை - இந்தப் பொருள் உம்மை; இனிதா எப்போதும் காத்திடுவர் காண் - எப்போதும் நல்ல முறையில் காத்திடுவார் காண்பாயாக.
சிவபெருமான் வாழ்த்தாகப் பொருள் கொள்ளும் முறை: 
சாரங்க பாணியர் - மானேந்திய திருக்கரத்தை உடையவர்; அஞ்சு அக்கரத்தர் - ஐந்தெழுத்து மந்திரத்தை உடையவர்; கஞ்சனை - பிரம்மனை; ஓரங்கம் - ஒரு தலையை; முன் கொய்த வுகிர் வாளர் - முன்னொரு காலத்தில் கொய்த நகத்தை உடையவர்; பாரெங்கும் உலகம் முழுவதும் ஏத்திடு உமை ஆகர் - துதிக்கப்படும் உமையம்மையை திருமேனில் உடையவர்; இவர் உம்மை - இந்த சிவபெருமான் உன்னை; இனிதாய் எப்போதும் காத்திடுவர் காண் - எப்போதும் நன்றாகக் காத்திடுவார் காண்பாயாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com