துணை மட்டுமே துயரினை அறியும்!

சங்க காலத் தலைவன் ஒருவன் பொருளீட்டச் செல்கிறான். தன் தலைவியை விட்டுப் பிரிய மனமின்றி, வெப்பத்தால் பசுமை மாறிப் பாழ்பட்டிருந்த கொடிய பாலை நெறியைத் தன்னந் தனியனாகக் கடந்து வேற்றூர் செல்கிறான்.
துணை மட்டுமே துயரினை அறியும்!

சங்க காலத் தலைவன் ஒருவன் பொருளீட்டச் செல்கிறான். தன் தலைவியை விட்டுப் பிரிய மனமின்றி, வெப்பத்தால் பசுமை மாறிப் பாழ்பட்டிருந்த கொடிய பாலை நெறியைத் தன்னந் தனியனாகக் கடந்து வேற்றூர் செல்கிறான்.
தலைவியைப் பிரிந்து வந்துவிட்ட, வலிய மனம் படைத்த தனக்கே இவ்வளவு துயரமாயிருக்கிறதே, வண்டுகள் மொய்க்கும் மலர்களையணிந்த கூந்தலையுடைய மென்மனத்தளாகிய அவள் கண்கள் எப்படிக் கண்ணீர் சிந்தித் துன்புறும்? எம்மைப் பிரிந்துறையும் தலைவி என்னபாடு படுவாள்? என்று தன் நெஞ்சுக்குள் சொல்லி, தலைவன் 
ஆற்றொணாத் துயர் அடைகின்றான். தலைவனின் இந்த உணர்வினை அகநானூற்றுப் பாடலொன்றில் இளங்கீரனார் என்னும் புலவர், பொருந்திய பாலைநிலக் காட்சியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அழகிய விளிம்பினை உருவி நாண் ஏற்றிய வலிமையான வில்லினையும், அவ்வப்பொழுது வேட்டையாடுதலால் குருதிபட்டுச் சிவந்த வாயினையுடைய அம்பினையும், சினம் மிக்க பார்வையினையுமுடைய மறவர் அம்பினை எய்துதலால், அவ்வம்பு பட்டுப் பெண் மான் ஒன்று தரையில் இறந்து கிடக்கிறது. ஆனால், அதனருகிலிருந்த அம் மானின் குட்டிகள் தம் தாய், இறந்து கிடக்கிறது என்பதைக்கூட அறிந்து கொள்ளாமல், தாயின் அருகிலேயே துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கின்றன.
இந்த அவலக் காட்சியைக் கண்ட, முறுக்குண்ட அழகிய கொம்புகளையுடைய, அப் பிணைமானின் துணையாகிய ஆண் மானுக்குத் துயரம் மேலும் மிகுவதாயிற்று. உணவுக்காக மேய்தலையும் வெறுத்துத் துன்பத்தால் மிகுந்த வருத்தமடைகிறது. அந்நேரம் நீர் வேட்கையாக இருந்தது. அருகில் நீர் இருப்பது அதன் கண்ணில் பட்டது. அக்களர்நிலத்திலிருந்த சிறிய குழியொன்றில் கொஞ்சம் நீர் இருந்தது. அதனைக் குடித்துத் தனது நீர் வேட்கையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்பதற்கும் அந்த ஆண் மானின் மனம் இடம் கொடுக்கவில்லை. 
ஆதலால், நீர் குடிப்பதையும் வெறுத்துத் தவிர்த்த அந்த ஆண் மான், போரின் பொழுது அம்பு தைக்கப் பெற்ற மக்களைப் போல, வருந்திக் கண்ணயர்ந்து பாலை நிலத்தின் தரையில் கிடந்தது. கல் நெஞ்சத்தையும் கரைய வைக்கும் அக்காட்சியை மனக்கண் முன் நிறுத்தும் பாடல் இது:
""அவ்விளிம் புரீஇய விசையமை நோன்சிலைச்
செவ்வாய்ப் பகழிச் செயிர்நோக் காடவர்
கணையிடக் கழிந்ததன் வீழ்துணை உள்ளிக்
குறுநெடுந் துணைய மறிபுடை யாடப்
புன்கண் கொண்ட திரிமருப் பிரலை
மேய்பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
நெய்தலம் படுவிற் சின்னீர் உண்ணாது
எஃகுறு மாந்தரின் இனைந்துகண் படுக்கும்
பைதற வெம்பிய பாழ்சேர் அத்தம்
எமியம் நீந்தும் எம்மினும் பனிவார்ந்து
என்ன ஆங்கொல் தாமே தெண்ணீர்
ஆய்சுனை நிகர்மலர் போன்மென நசைஇ
வீதேர் பறவை விழையும்
போதார் கூந்தல்நங் காதலி கண்ணே (371)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com