இந்த வார கலாரசிகன்

ஒடிஸா தலைநகரம் புவனேசுவரத்துக்குச் சென்றிருந்தேன். முன்பு பிஜு பட்நாயக் முதல்வராக இருந்தபோது புவனேசுவரத்துக்கு நான் சென்றதற்கும் இன்றைய புவனேசுவரத்திற்கும் புரட்டிப் போட்ட மாற்றம்.
இந்த வார கலாரசிகன்

ஒடிஸா தலைநகரம் புவனேசுவரத்துக்குச் சென்றிருந்தேன். முன்பு பிஜு பட்நாயக் முதல்வராக இருந்தபோது புவனேசுவரத்துக்கு நான் சென்றதற்கும் இன்றைய புவனேசுவரத்திற்கும் புரட்டிப் போட்ட மாற்றம். புவனேசுவரம் வரை போய் ஒடிஸா மாநிலத்தின் கூடுதல் 
தலைமைச் செயலராகப் பணியாற்றும் ஆர்.பாலகிருஷ்ணனைச் சந்திக்காமல் திரும்பவா முடியும்? 
ஆர்.பாலகிருஷ்ணனிடம் சில தனிச்சிறப்புகள் உண்டு. 1984-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி தேர்வை முதன்முதலாக, முழுவதுமாக தமிழில் எழுதித் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று அரசு அதிகாரியானவர். இந்திய அரசுப் பணியில் நுழைவதற்கு முன்னால் நமது "தினமணி'யில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். பெரியவர் ஏ.என்.சிவராமனின் அன்புக்குப் பாத்திரமானவர். தமிழ் இலக்கியத்தில் ஆழங்காற்பட்ட புலமை எய்தியவர்.
ஆர்.பாலகிருஷ்ணன் அதிகாரி மட்டுமல்ல, ஒரு படைப்பாளியும்கூட. இவருடைய படைப்பிலக்கிய நூல்கள் "அன்புள்ள அம்மா', "சிறகுக்குள் வானம்' என்று தொடர்கிறது. சிந்துசமவெளி நாகரிகம் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகள் பல புதிய ஆய்வுகளுக்கு வழிகோலியிருக்கிறது.
சிந்துவெளிப் பண்பாட்டின் மொழி மற்றும் பழந்தமிழ் தொன்மங்களின் தோற்றுவாய் குறித்த புரிதல்களுக்கு இடம்பெயர் ஆய்வுகள் வலிமை தரும் என்பது இவரது கருத்து. ஏறத்தாழ கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த ஆய்வில் இவர் ஈடுபட்டு வருகிறார். சிந்துவெளிப் பண்பாடு செழித்த வடமேற்கு நிலப்பகுதிகளில் இன்றுவரை வழக்கிலுள்ள "கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை' ஆய்வுலகின் கவனத்துக்கு முதன்முதலாகக் கொண்டு வந்தவர் ஆர்.பாலகிருஷ்ணன்தான்.
சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு என்பது இவர் எழுதிய "சிந்துவெளிப் 
பண்பாட்டின் திராவிட அடித்தளம்' அடிக்கோடிடும் புது வெளிச்சம்.
"திராவிட மொழியியலையும் சிந்துவெளி புவியியலையும் பிணைத்து ஒரு புதிய கருதுகோளைப் படைத்துள்ளார். அதன் மூலம் சிந்து நகர மக்கள் திராவிட மொழிகளையே பேசியிருக்க வேண்டும் என்ற வரலாற்று உண்மையை அறிவியல் அடிப்படையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வண்ணம் மீண்டும் நிறுவியுள்ளார்' என்கிற "தினமணி' முன்னாள் ஆசிரியரும், கல்வெட்டியல் அறிஞருமான ஐயா ஐராவதம் மகாதேவனின் பதிவைவிட மேலாக, ஆர்.பாலகிருஷ்ணனின் "சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' என்கிற புத்தகம் குறித்து வேறு என்ன கூறிவிட முடியும்?
ஆர்.பாலகிருஷ்ணனுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்கிற ஆதங்கத்துடன் விடைபெற்றேன்.


உ.வே.சா.வின் முன்னுரைகளை "சாமிநாதம்' என்கிற பெயரில் தொகுத்து வழங்கிய ப.சரவணன் இப்போது வெளிக்கொணர்ந்திருக்கும் அடுத்த ஆவணப் பதிவு "பதிப்புலகின் தலைமகன்' என்று போற்றப்படும் சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்புரைகள் அடங்கிய "தாமோதரம்'. சார்லஸ் வின்úஸா கிங்ஸ்பரி என ஞானஸ்நானம் பெற்று, பின்பு சைவராக மதம் மாறி, சிறுபிட்டி வைரவநாதன் தாமோதரம்பிள்ளை என்று அறியப்பட்ட தமிழ்ப் பதிப்புலகின் முன்னோடி குறித்து பரவலாக அறியப்படாமல் இருப்பது வேதனைக்குரிய ஒன்று.
நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் சி.வை.தா. சுயம்புவாகவே செயல்பட்டிருக்கிறார். "என் சிறு பிராயத்தில் எனது தந்தையார் யாழ்ப்பாணத்தில் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ்நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை' என்பது அவரது வாக்குமூலம். "ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகிறது; கட்டு அவிழ்க்கும்போது இதழ் முரிகிறது; ஒற்றைப் புரட்டும்போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது; இனி எழுத்துக்களோ வென்றால் வாலுந் தலையுமின்றி நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது' என்று சி.வை.தா. தாம் தேடிக் கண்டுபிடித்த ஓலைச்சுவடிகளின் நிலைமையைப் படம்பிடிக்கிறார்.
முதல் முயற்சி என்பதால் சி.வை.தா., பட்ட கஷ்டங்கள் ஏராளம். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்து ஊர் ஊராகத் தேடிச் சென்று ஓலைச்சுவடிகளைக் கண்டெடுக்க அவர் பட்ட சிரமங்கள் தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் சிரமங்களுக்குச் சற்றும் குறைந்தவை அல்ல.
கிறிஸ்துவத்தில் இருந்து சைவத்துக்கு மாறியது, வேற்று தேசத்தார் என்னும் விரோதம், மடங்களில் தங்கிப் பயிலாமை போன்றவை மூலப்பிரதிகளைப் பெறுவதில் அவருக்குப் பின்னடைவை உண்டாக்கின. இத்தனையையும் பொறுத்துக்கொண்டே தனது பதிப்புப் பணிகளைச் செய்திருக்கிறார் சி.வை.தாமோதரம்பிள்ளை.
சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பித்தவை பனிரெண்டு. இயற்றியவை ஆறு. இவை அல்லாமல் அவர் குறித்த பல்வேறு செய்திகளையும் பின் இணைப்பாகத் தேடிச் சேர்த்து "தாமோதரம்' என்ற தொகுப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறார் ப. சரவணன். சி.வை.தா.வின் பங்களிப்புகளை இணைத்து இந்தத் தொகுப்பை வெளிக்கொணர இவர் எடுத்துக்கொண்ட சிரமங்களை எத்துணை பாராட்டினாலும் தகும்.
உ.வே.சா., சி.வை.தா., ஆகியோரின் அடிச்சுவட்டில் பயணித்துக் கொண்டிருக்கும் ப. சரவணனின் கடும் உழைப்பும், தேடலும், தமிழ்ப் பற்றும் மலைப்பை ஏற்படுத்துகிறது. "தாமோதரம்' அவரது கிரீடத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய இறகு.


"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' கோவை பதிப்பின் தலைமை நிருபராகப் பணியாற்றுபவர் பா. மீனாட்சிசுந்தரம். ஆங்கில நாளிதழில் பணியாற்றினாலும் தாளாத தமிழ்ப்பற்று உடையவர். ஆங்கில இலக்கியமும் தெரியும் என்பதால், இவரது தமிழ் இலக்கியப் பார்வை செறிவானது. 
இவரும் இவருடைய நண்பர் கவியன்பன் பாபுவும் ஒருவருக்கொருவர் வெண்பா பரிமாற்றம் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இதன் நீட்சியாக கோவை மாநகரைச் சுற்றியுள்ள ஊர்கள் குறித்து நேரிசை வெண்பாக்களாகப் படைத்த பாடல்களை "நேரிசையில் ஊரிசை' என்கிற பெயரில் சுவாரஸ்யமாகத் தொகுத்திருக்கிறார்கள்.
கோவையிலுள்ள ரத்தின சபாபதிபுரம் என்கிற ஆர்.எஸ்.புரத்தில் உள்ள "கென்னடி' திரையரங்கின் பழைய பெயர் லைட் ஹவுஸ். அதையொட்டியுள்ள சாலை இப்போதும் "கலங்கரை விளக்கச் சாலை' என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கடலில்லா கோவையில் லைட் ஹவுஸ் சாலை என்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. அதை கவியன்பன் பாபுவும், பா.மீனாட்சிசுந்தரமும் தங்களது "நேரிசையில் ஊரிசை' தொகுப்பில் வெண்பாவாகப் பதிவு செய்திருப்பது அதைவிட வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

கடலில்லா ஊரில் கலங்கரை தீபம்
சுடர்விட்ட சாலையெது சொல்வாய்? - முடக்கும்
இருட்டறையே அந்நாள் "ஒளிவீட'ம் அந்தத்
திரையரங்கின் பேரில் தெரு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com