காலமாம் வனம்!

அனுபவ உணர்வு என்றவுடன் காதல், வீரம், கருணை இவற்றோடு, தெய்வீகம் எல்லாவற்றிலும் இழையோடுகின்ற ஓர் அனுபவம் மனதுக்குள் தோன்றுகிறது.
காலமாம் வனம்!

அனுபவ உணர்வு என்றவுடன் காதல், வீரம், கருணை இவற்றோடு, தெய்வீகம் எல்லாவற்றிலும் இழையோடுகின்ற ஓர் அனுபவம் மனதுக்குள் தோன்றுகிறது. அந்தத் தெய்வீகத்தைத் தன் சிந்தை அணு ஒவ்வொன்றிலும் பராசக்தியாய் உணர்ந்தவர் மகாகவி பாரதி.
காளி - சக்தி என்கிற தன் அனுபவத்தை நமக்கு எடுத்துவைக்க முன்வந்த பாரதி, முதலில் தன்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம், பிறகு தான் சொல்லவந்த, கண்டுணர்ந்த தெய்வத்தைப் பற்றிய ஓர் அறிமுகம் என்று ஆரம்பிக்கிறார். காலமாம் வனத்தில், என்கிற வார்த்தைகளோடு ஆரம்பமாகின்ற அந்தக் கவிதையில், பாரதி ஆடும் வார்த்தை நர்த்தனம் அற்புதமாய் இருக்கிறது. காலம் என்றவுடன் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற தொடர் ஓட்டம் மனதிற்குள் வருகிறது.
கடந்தகாலம் என்பதை நேற்று என்பதா? அதற்கு முதல் நாள் என்பதா? இல்லை, அதற்கும் முற்பட்டு முற்பட்ட ஆண்டுகளா? எது ஆரம்பம், எதிலிருந்து என்று புரியாத கடந்தகாலம் கடந்த காலத்திற்குள் அமுங்கிக் கொண்டிருக்கிறதா? அல்லது எதிர்காலத்தின் ஆரம்பமாகிக் கொண்டிருக்கிறதா என்று புதிரான நிகழ்காலம். அதேபோல, இன்னும் எதுவரை என்று எல்லை நிர்ணயம் புயாத எதிர்காலம்! - இப்படி மூன்று விதமாய் நீண்டு விரிந்து கிடக்கும் ஒரு பொய்க்காடு, ஒரு மிகப்பெரிய வனம் - காலமாம் வனம்!
காலத்தை இப்படி ஒரு வனம் என்ற முதல் வார்த்தையிலேயே, புதுமையான வார்த்தைப் பிரயோகம் அர்த்தச் செறிவாய் களைகட்டி விடுகிறது. அந்தக் காட்டில், அண்ட சராசரங்கள் அத்தனையும் ஒன்றேயாய் இருக்கும் அண்டப் பேரண்ட பிரம்மாண்ட மரம். அந்த மரம் - அந்த அண்ட கோலமாம் மரம்; அந்த மரத்திற்குள் - அந்தப் பொய் மரத்தின் மீது - அந்த மரத்தைச் சுற்றிச் சுற்றி ரீங்காரம் செய்தபடியே இருக்கிறது ஒரே ஒரு வண்டு.
அன்பர்களின் மந்திரம் போல் ரீங்கரித்து உலவிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு வண்டு. அந்த ரீங்காரம் - அதன் மூச்சு - அந்த ரீங்கார மூச்சின் லயம் - அந்த லயத்தின் ஒலி கேட்கிறது "காளி-சக்தி' என்று.
அந்த வண்டு அசைந்துகொண்டே இருக்கிறது, உலவிக்கொண்டே இருக்கிறது. இப்போது, ஐன்ஸ்டீன், சித்தர்களின் பிரபஞ்ச ரகசியத்திற்குள் - பிரபஞ்சங்களின் கோட்பாடுகளுக்குள் சென்றுவிட்டதாக இருக்கிறது. இப்படி ஒரு புதுமையான பின்னணியில், தெளிவான மேடையில், கணீரென்று, நம்மைச் சுண்டியிழுப்பதாய் ஆரம்பமாகிறது பாரதியின், "காளிசக்தி' கவிதை நர்த்தனம். கானகத்து வண்டாகத் தன்னைக் கண்டுணர்ந்தவன், காளிசக்தியின் தரிசனத்தை அடுத்தடுத்த வரிகளில் தொடர்ந்துகொண்டே போகும்போது நாமும் அந்தத் தரிசனத்தைப் பெறுகிறோம்.

காலமாம் வனத்தில், அண்ட கோலமா மரத்தின் மீது,
காளிசக்தி என்ற பெயர் கொண்டு - ரீங்
காரமிட்டுலவும் ஒரு வண்டு - தழல்
காலும், விழி நீல வண்ண மூலஅத்துவாக்கள்
கால்கள் ஆறுடையது எனக் கண்டு- மறை
காணும் முனிவோர் உரைப்பார் பண்டு. 
மேலுமாகி, கீழுமாகி, வேறுள திசையுமாகி,
விண்ணும் மண்ணும் ஆன சக்திவெள்ளம் - இந்த
விந்தையெல்லாம், ஆங்கது செய் கள்ளம் - பழ
வேதமாய், அதன் முன்னுள்ள நாதமாய், விளங்குமிந்த,
வீர சக்தி வெள்ளம் வீழும் பள்ளம் - ஆக
வேண்டும், நித்தம் என்றன் ஏழை உள்ளம் 

அன்புவடிவாகி நிற்பள், துன்பெலாம் அவள் இழைப்பள்,
ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை - இதை
ஆய்ந்து, உணர்ந்தவர்க்கு உண்டு உய்கை - அவள்
ஆதியாய், அநாதியாய், அகண்ட அறிவாவள், உன்றன்,
அறிவும் அவள் மேனியிலோர் சைகை - அவள்
ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை. 
இன்ப வடிவாகி நிற்பள், துன்பெலாம் அவள் இழைப்பள்,
இஃதெலாம் அவள் புரியும் மாயை - அவள் 
ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை - எனில்
எண்ணியே, ஓம்சக்தி எனும் புண்ணிய முனிவர் நித்தம்
எய்துவர் மெய்ஞானம் எனும் தீயை -எரித்
தெற்றுவார் இந் நான் எனும் பொய்ப் பேயை 

ஆதியாம் சிவனும், அவன் சோதியான சக்தியும் தான்
அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் - ஒன்றே
ஆகினால், உலகனைத்தும் சாகும் - அவை
அன்றியோர் பொருளுமில்லை, அன்றி ஒன்றுமில்லை, இதை,
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் - இந்த
அறிவுதான் பரம ஞானம் ஆகும் 
நீதியாம் அரசு செய்வர், நிதிகள் பல கோடி துய்ப்பர்.
நீண்டகாலம் வா ழ்வர் தரை மீது - எந்த
நெறியும் எய்துவர் நினைத்த போது - அந்த
நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெரும் காளி பதம்,
நீழல் அடைந்தார்க்கு இல்லையோர் தீது - என்று
நேர்மை வேதம் சொல்லும் வழி ஈது !

ஆரம்பத்தில் அந்தக் காட்டுக்குள் வந்த நம்மைக் கையைப் பிடித்து, அழைத்துச் சென்று, ஒவ்வொன்றாக, ஒன்றன் பின் ஒன்றாக நமக்கு எடுத்துக்காட்டிச் சொல்லியபடியே அழைத்துச் சென்று, முத்தாய்ப்பாய், மொத்தமாய் தான் அனுபவித்த அத்தனையும் நம்மையும் அனுபவித்து உணரச் செய்து, அந்தக் கடைசி சொற்களை நர்த்தனமாய் குதித்துக் குதித்துச் சொல்லியபடி நிறுத்துகின்றார் பாரதி. மனம், வாக்கு, செயல் என்று முழு ஐக்கியமாய் பிரமித்து லயிப்பதாய், சொல்லுக்கு அடங்காத ஒரு மனோபாவத்தில் நம்மையும் நிறுத்துகின்றார் பாரதி. வார்த்தைகளின் நர்த்தனத்திற்கு அர்த்தங்களே ஜதி.
அங்கிங்கெனாதபடி, எங்கும் நீக்கமற நிறைந்ததாய், தன் வார்த்தைகளை - அனுபவச் செறிவை - அதன் ஆனந்தத்தை "நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பதம்' என்று மிக வேகமாய், அந்த வேகத்தில் அடி பிறழாத துல்லியமாய், சுருதி பேதமில்லாத நாதமாய், நாட்டியத்தினை முடித்த நிலையில், ஆசுவாசப்படுத்திக் கொள்கிற பாங்கில் பாரதி இந்தப் பாட்டின் முடிவிற்குப் பிறகு, ஒரு பெரும் பேரானந்த விஸ்வரூபமாய் நின்றுகொண்டு, நம்மையே அருள்மயமாய், பார்ப்பது போலத் தோன்றுகிறது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com