மருந்தில்லா மருந்து

எங்கே கிடைக்கும் நல்ல மருந்து?' என்று தேடி அலையும்படி எங்கும் நோய் பரவி விளங்குகிறது. எப்பிணியும் தீர்க்கும் மாமருந்தான இறைவன் சிவபெருமானுக்கே நோய் வருமா?
மருந்தில்லா மருந்து

எங்கே கிடைக்கும் நல்ல மருந்து?' என்று தேடி அலையும்படி எங்கும் நோய் பரவி விளங்குகிறது. எப்பிணியும் தீர்க்கும் மாமருந்தான இறைவன் சிவபெருமானுக்கே நோய் வருமா? நம் நோயைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்று கோயிலுக்குச் சென்றால், இறைவனின் குடும்பமே நோயில் வாடுகிறது என்று நகைச்சுவையாகப் பாடியிருக்கிறார் காளமேகப் புலவர்.
புள்ளிருக்கு வேளூர் எனப்படும் திருத்தலத்தில் உறையும் வைத்தீஸ்வரரைத் தரிசித்து நிந்தாஸ்துதியாகப் பாடிய பாடல் இது. 

"வாதக்கா லாந்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவாம்
போதப் பெருவயிறாம் பிள்ளைதனக் - கோதக்கேள்
வந்தவினை தீர்க்க வகையறியார் வேளூரர்
எந்தவினை தீர்ப்பா ரிவர்' (த.பா.109) 

பேரிறைவராம் நடராஜப் பெருமானுக்கு வாதமாம், காற்றே திருவடியாம், அல்லது நடனத்தால் வளைந்த காலாம்; மைத்துனராகிய (திருமால்) காக்கும் கடவுளுக்கு நீரிழிவு (நீராகிய கடலிலே படுத்திருப்பது தொழிலாம்) நோயாம். சிவபெருமானின் புதல்வருக்கோ (விநாயகர்) விகாரமான பருத்த வயிறாம். இங்ஙனம் தம் குடும்பத்துக்கு வந்த நோய்களையே 
தீர்க்க வழி தெரியாத புள்ளிருக்கு வேளூரரான (வைத்தீஸ்வரர்) இவர், வேறு எந்த வகையாகிய வினையைத் தீர்க்கப் போகிறார்? என்கிறார் நகைச்சுவையாக. 
(குறிப்பு: "வாத பூதத்திற்கு அதிதேவதை மகேசுவரன். நடனத்திற்காகக் கால் வளைந்திருப்பது பற்றி வாதக்கால் என்று கூறினார் என்பது ஒரு பொருள்' என்பது கா.சு.பிள்ளையின் உரைக்குறிப்பு. 
"பிறவா யாக்கைப் பெரியோன்', "இமையா நாட்டத்து இறைவன்' எனப் போற்றப்படும் நடராசரான தில்லை அம்பலவாணர்க்கு - வைத்தீஸ்வரர்க்கு மட்டுமல்ல, அவர் குடும்பத்துக்கே மருத்துவம் பார்க்க வகையில்லை என்று பக்தியினாலே கேலி செய்து, புகழாப் புகழ்ச்சியாகப் பாடியுள்ளார். 
வைத்தீஸ்வரன் கோயில் என்னும் ஊர் சீர்காழிக்கு அருகில் உள்ளது. இவ்வூர் புள்ளிருக்கு வேளூர், வினைதீர்த்தான் கோயில் எனவும் அழைக்கப்பெறும். எவ்வகைப் பிணியும் தீவினையும் தீர்க்கும் மருத்துவரும் இறைவனே! மருந்தும் இறைவனே! என்பதை இப்பாடல் மூலம் உணர்த்தியுள்ளார். 
இதனையே, "நல்ல மருந்தொன்று இருக்குது' என்று வடலூர் வள்ளலார் வழிகாட்டுகிறார். தீராத நோய் வந்தால் தீர்க்கும் மாமருந்து வேண்டும்; இயல்பான நோய் நொடி என்றால் மருத்துவரின் மருந்து போதும்; பாட்டியின் கை வைத்தியமும் போதும். ஆனால், எந்த மருந்தும் தேவையில்லை என்னும் படி எந்த நோயும் வராமல் இருந்தால் ... ! அது எப்படி முடியும்? நோயே வராது; மருந்தே வேண்டாம் என்கிறார் ஒருவர். எப்படி? முன்பு சாப்பிட்டது செரித்த பின்னர்தான் மீண்டும் சாப்பிடுவேன் என்று சொல்பவர்க்கு நோய் இல்லை; அவர் உடம்புக்கு மருந்தே தேவையில்லை என்கிறார் திருவள்ளுவர்.

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com