விருந்தாகும் நறுந்தொகை

கி.பி. 11, 12-ஆம் நூற்றாண்டில் கொற்கையிலிருந்து ஆண்ட அதிவீரராம பாண்டியர் தமிழிலும் வடமொழியிலும் புலமைபெற்று விளங்கியவர்.
விருந்தாகும் நறுந்தொகை

கி.பி. 11, 12-ஆம் நூற்றாண்டில் கொற்கையிலிருந்து ஆண்ட அதிவீரராம பாண்டியர் தமிழிலும் வடமொழியிலும் புலமைபெற்று விளங்கியவர். நைடதம், கூர்மபுராணம், இலிங்க புராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள், நறுந்தொகை முதலிய அருந்தமிழ் நூல்களை இயற்றியவர். "நல்ல கருத்துகளின் தொகுப்பு' என்ற பொருள்படும் "நறுந்தொகை' குழந்தைகளும் எளிதில் படிப்பதற்கேற்ப, சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது. "வெற்றி வேற்கை' என்று நூல் தொடங்குவதால் (நறுந்தொகை படிப்பதால் வரும் பயன்) "வெற்றிவேற்கை' என்ற பெயரும் இந்நூலுக்கு உண்டு.
""எழுத்தறிவித்தவன் இறைவனாகும்'' என்பது போன்ற ஓரடியில் அமைந்த பாடல்கள் பல. ஈரடி முதல் ஆறடிகள் கொண்ட பாடல்கள் பல. மொத்தம் 82 பாடல்களும் எண்ணங்களைப் பண்படுத்துபவை. மேலும், புறநானூறு 
முதலான சங்கத் தமிழ் நூல் கருத்துகளையும் எதிரொலிக்கின்றன.
""செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்'' (3) முதலாக வேதியர்க்கு, மன்னர்க்கு, உழவர்க்கு, பெண்டிர்க்கு எது எது அழகு தரும் என்பதனை எடுத்துரைக்கிறார்.
""அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்'' (14) என்ற வரி
""ஆன்று அவிந்தடங்கிய சான்றோர் பலர் யான் வாழும் ஊரே'' என்ற புறநானூற்றுப் பாடலை நினைவுபடுத்துகிறது.
ஆலம்பழத்தின் ஒரு விதை, மீனின் மிகச்சிறிய சினை முட்டையைக் காட்டிலும் நுண்ணியது என்றாலும், அது யானை முதலாம் நால்வகைப் படைகளும் தங்குவதற்கு ஏற்ற நிழலைத் தரும். இக்கருத்தமைந்த பாடல், மிகச் சிறியவராயினும் வளர்ந்து நாட்டிற்குப் பெரும் பயனைத் தரமுடியும் என்பதை விளக்குகிறது.
""பெருமையும் சிறுமையும் தான்தர வருமே'' (30) என்பது அவர் பாடல். இப்பாடல், "பெருமைக்கும் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்'' என்ற குறள் கருத்தை நினைவூட்டுகிறது. கல்வியின் சிறப்பை, ""பிச்சை புகினும் கற்கை நன்றே'' (35) என்கிறார்.

""நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன்
கற்றிலன் ஆயின் கீழிருப் பவனே'' (37) என்ற வரிகள்,

""வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பாலொருவன் கற்பின்
மேற்பாலொருவனும் அவன்கட்படுமே'' 

என்ற புறநானூற்றுப் பாடலின் அடியொற்றி அமைந்துள்ளது. மொத்தத்தில் நறுந்தொகைப் பாடல்கள் அத்தனையும் செவிக்கும் சிந்தைக்கும் விருந்தாகும். அறிவார்ந்த நன்மக்களை உருவாக்க இத்தகைய நீதிநெறி நூல்களை சிறுவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது அவசியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com