இந்த வார கலாரசிகன்

பத்தகத்தை நேசிக்கும் அத்துணை பேருக்கும் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பிரச்னை தங்களது சேகரிப்பில் உள்ள புத்தகங்களை எப்படிப் பாதுகாப்பது என்பது.
இந்த வார கலாரசிகன்

பத்தகத்தை நேசிக்கும் அத்துணை பேருக்கும் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பிரச்னை தங்களது சேகரிப்பில் உள்ள புத்தகங்களை எப்படிப் பாதுகாப்பது என்பது.
அதனால்தான் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். என் தந்தையின் பெயரில் வருங்காலத்தில் ஒரு நூலகத்தை ஏற்படுத்தி அதில் புத்தகங்களைப் பாதுகாப்பது, மற்றவர்களுக்கும் பயன்படும்படி செய்வது என்பதுதான் அந்த முடிவு. 
கோவை கம்பன் கழகத்தின் செயலாளர் பெரியவர் நா. நஞ்சுண்டன் "சில அரிய புத்தகங்களை உங்களுக்காக எடுத்து வைத்திருக்கிறேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்' என்று தொலைபேசியில் 
தெரிவித்தார். கடந்த முறை கோவை சென்றபோது அவரை சந்தித்தேன்.
88 வயதிலும் சற்றும் குறையாத இலக்கிய தாகத்துடன் இன்னும் இயங்கிவரும் ஐயா நா.நஞ்சுண்டனுடன் அளவளாவிக் கொண்டிருப்பதே கூட ஒரு மிகப்பெரிய அனுபவம். பேராசிரியர் அ. சீனிவாசராகவன், "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் ஆகியோருடனான அனுபவம் குறித்து நஞ்சுண்டன் ஐயா தெரிவித்த பல சுவாரஸ்யமான தகவல்களை எனது மனக்கணினியில் பதிவு செய்து வைத்துக் கொண்டேன்.
அவர் எனக்காக எடுத்து வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்தபோது பொக்கிஷக் குவியலுக்குள் என்னைத் தள்ளிவிட்டாற் போன்ற பேருவகை. மறுபதிப்புகள் கண்டிருந்தாலும் கூட, 1930-களில் திருவல்லிக்கேணி பாரதி பிரசுராலயம் வெளியிட்ட பாரதியாரின் புத்தகங்கள் ஐயா நஞ்சுண்டனால் பைண்டிங் செய்யப்பட்டு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்தபோது ஆனந்தக் கண்ணீர் வராத குறை.
"ஸ்ரீபாரதியார் 1910-லிருந்து 1920 வரை தமிழ் பத்திரிகைகளில், பெரும்பாலும் சுதேசமித்திரனில், வெளியிட்டுவந்த கட்டுரைகளைச் சேமித்து, முறையே தத்துவம், மாதர், கலைகள், சமூகம் என்ற நான்கு தொகுதிகளாகப் பிரித்து வெளியிட முன்வந்திருக்கிறோம். பாரதியாரே காப்பாற்றி வைத்திருந்த செல்லரித்த பத்திரிகைத் துண்டுகளிலிருந்தும், கைப்பிரதிகளிலிருந்தும் பெயர்த்து எழுதி, ஒழுங்கிடவேண்டி இருந்ததாலும், பதிப்பிப்பதற்கு வேண்டிய சாதனக் குறைவினாலும் இதுகாறும் இவை வெளிவராது தடைப்பட்டன' என்று பதிப்புரை 
கூறுகிறது.
முன்பு கல்கி இதழில் வெளிவந்த பேராசிரியர் அ.சீனிவாசராகவன் எழுதிய "இலக்கிய மலர்கள்' என்கிற கட்டுரைகள் புத்தக வடிவம் பெற்றிருப்பது எனக்குத் தெரியாது. இந்தப் புத்தகமும் நஞ்சுண்டன் ஐயா எனக்காக எடுத்து வைத்திருந்த புத்தகக் கட்டில் இருந்ததைப் பார்த்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கம்பன் குறித்து வெளிவந்த பல்வேறு புத்தகங்கள் அந்தக் கட்டில் இருந்ததைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
என் மீது இந்த அளவுக்கு அன்பும் பாசமும் நம்பிக்கையும் வைத்து, தான் 60, 70 ஆண்டுகளாகத் தேனீ சேகரிப்பதுபோல, பார்த்துப் பார்த்துச் சேகரித்து, படித்துப் படித்து மகிழ்ந்த புத்தகங்களையெல்லாம் என்னிடம் நஞ்சுண்டன் ஐயா ஒப்படைத்ததை எனது பிறவிப்பயன் என்று கூறுவதல்லால் வேறு என்னவென்று சொல்வது?

தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் சிலம்பின் குரல் ஒலிக்கிறது என்றால் அதற்கு "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யும், சிலம்பொலி செல்லப்பனாரும்தான் காரணம் என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது. நம்மிடையே வாழும் தலைசிறந்த தமிழறிஞரான சிலம்பொலி செல்லப்பனாரின் அன்புக்குப் பாத்திரமானவன் என்பதை என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
தமிழகத்தில் நடைபெற்ற மூன்று உலகத் தமிழ் மாநாடுகளிலும் மாநாட்டு மலர்களை மிகச்சிறப்பாகத் தயாரித்த பெருமைக்குரியவர் சிலம்பொலி செல்லப்பனார். அதுமட்டுமல்லாமல், இவர் சிலப்பதிகார அறக்கட்டளை என்கிற அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு இளங்கோ விருது வழங்கிப் பெருமைப்படுத்துகிறார். எங்கெல்லாம் தமிழ் குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் தவறாமல் முதல் வரிசையில் சிலம்பொலி செல்லப்பனார் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி அன்று நடந்த சிலம்பொலி செல்லப்பனாரின் 90ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. முன்பு, சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இவருக்கு 85-ஆவது பிறந்த நாள் நிறைவையொட்டி சிலப்பதிகாரப் பெருவிழா கொண்டாடப்பட்டது.
சிலப்பதிகாரத்தின் சிறப்பு, சிலம்பொலி செல்லப்பனாரின் தமிழ்த்தொண்டு அணிந்துரைகள், தொடர் சொற்பொழிவுகள் உள்ளிட்ட அவரது சாதனைகள், அவரது எளிமை, நேர்மை, நிர்வாகத்திறன், நினைவாற்றல், ஓய்வறியா உழைப்பு, பண்பு
நலன்கள் போன்றவை குறித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழகத்தின் தலைசிறந்த தமிழ்ச் சான்றோர் அந்த விழாவில் உரையாற்றினார்கள். அவை கருத்துக் கருவூலங்களாகவும், இனிய இலக்கிய விருந்தாகவும் அமைந்திருந்ததாகப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அலுவலகப் பணிச்சுமை காரணமாக அந்த விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை; உரைகளைக் கேட்க முடியவில்லை என்கிற குறை எனக்கு இருந்து வந்தது. அந்தக் குறையைப் போக்கும்வண்ணம் பெருமைமிகு சிலம்பொலி செல்லப்பனாரின் திறமைமிகு தவப்புதல்வி முனைவர் மணிமேகலை புஷ்பராஜ், சிலப்பதிகாரப் பெருவிழாவில் சான்றோர்கள் ஆற்றிய உரைகளை அப்படியே நூல் வடிவமாக்கித் தந்திருக்கிறார். சிலம்பொலி செல்லப்பனாரின் சிலப்பதிகார அறக்கட்டளையின் தொடக்கம் முதல் அந்த விழாவின் அத்தனை நிகழ்வுகளும், உரைகளும், புகைப்படங்களும் "சித்திரச் சிலம்பின் சிதறிய பரல்கள்' என்கிற பெயரில் முனைவர் மணிமேகலை புஷ்பராஜாவால் தொகுக்கப்பட்டிருக்கிறது.
விழாவில் கலந்துகொள்ள முடியாத எனது குறையைப் போக்கிய சகோதரி முனைவர் மணிமேகலை புஷ்பராஜுக்கு நன்றி.

கோவை விஜயா பதிப்பகத்துக்குச் சென்றிருந்தபோது அதன் அதிபர் வேலாயுதம், கவிஞர் மணிசண்முகம் எழுதிய "வாரத்தின் எட்டாவது நாள்' என்கிற கவிதைப் புத்தகத்தைப் படித்துப் பார்க்கச் சொன்னார். "அசாதாரண வாசகர்களுக்கான சாதாரண கவிஞனின் கவிதைகள்' என்று கூறிக்கொள்ளும் கவிஞர் மணிசண்முகத்தின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. "அசாதாரண வாசகர்களுக்கான, சாதாரண கவிஞனின் அசாதாரண கவிதைகள்' என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். கவிஞரின் பார்வையும் பாடுபொருளும் வித்தியாசமானவை. எடுத்துக்காட்டுக்கு ஒரு கவிதை.

அற்பப் பொருளைக்கூட
சொற்ப விலைக்கு வாங்க முடியாமல்
போக வைப்பதுதான்
பொருளாதார வளர்ச்சி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com